இன்று தமிழ்நாட்டில் வடமொழி, ஆரியம், சமஸ்கிருதம் என்ற மூன்றும், தமிழல்லாத—தமிழில் வந்து வழங்கும் ஒரு வேற்று மொழியைக் குறிக்கும் சொற்களாக வழங்கப் பெறுகின்றன. சமஸ்கிருதம் என்பது இந்த நாட்டின் பழங்கால மொழியாக இந்தியா முழுவதும் கொள்ளப்படுகிறது. என்றாலும் அம்மொழியும் அம்மொழிக் குரிய மக்களும் பரந்த இந்தியநாட்டு எல்லைக்கு வெளியே இருந்து உள்ளே வந்தவர்கள் என்றும், அக்காலம் இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்றும் வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர். அவர்தம் மொழிக்கு அவ்வாறு வந்த அக்காலத்தில் தமிழிலோ பிற இந்திய மொழிகளிலோ என்ன பெயர் இட்டனர் என்பது திட்டமாகக் கூற இயலவில்லை.
ஒரு நாள் என் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் வழியில் வரும்போது இம்மூன்று சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா எனக்கேட்டார். அப்போதுதான் அவை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு தோன்றிற்று, ஆய்ந்து பார்ப்பின், இம்மூன்றும் மூன்று வகையில் பொருள் தரத்தக்கன என்றும், சமஸ்கிருதம் என்ற மொழியைப் பிற இரண்டும் குறிப்பன அல்ல என்றும் எண்ணவேண்டி வரும். இக் கருத்தை மக்கள் முன் வைக்கின்றேன்; அறிஞர்கள் முடிவு கூறட்டும்.
வடசொல் என்பது தொல்காப்பியத்திலே கூறப்படுகிறது. எச்ச இயலில் சொற்களைப் பாகுபடுத்தும் ஆசிரியர் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று நால்வகைச் சொற்களைக் குறிக்கின்றார். இங்கே வட சொல்லுக்கு உரை கூற வந்தவர்கள் வடசொல் என்பது ஆரிய சொற்போலும் சொல் என்றும் (இளம் பூரணர்) ஆரியச்சொல் (நக்கினார்க்கினியர்) என்றும் காட்டுவர். யாரும் 'சமஸ்கிருதம்' என்று குறிக்கவில்லை. மற்றும், உரையாசிரியர்கள் காலத்தில் ஆரியச் சொல்லும் வட சொல்லும் ஒன்றாகக் கருதப்பட்டனவென்பது தெளிவாயினும், இளம்பூரணர் வழி, வடசொல் ஆரியச்சொல் போன்ற தமிழ்ச் சொல்லையே குறிக்கும் எனக்கொள்ளல் வேண்டும் இனி இந்த எச்ச இயல் ஐந்தாம் சூத்திரம் வடசொல். பற்றியே வருவது,
என்பது அது. அதற்கு உரையாசிரியர்கள் பலவகையில் விளக்கம் தருகின்றனர். 'வடசொற் கிளவி' என்று சொல்லப்படுவது 'ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ இரு திறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையவாகும் சொல் என்றவாறு' என்பர் இளம்பூரணர். நச்சினார்க்கினியரும் சேனாவரையரும் இதே பொருள் காட்டுவர். தெய்வச்சிலையார் வடமொழிச் (பிராகிருதம்) தொற்களையும் சேர்ப்பார். எனினும், அச்சொற்கள் வழங்கும் முறைகண்டு 'வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உறுப்பாய் வாரா' எனச் சேனாவரையரும், 'திசைச் சொல்லும் வடசொல்லும் பெரும்பாலும் பெயர்ப் பெயராயும் சிறுபான்மைத் தொழிற் பெயராயும் வருதலின்றி ஏனைய வாரா' என நச்சினார்க்கினியரும் உரை கூறுவர். அனைவரும் இதற்குக் குங்குமம், நற்குணம், காரணம், காரியம் போன்ற சொற்களைக் காட்டுவர். எனவே உரையாசிரியர்கள் காலத்தே வடசொல் என்பது ஆரியச் சொல் எனப் பெயர்பெற்றது. அதுவே பின் சமஸ்கிருதமாகக் காட்டப்பெறுவது என விளங்கும் எனினும் ‘ஆரியச் சொல் போலும் சொல்’ என்ற இளம்பூரணர் உரையையும் பிராகிருதத்தைச் சேர்த்த தெய்வச்சிலையார் உரையையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
உரையாசிரியர்கள் காலம் பிற்காலச் சோழர்காலம். அக்காலத்தில் தமிழ்நாட்டில் சமஸ்கிருத மொழிக்கு ஏற்றம் உண்டாயிற்று என வரலாறு காட்டுகின்றது. எனவே அக்காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர்கள் அவர்தம் காலத்தை ஒட்டி அவ்வாறே உரை எழுதி மேற்கோள் காட்டிச் சென்றார்கள். எனினும், சிந்திப்பின் ஒர் உண்மை புலப்படும் என்பது உறுதி.
வடமொழி என்பது தமிழ்ச்சொல்; தமிழகத்துக்கு வடக்கே உள்ள ஒரு மொழியைக் குறிக்கும் எனலாம். தமிழ்நாட்டு வடஎல்லை சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வேங்கடமாக அமைந்துள்ளதை நாமறிவோம். சங்க இலக்கியங்களிலே,
தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே (அகம். 31)
என்றும்,
குல்லைக்கண்ணி வடுகர் முனையது வல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர் மொழி பெயர் தேஎத்த ராயினும் (குறுந் 11)
என்றும் வேங்கடத்து அப்பால் வடுகர் நாடு தொடங்கிப் பல்மொழி பேசியவர் வாழ்ந்தனர் என அறிகிறோம். தெலுங்குமொழி பேசியவரையே, தமிழர், ‘வடுகர்’ என அழைத்து வந்தனர். “வடுகன் தமிழறியான் வைக்கோலைக் கசுவென்பான்’ என்ற ஒரு வேடிக்கைப் பழமொழி நாட்டில் வழங்குகின்றது. அவ்வடுகர் வேங்கடத்துக்கு அடுத்த ஆந்திர நாட்டில் வாழ்ந்தவர்களாவார்கள். தமிழ்நாட்டு வட எல்லையில் வாழ்ந்தவரை வடுகர் என்றும், மொழியை வடமொழி என்றும் தமிழர் அழைத்திருக்க வேண்டும். தொல்காப்பியர் காலத்திலேயும் வடவேங்கடம் வடக்கு எல்லையாய் இருந்தமையின் அவர் கூறும் வடமொழியும் இவ்வடுகர் பேசிய மொழியைத்தான் குறிக்கும் என்பது கொள்ளத்தக்கதாகும். தமக்கு அடுத்து அண்மையில் இருக்கும் மொழிபற்றியும் அது தமிழில் வந்து வழங்கும் வழக்குப் பற்றியும் ஒன்றும் கூறாது, எங்கோ ஆயிரம் கல்லுக்கு அப்பாலுள்ள மொழி வழங்குவதுபற்றி இலக்கணம் கூறினார் என்றால் பொருந்தாது. உரையாசிரியர்களெல்லாம் அவர் காலத்தில் சமஸ்கிருதம் தமிழில் வழங்கியதறிந்தும் காலச் சூழலுக்கு உட்பட்டும் அவ்வாறு உரை எழுதினார்கள் என்று கொள்ளுவதே பொருத்தமான தாகும். மற்றும் தமிழில் வடுக மொழியாகிய தெலுங்கு மொழிச் சொற்கள் அதிகமாகப் பயின்று வந்தமையாலும், திராவிட மொழிக் குடும்பத்துள்ளே தமிழொடு அதிகத் தொடர்பு கொண்டமையானும் வடசொல்’ என்றும் பிற சொற்களினின்றும் அதைத் தனியாகப் பிரித்துக் கூற வேண்டியதாயிற்று.
நிற்க, வடமொழி சமஸ்கிருதத்தைத்தான் குறிப்பதாயின், அது வழங்கிய நாடு மிக வடக்கே இருந்தது. அந்த ஆர்யவர்தத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் ஆயிரம் கல் தூரத்துக்குமேல் உள்ளது. இரண்டுக்கும் இடையில் தெலுங்கு போன்ற பல மொழிகள் வழக்கில் உள்ளன. அவை எல்லாம் சமஸ்கிருதத்தை எப்பெயரால் அழைத்தன? ‘வடமொழி’ என்று ஒவ்வொன்றும் அதைக் கூறியிருக்கிறதா? இல்லை என்பர் மொழி ஆராய்ச்சியாளர். எனவே தொல்காப்பியத்தில் வரும் வட மொழி சமஸ்கிருதத்தைக் குறிக்காது என்றும், தமிழ்நாட்டு வட எல்லையில் வழங்கிய பழந் தெலுங்கையே அது குறிக்கும் என்றும் கொள்வதுவே சிறந்ததாகும்.
'சமஸ்கிருதம்' என்றால் 'செய்யப் பெற்றது' அல்லது 'சொல்லப் பெற்றது' என்று பொருள் உண்டெனக் காண்கிறோம். எங்கே செய்யப் பெற்றது? எவ்வாறு சொல்லப் பெற்றது? என்பன எண்ணற்குரிய. மத்திய ஆசியாவிலிருந்து மேற்கே சென்று ஐரோப்பிய நாட்டில் தங்கிப் பின் பலவாறு பிரிந்து நின்ற பண்டைய மரபினர் தத்தமக்கு வேண்டிய மொழிகளைச் செய்து ஆக்கிக் கொண்டமை போன்று, அதே மத்திய ஆசியாவிலிருந்து ஏறக்குறைய அதே காலத்தில் தெற்கு நோக்கி வந்தவராக வரலாற்றாளர் கூறுகின்ற இப் பழைய இனத்தவர் சிந்துநதி எல்லையில் வந்தபோது புதிதாக ஆக்கிக் கொண்ட மொழியே 'சமஸ்கிருதம்’ என்ற செய்யப்பட்ட, சொல்லப்பட்ட மொழியாகக் கொள்வதில் தவறில்லை. அவரே பின், 'வடவாரியர்' எனக் குறிக்கப்பெறுவாராவார்கள்.
இனி, ஆரியம் என்ற சொல்லைக் காண்போம். சமஸ்கிருதத்திலேயே 'ஆரியம்' என்பது அம்மொழியைக் குறிக்கவில்லை என்பர் அம்மொழியில் புலமை உடைய அறிஞர்கள். தமிழிலும் ஆரியம் என்ற சொல். காலத்தால் பிந்தியே வழங்குகின்றது. வடநாட்டிலிருந்து வந்தவரை ஆரியர் என்றும், அவர் மொழியை ஆரியமொழி என்றும் பிற்காலத்தில் கொண்டனர். எனினும் தமிழில் ஆரியம்' என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உள்ளன. ஆரியன் என்ற சொல்லுக்குப் பெரியோன், ஐயன் அறிவுடையோன், ஆரிய வர்த்தவாசி, உபாத்தியாயன் எனப் பற்பல பொருள்கள் உள்ளன. ஆரியப்பாவை என்ற தமிழ்க்கூத்து நாட்டில் பண்டைநாளில் வழக்கத்தில் இருந்தது. ஆரியம் என்றால் கேழ்வரகு என்ற ஒரு பொருளும் உண்டு. ஆரிய வாசியம் என்பது ஒமத்துக்குப் பெயர். இப்படி மனிதரில் உயர்ந்தவரையும் உணவுப் பொருளில் உயர்ந்ததையும், மருந்துப் பொருளில் உயர்ந்ததையும் ‘ஆரிய’ என்ற சொல்லாலே வழங்கினர் எனக் காணலாம். ஆரியன் என்றால் மிலேச்சன் என்ற பொருளும் உண்டு என்றாலும் பெரும்பாலான பொருள்களை நோக்கினால் ஆரிய’ என்ற சொல் உயர்வைக் குறிக்கவரும் சொல்லாகவே இருப்பதை அறிகின்றோம். தமிழ் இலக்கியத்தில் வடக்கே உள்ள ஆரியரைக் குறிக்க வடவாரியர்’ என்ற சொல்லே எடுத்தாளல் காணப்படுகிறது. எனவே வடவாரியர்’ என்ற சொல் வேண்டுமாயின் ஆரிய வர்தத்தில் சமஸ்கிருதம் பேசிய மக்களைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். மற்றும் தமிழ்நாட்டில் வடமொழி பேசி, வேதத்தை வாழ வைக்கவும், அதை நிந்திப்பவரைத் தாக்கிப் பேசவுமே பிறந்தவராகத் தம்மைக் கூறிக்கொள்ளும் திருஞானசம்பந்தரை வட நாட்டவர் ஆரியர் என்றே கொள்வதில்லை. சங்கராச்சாரியார் அவரைத் திராவிட சிசு என்றே குறித்ததாகக் கூறுவர். எனவே வேதத்தைக் கொண்டுள்ள சமஸ்கிருதத்தை ஆரியமொழி"யென அவர்களே கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. திருநாவுக்கரசர் ஆரியமும் தீந்தமிழும் ஆயினான்’ என்று கூறுவதும் சமஸ்கிருதத்தை அன்று எனலாம். ஆரியமொழி என்றால் கிரந்த மொழி என்ற பொருளும் உண்டு. சமஸ்கிருத நூல்களிலே எங்கும் அம்மொழியைக் குறிக்கும் பெயர் ஆரியம் என்று காட்டப் பெறவில்லை என்பது அம்மொழியுணர்ந்த புலவர் துணிவு. எனவே தமிழில் வழங்கும் ‘ஆரியம்’ என்ற சொல் சமஸ்கிருதமல்லாத வேறு ஒன்றைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.
ஆரியம் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளும் உண்டு. எனவே அழகிய ஒன்றை ஆரியம் எனக் கொள்ளல் பொருந்தும். அரியவற்றையும் ஆரியமாகக் கண்டனர். மக்களுள் கிடைத்தற்கரியவராய் ஒழுக்க சீலராய் விரதம் முதலியன மேற்கண்டவராக உள்ளவராய் வாழ்ந்த அறிவர் ஆரியராயினர். இவர் சமஸ்கிருதம் பயின்றவரின் வேறு என்றும், அவருள் அறிவர், தாபதர் போன்ற பிரிவுகள் உள வென்றும், இலக்கணத்தால் அறிகிறோம். எனவே அரிய என்ற சொல்லில் இருந்து ஆரியம் என்ற சொல் பிறந்து, பண்பால் உயர்ந்த குணத்தால் சிறந்த உயர்ந்த பெரியோரையும், அழகையும், பிற உடலுக்கும் உயிருக்கும் நலம் தரும் பொருள்களையும் குறித்தது எனலாம். ஒருவேளை வடவாரியர் தென்னாட்டுக்கு வந்தபோது இரு சொற்களையும் இணைத்து ஒன்றாக்கி விட்டார்களோ என்று கொள்ள இடம் உண்டாகிறது. எனவே தமிழில் வழங்கும் ஆரியர், ஆரியம் என்ற சொற்கள் தமிழில் உள்ள அரிய’ என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றி உயர்ந்தவரையும் உயர்பொருளையும் குறிப்பன என்று கொள்ளல் வேண்டும். தமிழில் தொல்காப்பியர் காலமுதற் கொண்டே - ஏன் - அதற்குமுன் இருந்துங்கூட அறிவர். தாபதர் போன்ற நல் உணர்வாளர் இருந்தார்கள் என அறிகிறோம். அவர்கள் பொன்னே கொடுத்தும் புணர்வதற்கு அரியராய் இருந்ததோடு அவ்வப்போதுமக்களுக்கு அறம் உணர்த்தும் ஒழுக்க சீலராய் விளங்கினார்கள் எனவும் காண்கிறோம். அவர்கள் வாழ்வு சற்றுத் தனிப்பட்ட முறையில் அமைந்து, தனி இடத்திலிருந்து எண்ணும் பண்பாட்டில் தலைசிறந்ததாக விளங்கியிருக்கும் என்பதைத் தொல்காப்பியம் முதலிய வற்றால் அறிகின்றோம். எனவே தமிழ் நாட்டு அரியராகிய அறிவரே ஆரியர்’ எனப்பட்டார் என்பது பொருந்தும். இந்த ஆரியர் மிகப் பழங்காலந்தொட்டு, வடநாட்டு ஆரியர் சிந்துவெளிக்கு வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - தமிழ் நாட்டிலும் தமிழ வழங்கிய பரந்த இந்தியப் பெருநிலத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும்.
இனி, பின் இந்தியநாட்டுக்கு வாழ்வு வேண்டி வந்தவர்களாகிய ஒர் இனத்தாரும் தம்மை ஆரியரென்று கூறிக் கொண்டிருப்பதில் தவறில்லை. அவர்கள் எதனால் அப் பெயரிட்டு அழைத்துக்கொண்டார்கள் என்பதை இன்று நம்மால் காண இயலாது. எனினும் அவர்களைத் தமிழர்கள் பிரித்தே, வட வாரியர்’ எனவே வழங்கி வந்தார்கள், என்பதை இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இன்று இந்தியர் என்று பெயரிலே இரு நாடுகளில் ஒன்றுக்கொன்று எவ்வகையிலும் தொடர்பில்லாத இரு நாடுகளில் - வாழ்பவரை உலகம் குறிப்பதைக் காண்கின்றோம். எனினும் அமெரிக்க நாட்டை ஒட்டி வாழ்பவர்களைச் செவ்விந்தியர்’ எனப் பிரித்திருப்பதையும் காண்கிறோம். இது போன்றே தமிழ் நாட்டு அரியராக வாழ்ந்த ஆரியரும் வடவாரியரும் பெயரளவில் ஒன்றுபட்டாலும் பிற அனைத்திலும் வேறுபட்டவராவார்கள். அந்த வடவாரியர் மொழியை அவர்கள் வேண்டுமாயின் ஆரியம் எனக் கொள்ளலாம். எனினும் நான் மேலே காட்டியபடி அவர்களே தம் சமஸ்கிருதத்துக்கு ஆரிய மொழி என்று பெயரிட்டதாகக் காண முடியவில்லை. எனவே தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வடமொழி, ஆரியம் என்பன இன்றைய ‘சமஸ்கிருதத்'தினும் வேறுபட்டவை என்பதும், வடமொழி தமிழ்நாட்டு எல்லையில் வடக்கே-பக்கத்திலேயே வழங்கியதாக இருக்கவேண்டும் என்பதும் ஆரியம் தமிழ்நாட்டிலேயே ஒழுக்க நெறியில் உயர்ந்த அரியர் வழங்கிய குழுக்குறி மொழியாகவோ அன்றி வேறு வகையாகவோ இருக்க வேண்டும் என்பதும், இம் மொழியையும் பின் வடக்கிலிருந்து வந்த சமஸ்கிருதத்தையும் ஆரிய மொழி என்ற பெயரால் ஒற்றுமைப்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் விளங்குகின்றன. தமிழ்நாட்டில் அழகின் அடியாகப் பிறந்த ‘முருகு’ என்னும் முருகனையும் புராணக் கடவுளாகிய கந்தனையும் ஒருவராக்கி வழிபடும் வரலாறு நாடறிந்ததே. இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு ஆராய்ந்து வரலாறு, மொழி, கலை ஆகியவைபற்றி ஆராயும் வல்லவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமைகின்றேன்.