“முருகனும் சுப்பிரமணியரும் ஒன்றா வேறுவேறா” என்ற தலைப்பில் பிரபல சொற்பொழிவாளர் சுகி சிவம் சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களைத் தெரிவித்த வீடியோ சில நாட்கள் முன்பு வெளியானது.
அதற்கு அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பதிவில் கீழ்க்காணும் சிறப்பான எதிர்வினையை எழுதியிருந்தார்.
சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது.
திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம்.
‘சாமி உன்னுது பூசை என்னுது’ என்று கூட்டணி வைத்தார்கள் என்று வேறு கொச்சைப்படுத்துகிறார் இந்து சமயத்தை. வேத சமயத்திலும் சரி அதன் பன்மை வளர்ச்சியிலும் சரி பூசகர் முறைகள் வேற்றுமை உடையவை. மிக அண்மை காலங்கள் வரை விலங்கு பலியிடுதல் நம் பெரும் கோவில்களில் இருந்ததும் அதனை அருட்பிரகாச வள்ளலார் முதல் திருமுருக கிருபானந்த வாரியார் வரை எதிர்த்து பல கோவில்களில் இல்லாமல் ஆக்கியதும் வரலாறு. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இந்த பன்மை சிறப்பை கொண்டாடுகிறார்.
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்;
ஷடாக்ஷர மந்திரத்தை சொல்லி வழிபடுகின்றனர் அந்தணர். அவர்கள் வெளியிலிருந்து வந்தவர் என்றோ அன்னியர் என்றோ அல்லது வடக்கத்தியர் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக ‘தொல்குடி’ என காட்டப்படுகின்றனர். இந்த வழிபாட்டை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிற அதே முருகன் குறமகள் அளிக்கும் பலியையும் ஏற்றுக்கொள்கிறார். எப்படிப்பட்ட வழிபாடு?
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய துரவெள் அரிசி
சில்பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇச்,
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுத்தண் மாலை
துணையுற அறுத்துத் துரங்க நாற்றி
நளிமலைச் சிலம் பின் நன்னகர் வாழ்த்தி,
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி
இங்கு எங்கும் ஒரு முறை சிறந்தது மறுமுறை தாழ்ந்தது என நக்கீரர் கூறவில்லை. ஒன்று தமிழருடையது மற்றது அன்னியருடையது என அவர் சொல்லவில்லை. வேத வழிபாட்டிலும் ஊன் பலி உண்டு.வேத சமுதாயத்தில் ஆவேச வழிபாடுகள் – induced altered states of consciousness- உண்டு. வாக் சூக்தத்தில் தேவி ஆவேசிப்பதை கூறுகிறாள். ஆனால் வேதத்திலும் சரி சங்க இலக்கியத்திலும் சரி இவ்விரு முறைகளும் ஒன்று இழுக்காக ஒன்று மேலாக கருதப்படவில்லை. அவை இனரீதியாக அடையாளப்படுத்தப்படவும் இல்லை. இவை இரண்டுமே முருகனுக்கு விருப்பமானவைதாம். பின்னாட்களில் உயிர்பலி கொடுத்தலை பௌத்தமும் சமணமும் கீழாக கருதிய போது கண்ணப்பர் மூலம் வழிபாட்டு முறைகளல்ல சிரத்தையும் பக்தியுமே முக்கியம் என காட்டியது இந்து சமயம்.
இங்கு முக்கியமாக நக்கீரர் கூறுவதை கவனிக்க வேண்டும்:
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே.
விளக்கம் [கிவாஜ]: “தன்னை விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பியபடியே அடைந்து வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமாகும்.”
இதுவே பாரதிய ஞானத்தின் உச்சம். ஏறக்குறைய அனைத்து சமய சாத்திரங்களிலும் பிரஸ்தான த்ரயமோ பக்தி பனுவல்களோ பழந்தமிழ் இலக்கியமோ மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது இதுவே:
‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’ என்பது வேதம்.
‘அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் எவ்வயி னோயும் நீயே’ என்பது பரிபாடல்.
‘யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்ச்சிதுமிச்சதி/ தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்’ 7:21
’எவர் எவர் என்னை எந்தெந்த மூர்த்தி வடிவத்தில் சிரத்தையுடன் வழிபட்டாலும் அவரவர் நிலைப்பாட்டை அவ்வடிவத்திலேயே உறுதிகொண்டதாக்குகிறேன்.’ என்பது பகவத் கீதை.
‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது அருணந்தி சிவாச்சாரியார் வாக்கு.
வேதம் கூறிய பெரும் சத்தியமான ஒருமையின் பன்மை பன்மையின் ஒருமை என்பதை சங்க இலக்கியங்களும் நம் அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்களே, ஒரு பேச்சுக்கு ஆரிய திராவிட இனவாத கோட்பாட்டை ஒத்துக் கொண்டால் அவர்கள் என்ன ஒப்பந்தம் வைத்து கொண்டிருப்பார்கள்? சுகி.சிவத்தின் பாணியில் சொன்னால் ‘மொழி உன்னுது தத்துவம் என்னுது எப்படி எப்படி மொழி உன்னுது தத்துவம் என்னுது’ என்று சொல்லியிருப்பார்களோ? இது எப்பேர்பட்ட அபத்தம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் வரும். வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் அரவணைத்து பன்மையையும் மாற்றத்தையும் அரவணைத்து செல்லும் தர்மம் நம் சனாதன தர்மம். முருகன் என்கிற சுப்ரமணியன் அதில் ஒரு பெரும் ஞான தரிசனம், பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பேருரு.
இன்னும் சொன்னால் முருகப் பெருமானுக்கு ஸ்கந்தன் என்று பெயர். கந்தன் என்கிற மிக மிக சகஜமான தமிழ் பெயரின் வேத வடிவம் ஸ்கந்தன். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன், அருமையான கட்டுரையான ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ என்பதில் கூறிய தரவுகள் சில இங்கு முக்கியமானவை: “சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த ‘கந்துடைப் பொதியில் ‘ குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.”
கந்து என்பதும் ’ஸ்கந்த’ ’ஸ்கம்ப’ என்கிற பிரபஞ்ச பெருந்தூண் வடிவில் நிற்கும் தெய்வத்துடன் தொடர்புடையது. ’கம்பு’ என்பதும் உறவுடைய சொல்லே. அதர்வ வேதத்தில் வரும் ஸ்கம்ப சூக்தம் ஸ்கம்பமாக வெளிப்படும் பிரம்மத்துக்கு வேத மந்திரங்கள் அனைத்துமே பாகங்கள் என கூறுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு பின்னால் இதை அருணகிரிநாத சுவாமிகள் ‘வேத மந்த்ர சொரூபா நமோநம’ என்கிறார்.
ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார்.
இந்த பிளவுப்பார்வையை – நக்கீரர் சொல்லவில்லை. பரிபாடல் சொல்லவில்லை. கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்லவில்லை. அருணகிரிநாத சுவாமிகள் சொல்லவில்லை. அருட்பிரகாச வள்ளலார் சொல்லவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லவில்லை. இவர்களுக்கு இல்லாத ஆராய்ச்சி பார்வையும் அருட்பார்வையும் கால்டுவெல் சந்ததியாருக்கு ஏற்பட்டுவிடவும் இல்லை.
தன் வாழ்க்கைக்கு இந்து மத கோவில்களில் இந்து சமய கூட்டங்களில் ஆன்மிக பேச்சாளராக வாழ்ந்துவரும் ஒருவர், ஆன்மிக பெரியார்களின் அருட்பார்வையையும் ஆழமான ஆராய்ச்சிப் பார்வையையும் விடுத்து கால்டுவெல் பார்வையுடனும் சீமான் பார்வையுடனும் நம் தமிழ் கடவுளை அணுகுவது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது அன்றி வேறென்ன?
வேதனை. வெட்கம்.
********
இப்பதிவை ஜடாயு தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டபோது மறுமொழிகளில் நிகழ்ந்த உரையாடல்:
மரபின் மைந்தன் முத்தையா: சுப்ரமண்ய புஜங்கத்தை மேற்கோள் காட்டி மஹா பெரியவர் சொல்லியிருக்கிற பகுதி இது. சுப்ரமணியன் வைதீகக் கடவுள் என்பதாக இதிலும் காணப்படுகிறதே.
அரவிந்தன் நீலகண்டன்: தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள பகுதி இதற்கும் முன்பாகவே சுகி.சி ஆதரவாளர்களிடமிருந்து வரும் என எதிர்பார்த்தேன். வந்திருக்கிறது. தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகள் இங்கு சொல்லியிருப்பதை கொஞ்சம் கவனியுங்கள். ’‘ப்ரஹ்மம்’ என்றால் ஸ்த்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது.’ – ஆனால் சுப்ரமணியர் என்கிற பெயருக்கு அவர் கொடுக்கிற நேரடி பொருளை பாருங்கள்: ‘வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமார்த்த ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி…’ – இதுதான் சுப்ரமணியர் என்பதற்கான நேரடி பொருள்- ‘… வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்’ ஒன்று முதன்மை காரணம், மற்றொன்று அதிலிருந்து பெறப்படும் காரணம். ஆனால் சுகி.சி கூறுவது இதுவன்று. சுப்ரமணியர் பிராம்மணர்களின் அல்லது பிராம்மணியத்தின் தெய்வமாக இருப்பதால் அவர் எப்படி குறமகளை மணம் செய்யமுடியும் என கேட்கிறார். தவத்திரு காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் வைதிகம் வேறு. சுகி.சிவம் பேசும் பிராம்மணியம் வேறு. பின்னது காலனிய கருத்தாக்கம். அதன் படி பிராம்மணிய கடவுள் குறமகளை மணம் செய்ய முடியாது. ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளின் வைதீக தெய்வம் குறமகளை மணமுடிக்க முடியும். இந்த அடிப்படையான திருகல் வேலையை சுகி.சி செய்வதுதான் அவருடைய வக்கிரத்தின் அல்லது அறியாமையின் அல்லது இரண்டினுடையவும் வெளிப்பாடு.
ம.மை.முத்தையா: வைதிகம் – பிராமணீயம் இரண்டிற்குமான வேறுபாடு நுட்பமான இடம் தான் . நன்றி. பிரஹ்மண்யம் – பிராமணீயம் இரு சொற்களும் வேறுபடும் இடத்தை விளக்கினால் நலம்.
ஜடாயு: பிராமணீயம் – Brahminism என்று நீங்கள் குறிப்பிடுவது 20ம் நூற். நவீன கருத்தாக்கம் – மார்க்சியம், பெண்ணியம் போல. பிராமணர்களின் சாதி ரீதியான கருத்தியல் என்ற பொருளில் அது கட்டமைக்கப் பட்டது. அதற்கும் இந்திய மரபுக்கும் தொடர்பில்லை. மரபு சார்ந்து வைதிகம், பிரஹ்மண்யம் இரண்டும் ஒன்றே. பிரம்மத்தை / வேதத்தைக் கொண்டிருத்தல், சார்ந்திருத்தல் என்கிற பிராம்மண இயல்பு. தமிழில் அதற்கான நேர்ச்சொல் அந்தண்மை.
*******
இதைத் தொடர்ந்து சுகி. சிவம் மேலும் அளித்த விளக்கங்களுக்கு அ.நீ எதிர்வினை:
விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று சுகி.சிவம் மீண்டும் உளறியுடதுடன் விஷமும் கக்கியிருக்கிறார். அவரை தனிப்பட்ட தாக்குதல் செய்துவிட்டோமாம். அவருடன் பழகிய பலரும் அவர் சொற்பொழிவு விஷயத்தில் பணத்துக்காக செய்த அழிச்சாட்டியங்களை பதிவு செய்திருக்கிறார்கள். எனவே அழுத்தியே சொல்லலாம் அவர் செய்வது அடிப்படையில் பேச்சு வியாபாரமேதான். அது தவறொன்றுமில்லை. அவருடைய அழிச்சாட்டியங்கள் கூட அவரது உரிமைதான். அது அவருக்கும் அவரை விலை கொடுத்து அழைப்பவருக்கும் இடையிலான விஷயம். அதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது. ஆனால் பேச்சு வியாபாரம் பேச்சுவியாபாரமேதான்.
ஊகித்தது போல உடனடியாக தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளை சரண்டைந்திருக்கிறார் சுகி.சி. எவரோ சுகி.சியின் வீடியோவை முன்னும் பின்னும் வெட்டி அவர் கண்டனம் செய்த விஷயத்தை அவர் சொன்னது போல் போட்டுவிட்டார்களாம். நிச்சயம் அவர்கள் செய்தது தவறுதான். ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகள் தெளிவாக சொன்ன விடயத்தை வெட்டி தனக்கு சாதகமாக ஒரு சிலவரிகளை மட்டும் எடுத்து, தவத்திரு காஞ்சி சுவாமிகள் சொன்னதற்கு நேர் எதிராக நிலைபாடு கொள்கிறீர்களே திருவாளர் பேச்சு வியாபாரி அவர்களே அது எவ்வளவு அசிங்கம்? எவ்வளவு மன வக்கிரம் அதற்கு வேண்டும்!
இதோ சுவாமிகள் கூறியவற்றை தருகிறேன்: “வடபுலத்தின் பல ராஜ வம்ஸங்கள் அவரை ‘ப்ரம்மணிய குமாரர்’ என்று குலதெய்வமாகக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜாக்கள் தங்களையும் ‘ப்ரம்மண்யர்’கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ‘ஸுப்ரம்மண்ய’த்தின் முதல் எழுத்தைத் தள்ளினால் ‘ப்ரம்மண்யம்’ தானே நிற்கிறது? இங்கே நம் தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் ரொம்பத் தொண்டு செய்திருக்கிற காஞ்சிப் பல்லவ ராஜாக்களும், தங்களை சிவ பக்தியில் சிறந்த ‘பரம மாஹேசுவரர்களாகவும்’ விஷ்ணு பக்தியில் சிறந்த ‘பரம பாகவதர்’களாகவும் சொல்லிக் கொள்வதோடு, ஸ்கந்த உபாஸனையை விசேஷமாகச் செய்த ‘பரம ப்ராம்மண்யர்’களாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். சாஸனங்களில் இவற்றைப் பார்க்கிறோம். … ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேதநெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களை பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம். … வைதிக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட ஸ்வாமி அவர் என்பதற்கு “ஸுப்ரம்மண்யர்” என்ற பெயரே போதும் என்று சமநிலையிலிருந்து (Unbiased) பார்த்தால் தெரியும். பிரம்மண்யத்தை – அந்தணர்கள் பற்றி ஒழுகுகிற வேத நெறியை – வளர்க்கிறவர் சுப்ரம்மண்யர் என்பது வெளிப்படை. … தொன்மை வாய்ந்த பத்துப்பாடலில் முதலாவதாக இருக்கிற நூல் அது. தமிழ்நாட்டில் குறவரினத்திலிருந்து சகல சமுதாயத்தினரும் சுப்ரம்மண்யரை எப்படி எப்படி வழிபட்டார்கள் என்பதை அது சொல்கிறது.”
இது ’தெய்வத்தின் குரல் முதல் பாகம்’. இனி ’தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம்.’:
“ஸுப்ரஹ்மண்யன் என்றால்? நல்ல ப்ரஹ்மண்யன். தேர்ந்த ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால்? ‘ப்ரஹ்மம்’ என்றால் ஸத்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது. வேதத்துக்கு ‘ப்ரஹ்ம’ என்று ஒரு பெயர். … பல இடங்களிலும் ‘ப்ரஹ்ம’ என்றால் வேதம் என்றே அர்த்தம். வேதத்தை அநுஸரிப்பது, அநுஷ்டிப்பது – அதாவது வைதிகம் என்பதுதான் ப்ரஹ்மண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்களே ப்ராஹ்மணர்கள்” என்று சொல்லி தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார்: “வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்”.
எனவே இங்கே முதன்மை (primary) பொருள் ’வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யர்’ என்பது. ப்ராஹ்மண்யர்கள் என்பது கூட, பல்லவ ராஜாக்கள் ஸ்கந்த உபாசனையை விசேடமாக செய்தமையால் தம்மை சாஸனங்களில் ’ப்ராம்மண்யர்’ என சொல்லியிருப்பதை சுவாமிகள் முதல் பாகத்தில் சுட்டியிருக்கிறார்.
பேச்சு வியாபாரி சுகி.சி முதல் காணொளியில் என்ன சொல்கிறார்? பிராம்மணர்களின் தெய்வம் எப்படி தழிழ் தெய்வமாக இருக்க முடியும் என கேட்கிறார். ஆனால் அவர் தனக்கு சாட்சி பிரமாணமாக அழைக்கும் தவத்திரு காஞ்சியடிகள் என்ன கூறுகிறார்? அவர் தமிழ் தெய்வம் என்கிறார். தமிழ் vs. வைதீகம் எனும் இரட்டையை மறுக்கிறார்.
திராவிட கழகமும் இந்து விரோதிகளும் பிராம்மணியத்துக்கு ஒரு கட்டமைப்பை செய்துள்ளனர். அந்த கட்டமைப்பின் அடிப்படையில் மட்டுமே சுப்ரமணியர் குறத்தியை மணக்க முடியாது; தமிழ் தெய்வம் ஆக முடியாது. ஆனால் ’வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யர்’ என அழைக்கப்படும் கடவுளுக்கு எப்படி அத்தகைய தடைகள் இருக்க முடியும்?
எனவே உண்மையிலேயே இந்த பேச்சு வியாபாரிக்கு தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் மரியாதை இருக்குமென்றால் (அப்படி உண்மையிலேயே மரியாதை இருந்தால் அவரை ஈவெராவுடன் ஒப்பிடுவாரா என்பது ஒரு புறமிருக்க), இப்படி சுவாமிகளின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான தன் வக்கிர உளறலுக்கு ஓட்டையடைக்க சுவாமிகளின் ஒரு சில வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவாரா?
பேச்சு வியாபாரி சுகி.சிவம் அடுத்து மேலும் சளைக்காமல் உளறுகிறார். வைதீக மரபு நெருப்பு வழிபாடாம் ஆனால் திராவிட வழிபாடு நீர் வழிபாடாம். இரண்டும் இணைந்ததால்தான் வேள்விகளில் பூர்ண கும்பம் இணைந்ததாம். இது சுருதி சுத்தமாக ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டாளர்களின் உளறல். ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் பெரிய நீர் குளங்களைக் கண்ட பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியாளர்கள், அப்பண்பாட்டை வேத பண்பாட்டிலிருந்து பிரித்துக் காட்ட விரும்பினர். எனவே வேத பண்பாட்டின் மையம் நெருப்பு சடங்குகள் (வேள்விகள்) என்றும் சிந்து சமவெளி (எனவே திராவிட) பண்பாட்டின் மையத்தில் நீர்சடங்குகள் இருந்தன என்றும், பின்னர் இந்து மதத்தில் இவை இரண்டும் இணைந்தன என்றும் கூறினர். இதெல்லாம் 1920களில்.
ஆனால் 1970களில் அகழ்வாராய்ச்சிகள் லோதல் (எஸ்.ஆர்.ராவ்), கலிபங்கன் (பி.பி.லால்) ஆகிய இடங்களில் தெளிவாக அக்னி வழிபாட்டு மேடைகளை வெளிக்கொணர்ந்தன. அதே நேரத்தில் வேதத்திலேயே வருணன் வழிபாடு உள்ளது. நதி சூக்தம் உள்ளது. நீரில் செய்யக் கூடிய சடங்குகள் வைதீக வாழ்க்கை முறையுடன் இணைந்தவை. ஆனாலும் நம் பேச்சு வியாபாரி சொல்கிறார் நெருப்புதான் வைதீகம், நீர் வழிபாடு திராவிடம், பின்னாட்களில் இந்து மதத்தில் இவை இணைந்தன.
இதன் பின்னால் இருக்கிற ஒரு பிழைப்பார்வையை இங்கே சுட்ட வேண்டும். இந்தியாவில் அகழ்வாராய்ச்சி செய்த பிரிட்டிஷாரும் சரி பிரிட்டிஷ் கல்வி கற்றவர்களும் சரி ஒரு சமுதாயத்தில் ஒரு இனமும் ஒரு குறிப்பிட்ட வழிபாடும் மட்டுமே இருக்கும் என கருதியவர்கள். ஒரே சமுதாயத்தில் வழிபாட்டு பன்மை இருக்க முடியும் என்பது அவர்களின் கருத்தியல் ஏற்க முடியாத ஒன்று. இங்கோ அடிநாதமே ‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி’ என்பதுதான். நீரின் உயிர் கொடுக்கும் பிரவாகத்திலும், நெருப்பின் இருளழித்து மேலெழும் பிழம்புகளிலும் பிரம்மத்தை உணர்ந்தவர்கள் வேத ரிஷிகள். இந்த பாரத த்ரிசனத்தை புரிய முடியாதவர்களால், நெருப்பு சடங்கு வைதீகம், நீர் சடங்கு திராவிடம் என கோடு கிழித்துவிட்டு பின்னர் இரண்டும் இணைந்தன என்றுதான் பார்க்கமுடியும். அதைத் தாண்டிக் காணும் பார்வைத் திறன் இல்லாதிருப்பது பிரச்சனையல்ல. ஆனால் தன் பார்வைக் குறைப்பாட்டை பரந்த அறிவாக நீட்டி முழக்கி பேசாமல் இருக்கலாம் வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கும் பேச்சு வியாபாரி.
படத்தில் இடப்பக்கம் இருப்பது லோத்தலில் உள்ள அக்னி வழிபாட்டு மேடையும் அதன் அருகில் குடுவையும். வலப்பக்கம் அக்னி வழிபாட்டு மேடைகள் கலிபங்கன். இரண்டுமே ஹரப்பா பண்பாட்டுக் கேந்திரங்கள்.
சுகி.சியின் பிற உளறல்களுக்கான பதில்கள் தொடரும்.