Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 4. சிந்து வெளியும் தென்னாடும்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
4. சிந்து வெளியும் தென்னாடும்
Permalink  
 


4. சிந்து வெளியும் தென்னாடும்



உலக வரலாற்றை ஆராய்கின்ற அறிஞர்கள், தொன்மை காண்பதற்கு எகிப்து, மேசபட்டோமியா போன்ற பகுதிகளையே எடுத்துக் காட்டிய காலம் ஒன்றிருந்தது. இந்திய வரலாற்றை எண்ணுபவருக்கு அலெக்ஸாந்தர் படையெடுப்புத்தான் வரலாற்றுக் கால எல்லையாய் அமைந்தது. அதற்கு அப்பால் சற்று ஆழ்ந்து சிந்திப்போருக்கு இன்னும் ஓர் ஆயிரமாண்டுகளுக்கு முன் வந்த ஆரியரைப் பற்றியும், அவர்கள் சிந்து வெளியில் தங்கிப் பிறகு கங்கைக் கரை வந்து இருக்கு வேதம் செய்த வரலாறு பற்றியும் காண வாய்ப்பு உண்டு. ஆயினும், அவை வரலாற்றில் வைத்து எண்ணத் தக்க முறையில் இல்லை என்றும், அலெக்சாந்தர் படை யெடுப்பே இந்திய வரலாற்றின் எல்லைக்கோடு என்றுமே அறுதியிட்டனர் ஆய்வாளர். அந்த அலெக்சாந்நர் நாட்டிய பன்னிரு வெற்றித் தூண்களைக் காண, வரலாற்றறிஞர் சிந்து வெளியைத் துருவி ஆராய்ந்த போதுதான் அவர் களுக்குச் சிந்து வெளியின் தொன்மையைக் காண வாய்ப்பு உண்டாயிற்று. அங்கே அகழ்ந்து எடுக்கப் பெற்ற பல பகுதிகளில் மோகஞ்சோதாரோ ஆரப்பா போன்ற பல இடங்கள் புதையுண்டு கிடப்பதை அறிந்தார்கள். அவற்றை நன்கு கண்டு ஆராய்ந்த போது அந்த நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதைத் தெள்ளத் தெளியக் கண்டு கொண்டார்கள். எனவே, அன்று தொட்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிலையே மாறுபட்டது. எகிப்து, பாலத்தீனத்தினும் பழமை வாய்ந்தது என்றும், ஆரியர் இந்திய மண்ணில் கால் வைப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இங்கே வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்றும், அவர்தம் நாகரிகமும், வாழ்க்கை முறையும், பிற இயல்புகளும் மிகு தொன்மை வாய்ந்தவை என்றும் ஆராய்ந்து அறுதியிட்டார்கள். அங்கே கண்டு எடுக்கப்பெற்ற பொருள்கள் ஐயாயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித வாழ்வின் ஏற்றத்தை விளக்குவனவாய் அமைந்துள்ளதை யாரே அறியாதார்!

இந்தியாவில் புதையுண்ட பொருள்கள் அளவற்றன. அதற்கென ஆராய்ச்சி செய்து, அகழ்ந்து உண்மை காண இந்திய அரசாங்கத்தார் அன்றே தொல்பொருள் ஆய்வுப் பகுதி ஒன்றை அமைத்தனர். அதன் வழியே பலப்பல இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருள்கள் நாட்டின் பழமையொடு கலந்த பண்பாடு, வாழ்க்கைமுறை முதலிய வற்றை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட பொருளால் பல உண்மைகளை உணர முடிகின்றது. சில வேளைகளில் இருவேறு தொடர்பற்ற நாடுகளில் காணும் தொல்பொருள்களால் இன்று தொடர்பற்ற அந்த இரு நாடுகளும் பண்டு தொடர்பு கொண்டு வாழ்ந்தன என்பது உணர முடிகின்றது. தமிழ் நாட்டோடு கிரேக்க உரோம நாடுகள் கொண்ட தொடர்பினைப் பழம்பொருள்கள் கொண்டு ஆராய்ந்து காட்டுவர் வரலாற்றறிஞர். அந்த நிலையிலே சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள் கள் அந்த நிலப் பகுதியோடு இணைந்த பிற பகுதிகளை உணர்த்துவதுடன் அவை இந்திய நாட்டுத் தொன்மை வரலாற்றைக் காட்டவும் உதவுகின்றன.

ஆரியர்கள் இந்திய மண்ணில் கிறித்து பிறக்க 1500 ஆண்டுகளுக்கு முன்—இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்—கால் வைத்தார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை யாகும். ஆனால் சிந்து வெளியில் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்ட நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, அஃது ஆரியருக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படையிலே அமைந்தது என்பது பொருந்தும். சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே எனச் சிலர் இக் காலத்தில் பேசியும் எழுதியும் வருகின்றனர். என்றாலும், சிறந்த வரலாற்று அறிஞர்கள் அந்தக் கொள்கை தவறானது என எடுத்துக்காட்டி, உண்மையை வற்புறுத்தி வருகின்றார்கள். பம்பாய் ஜெய் இந்து கல்லூரிப் பேராசிரியர் திரு. C.L. மாரிவாலா அவர்கள் தமது ‘மோகஞ்சோதாரோ’ என்னும் நூலில் அத்தகைய போக்காளர்தம் கொள்கைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி, ஒன்றும் நிலை பெறக் கூடியது அன்று என்றும், சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஆரியருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்கள்[1]. எனவே, இன்றைக்கு ஐயாயிரமாண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்துக்குத் தொடர்புள்ளவர் யாவர் என்னும் ஆராய்ச்சி எழுதல் இயல்பேயாகும். மாரிவாலா அவர்களே திட்டமாக வேறு ஆராய்ச்சி வழிப் புது முடிவு காணப்பெறும் வரையில், சிந்து வெளி நாகரிகத் துக்குத் திராவிட மக்களே அடிப்படையாவார்கள் என்ற கொள்கையே மறுக்காது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் திட்டமாகக் குறித்துள்ளார்[2]. அவர் மட்டுமன்றி, இந்தச் சிந்து வெளி நாகரிகத்தின் ஆராய்வுக்குக் காரணர் களாயிருந்த ஜான்மார்ஷல், ஈராஸ் பாதிரியார் போன்றவர் களே இந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருப்பதோடு, இதற்கெனப் பல காரணங்களையும் விளக்கிக் காட்டியுள்ளார்கள். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்வோமாயின், அந்த நெடுந்தொலைவிலுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்—உலக வரலாற்றிலேயே மிகப் பழைய காலமெனக் கணிக்கப்படும் அந்தத் தொன்மை நாளிலே-வடக்கும் தெற்கும் எவ்வாறு இணைந்து வாழ்வு நடத்தியுள்ள்ன என்பதை நன்கு அறிய இயலும். அறிஞர் பலர் இவ்வழியில் ஆராய்ந்துள்ளனர். நாமும் ஒரு சில கண்டு அமைவோம் :

ஸ்மித்து என்பார் தமது இந்திய வரலாற்று நூலில் சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்[3]. அதில் அவர் சிந்து வெளி நாகரிகம் ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்பே அமைந்த சிறந்த நாகரிகம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்; அங்குள்ள எழுத்தும் பிற அமைப்புக் களும் மெசபட்டோமியாவை ஒத்த நிலையில் உள்ளன எனக் காட்டுகின்றார். சிலர் எகிப்தும் இந்த நாகரிக அமைப்பில் பங்கு கொள்ளக்கூடும் என்ற கொள்கையினையும் ஆராய்கின்றனர். எகிப்து, சிந்துவெளி நாகரிகம் இரண்டும் மெசபட்டோமியா நாகரிகத்திலிருந்து கடன் வாங்கினவையாய் இருக்கலாம் என்றும், அவை இரண்டும் தத்தம் நாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், அங்கங்கே அதனதன் முன்னர் நிகழ்ந்துள்ள நாகரிகம் பண்பாடு முதலியவற்றிற்கேற்ப மாறியிருக்க வேண்டும் என்றும் காட்டுகின்றார். எனவே, அக்காலத்தில் சிந்துவெளியிலும் அதை அடுத்த பரந்த இந்திய நாட்டிலும் தனித்த பண்பாடும் நாகரிகமும் நிலவியிருக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் நினைப்பூட்டுகின்றார். அந்தக் கொள்கை தென்னாட்டு மக்களுடைய கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை வரலாற்று ஆசிரியர் பலர் உறுதி செய்துள்ளனர்.

கல்கத்தா பல்கலைக் கழகத்து வரலாற்றுப் பேராசிரியர்களான திருவாளர்கள் சின்னாவும் பானர்ஜியும் எழுதிய இந்திய வரலாற்றில் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதெனவும், அது திராவிட, எகிப்து, மெசபட்டோமிய நாகரிகங்களின் சேர்க்கையாய் இருக்கலாம். எனவும் காட்டுகின்றனர். எனினும், சிலர் அதைத் திராவிட நாகரிகமே என எடுத்துக் காட்டுவதை விளக்கி அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.[4]

பல பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய திரு. R. D. பானர்ஜி என்பார். தம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா’வில் சிந்துவெளி நாகரிகத்தைக் குறித்து, அது திராவிட நாகரிகமே என நிறுவியுள்ளனர்;[5] அக்கால நகரங்களாகிய மோகஞ்சோதாரோ, ஆரப்பா போன்ற நகரங்கள் திராவிடர்களாலோ திராவிடர் போன்றவர்களாலோ அமைக்கப்பட்டன என்கின்றார். அவர் அதற்கு ஆதாரமாக ஒருகாலத்தில் திராவிடர் இந்தியா முழுவதும் பரவி யிருந்தனர் என்பதை விளக்கி, இன்று பலுசிஸ்தானத்திலும், அசாமிலும், மத்திய இந்தியாவிலும் திராவிட மொழிக் குடும்பங்கள் வாழ்வதை எடுத்துக் காட்டியுள்ளார்; திராவிடர்கள் பலுசிஸ்தான்த்தில் கட்டிய அணைகள் பல இடங்களில் அங்கே சிதறிக்கிடக்கின்றன எனவும் காட்டுகின்றார்: பலுசிஸ்தானத்திலும் சிந்து சமவெளியிலும் திராவிடரின் பழங்கால மட்பாண்டங்கள், இன்று கண்டு பிடித்து எடுக்கப் பெற்றன என்பதையும் காட்டுகின்றார். இவ்வாறு பரந்த இந்திய நிலப்பரப்பிலும், பிற நாடுகளிலும் பரவியிருந்த திராவிட மக்களை வடநாட்டு வளமார்ந்த மண்ணிலிருந்து ஆரியருக்கு முன் வந்த வட்டமுகமுடைய ஒர் இனத்தார் தெற்கே துரத்திவிட்டனர் எனவும், பிறகு அவர்கள் ஆரியருக்கு அடங்கி வழி விட்டார்கள் எனவும் அவர் காட்டுகின்றார்; அவ்வாறு வந்தவர்கள் திராவிடருடைய நாகரிகம் பண்பாடு முதலியவற்றைப் பின்பற்றியே வாழ்ந்தார்கள் எனவும் காட்டுகின்றார்.

இச்சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் சேஷ ஐயங்கார் அவர்கள், இது பற்றிப் பலப்பல கொள்கைகளையும் முடிவுகளையும் எடுத்துக் காட்டி, இந்த நாகரிகம் ஆரியருக்கு முற்பட்ட நாகரிகம் எனவும், இது திராவிட நாகரிகமாகவே இருக்கலாம் எனவும் வரையறை செய்கின்றனர்[6]. மற்றும், அவர் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருள்களும் தமிழகத்துத் தென்கோடியில் உள்ள ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும், சித்தூர் பக்கத்தே கண்டெடுக்கப்பட்ட பொருள்களும், பாண்டங்களும் ஒத்திருத்தலைக் காட்டுகின்றார்;[7] அவை மேலை நாட்டுக் கிரீட்டு, பாபிலோனியா நாட்டுப் பண்டைப் புதை பொருள்களை ஒத்துள்ளமையையும் காட்டுகின்றார். எனவே, இச்சிந்து வெளி நாகரிகத்துக்கு முன் பாபிலோனிய எல்லை தொடங்கி, தமிழ் நாட்டுக் குமரி முனை வரையில் இடைப்பட்ட சிந்து வெளி உட்பட, திராவிடர்களே வாழ்ந்தார்கள் என்பதையும் அவர் விளக்குகிறார். அதற்கு ஏற்ற வகையில் பேராசிரியர் ராப்சன்[8] அவர்கள், திராவிடர்கள் வடமேற்குக் கணவாய் வழி வந்தவர்கள் என்பதைக் காட்டி, இன்றும் பலுசிஸ்தானத்தில் திராவிடமொழிக் குடும்பம் வாழ்வதை விளக்கி, சிந்துவெளி நாகரிகம் திராவிடருடைய நாகரிகமே என்பதை நிறுவுகின்றார்.

அண்மையில் இத்துறையில் ஆராய்ச்சி செய்த பிரெஞ்சு ஆசிரியர் திரு. J. பிலியோசட்டு[9] என்பார் தமது புது ஆய்வு நூலில்[10] சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்; சிந்து வெளி நாகரிகம் வழிபாட்டு முறையாலும் வேறு பல வகையாலும், திராவிட நாகரிகத்தை ஒத்ததே எனத் திட்டமாகக் குறிக்கின்றார். ஆரியர் இந்தியாவுக்கு வருமுன் இந்தியாவில் முண்டா[11] நாகரிகமும் திராவிட நாகரிகமும் இருந்தன என்றும், அவற்றுள் சிறந்தது திராவிட நாகரிகமே என்றும், வேதங்களில் சொல்லப் பெறாத சிவன், சத்தி முதலியவர்களை வழிபடும் முறைகளால் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமேயாகும் என்றும் எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.[12] ஆரியருடைய சிவ சத்தி வழிபாட்டு முறை, இந்நாட்டில் அவர்கள் நன்கு கலந்து பழகிய பிறகு, இந் நாட்டுப் பழைய சமய அடிப்படையிலே மேற்கொள்ளப் பெற்றதென்பதையும் அவர் நன்கு விளக்குகின்றார்.[13] மற்றும் அவர் ஆரியர் இந்தியாவுக்கு வரும்போது திராவிடர் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தனர் எனக் குறித்து, கிரேக்க நாட்டு ஹெலன் காலத்துக்கு முன்பே தமிழர்கள் சிறந்திருந்தார்கள் எனவும், சேர சோழ பாண்டிய நாடுகள் சிறக்கத் தெற்கே ஓங்கி இருந்தன எனவும், கிரேக்க நாட்டு ஹெரடோட்டஸ் அவர்களைப் பற்றிக் குறிக்கின்றார் எனவும் காட்டுகின்றார்.[14] ஹெலன் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டதாகும் என்பர் ஆராய்ச்சியாளர். எனவே, தென்னாட்டுப் பெரு மன்னர்களாகிய மூவேந்தர்களும் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து சிறந்து வந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

டாக்டர் ஹால்[15] என்பார் திராவிடர்கள் சிந்து வெளி நாகரிகத்துக்கு முன் சிந்து, பஞ்சாபு, பலுசிஸ்தானம் உட்பட்ட வடவிந்தியாவை வாழிடமாகக் கொண்டு சிறந்திருந்தார்கள் என்று காட்டுகின்றார்.[16] மற்றும், அவர் புறத்தோற்றத்தில் 'மண்டை ஓடு' முதலியவற்றை நோக்கிச் சிலர் அம்மக்கள் திராவிடரினும் வேறுபட்டவர் என நினைப்பினும், உண்மையில் ஆராய்ந்து பார்ப்பின், திராவிடர் மெசபட்டோமியாவிலிருந்து வந்ததாகக் கொள்ளினும், அன்றி இந்திய நாட்டுப் பழங்குடிகளே எனக் கொள்ளினும் சிந்துவெளி நாகரிகம் அவர்களுடையதே என அறுதியிடலாம் எனவும் காட்டுகின்றார்;[17] இந்த நாகரிகம் வேத காலத்துக்கு-அதாவது ஆரியர் இந்தியாவுக்கு வருதற்கு முற்பட்டது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார்[18]. இவ்வாறு பலரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதை வலியுறுத்திக் காட்டியுள்ளனர்.

சிந்துவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆரப்பாவைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ள ஆசிரியர்,[19] மோகஞ்சோதாரோவைப் போன்றே அங்குள்ள பல்வேறு அமைப்புக்களையும், வாழ்வியற்பொருள்களையும், வழிபாட்டுப் பொருள்களையும் பிறவற்றையும் எடுத்து விள்க்கி, அவை அனைத்தும் திராவிடருடையவற்றை ஒத்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். இதே உண்மையினை அண்மையில் அகழ்ந் தெடுக்கப் பெற்றவேறு சில இடங்களும்[20] விளக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கின்றார்; சிறப்பாகப் பெண்கள் வளை அணிவதையும், அவை சங்கால் ஆகியதையும் குறிப்பிடுகின்றார். பரந்த கடற்பரப்பை எல்லையாக உடைய தமிழ் மக்கள் கடலிலிருந்து சங்குகளை எடுத்து விதம் விதமான வளைகளைச் செய்து அவற்றை அணிந்திருந்தார்கள் என்பதை நம் சங்க இலக்கியங்களிலும் காண்கின்றோம். சங்குக்கே 'வளை' என்பது பெயர். பெண்கள் இச்சங்கை வளையல்களாக அறுத்து அணிந்துகொண்டார்கள் என்று கூறுவதே பொருத்தமாகும். தமிழ் நாட்டில் இந்தச் சங்குகளை அறுப்பதற்கெனவே ஒரு குலம் இருந்ததென்பதையும் அக்குலமே நக்கீரர் குலம் எனக் கூறப்படுவதையும் நாம் அறிவோம். கடல் படு முத்தும் சங்கும் பவளமும் தமிழர் தம் சிறந்த அணிகலன்களல்லவோ? ஆம்! இந்தச் சங்கு வளையல்களே சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவற்றைச் சான்றாகக் கொண்டே அதைத் திராவிட நாகரிகமெனக் காட்ட இயலும் என்கின்றனர் அறிஞர்.[21] மற்றும், பெண்கள் கொண்டையில் மலர்களையும் தழைகளையும் அணிந்திருந்த சிறப்பும்,[22] பல இலிங்கங்களின் அமைப்புக்களும்,[23] முத்துச்சிப்பிகளின் அமைப்புக்களும்,[24] தமிழ் நாட்டுக் குத்து விளக்கைப் போன்று நான்கு முகமுடைய விளக்குகளும்,[25] கோயில் அமைப்புக்களும் அவற்றின் நகைகளும்,[26] நகைகளைக் கோத்து வைத்துள்ள நூற்கயிறுகளின் அமைப்புக்களும்,[27] பிறவும் ஆரப்பா நாகரிகம் இக்காலத்துத் தமிழ் நாட்டு நாகரிகத்தையும் பண்டைய திராவிட நாகரிகத்தையும் ஒத்து விளங்குகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை நன்கு விளக்குகின்றார். மற்றும், வண்ணம் தீட்டப் பெற்ற மட்பாண்டங்களும், தானியக் களஞ்சியங்களும், வேறு பல அமைப்புக்களும் இன்றைய தமிழ் நாட்டுக் களஞ்சியங்களையும், பாண்டங்களையும் உணர்த்துகின்றன என்பதையும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகின்றார். இவ்வாறு ஆரப்பாவும் பிற சிந்து வெளி அகழ்பொருள்களும் காட்டும் பண்டைய நாகரிகத்தையும் அது திராவிட நாகரிகத்தை ஒத்திருப்பதையும் ஜான்மார்ஷல் தம் நூலில் நன்கு விளக்குகின்றார்.[28] அவர் அடிபற்றி ஆராய்ந்த ஹீராஸ் பாதிரியார் போன்ற அறிஞர் பலர் இவ்வுண்மையை மேலும் மேலும் ஆராய்ந்து விளக்கிக் கொண்டேயிருக்கின்றனர்.

வடநாட்டு மேனாட்டு ஆராய்ச்சியாளர் பலரால் திராவிடருடைய—தென்னாட்டு மக்களுடைய—தொடர்பு கொண்ட நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் என்பதை எவ்வாறு காண முடிந்தது? அச்சிந்து வெளியில் அகப்பட்ட பல்வேறு பொருள்களைக்கொண்டே இந்தக் கொள்கையை அவர்கள் எண்ணிப் பார்த்து அறுதியிட முடிந்தது. இதன் அடிப்படை ஆசிரியரான ஜான் மார்ஷல் என்பவர், தம் பெருநூலில் இவற்றிற்கெல்லாம் விளக்கம் தருகின்றார். அவற்றுள் ஒரு சிலவற்றை நாமும் காண்போமானால், உண்மை நன்கு தெளிவு பெறும் என்பது உறுதி.

சிந்துவெளி நாகரிகத்தில் சத்தி வழிபாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. இச்சக்தி வணக்கம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது இந்தியாவில் மட்டுமன்றி, மெசபட்டோமியா, சிறிய ஆசியா, பால்கன் நாடுகள், எகிப்து முதலிய நாடுகளிலும் இச்சத்தி வணக்கம் இருந்து வந்தது. அந்தக் காலத்தில் இச்சத்தி மக்களின் கொடுந்துன்பங்களை நீக்குபவளாய், ஊர்தொறும் மக்கள் வணங்கும் கோயில் பெற்றவளாய் விளங்கினாள். தமிழ் நாட்டில் ஊர்தோறும் இன்றும் கொண்டாடப்பெறும் கிராம தேவதைகளை நாம் அறிவோம். ஊரில் யாதொரு தீங்குவரினும், மக்கள் அவளிடம் முறையிட்டுக் கொள்வதும், அவள் நேரில் வந்து வரந்தந்து நீக்குவதாக நம்புவதும் இன்றும் நாம் காணும் நிகழ்ச்சிகளே. மாரியம்மன் என்றும் பிடாரி என்றும் பல வேறு வகையில் அவள் பாராட்டப் பெற்றிருப்பதையும் நாட்டு வரலாறு காட்டுகின்றது. சிலப்பதிகாரத்தில் இந்தக் கொற்றவை வழிபாடே வேட்டுவ வரியில் விளக்கப் பெற்றுள்ளது. இச்சத்தியே எல்லாத் தெய்வங்களுக்கும் முற்பட்ட தெய்வம் என்னும் உண்மையை இளங்கோவடிகள்,


"அரி, அரன், பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிர்அம் சோதி விளக்காகி யேநிற்பாய்!"

                               (12: உரைப்பாட்டு மடை, 8)

என்று விளக்குகின்றார். மற்றும் இந்தச்சத்தி பூசை ஆரியர்கள் இந்திய நாட்டுக்கு வருமுன்பே இருந்து வந்த ஒன்று. ஆரியர்தம் வேதத்தில் இச்சத்தி பூசை விளக்கமாகக் கூறப் படவில்லை. இருக்கு வேதத்தில் இரண்டோர் இடங்களில் 'பிருதுவி'யாகிய பூதேவிக்குரியதாக இப்பூசை கூறப்படினும், இஃது அவர்கள் சிந்துவெளி தாண்டிக் கங்கைச் சமவெளியில் வந்து தங்கிய போது அங்குள்ளவர்கள் செய்யும் சத்தி வழிபாட்டைக் கண்டு, பிறகு தங்கள் வேதத்தும் இதை அமைத்துக்கொண்டார்கள் என்பதே பொருந்துவதாகும். அவ்வழிபாடும் நில மகளுக்கு அமைந்த ஒன்றேயன்றி, அனைத்தையும் ஆக்கும் 'சத்தி'க்கு அமைந்ததாகாது. இந்த உண்மையை இன்றும் தமிழ் நாட்டுச் சத்தி வழிபாடு நன்கு விளக்கும். தமிழ் நாட்டு ஊர்த் தெய்வங்களாகிய கொற்றவை, மாரி, பிடாரி என்பவற்றிற்கு இன்றும் ஆரியரோ, அன்றி அவரொடு சேர்ந்தவரோ பூசை செய்வதில்லை. அக்கோயில்களில் எல்லாவிடங்களிலும் ஆரியரல்லாத பழங்குடி மக்களாலேயே பூசை செய்யப்படுகின்றது. வெற்று வழிபாட்டுக்கும் கூட ஆரியர்கள் அக்கோயில்களுக்குச் செல்வதில்லை. அதற்கென உள்ள வழிபாட்டு முறையும் தமிழிலேதான் உள்ளது. எனவே, இந்தத் தமிழ் நாட்டுச் சத்தி வழிபாடுதான் சிந்துவெளி நாகரிக காலத்தில் அங்கே சிறந்திருக்க வேண்டும் என்று கொள்வதில் தவறு இல்லை.

இனி, சிவ வழிபாட்டைப் பற்றி நோக்குவோம் : மொகஞ்சதாரோ, ஆரப்பாவில் எத்தனையோ சிவலிங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை பல அளவில் அமைந்துள்ளன. வீடுகளில் வைத்து வழிபடும் சிறுசிறு இலிங்கங்களும் பொது இடங்களில் வழிபடப்பெறும் பெரிய இலிங்கங்களும் உள்ளன. செல்லுமிடமெல்லாம் கையில் உடன் கொண்டு சென்று பூசை சென்ய்யும் இலிங்கங்களும் உள்ளன. கல்லிலும் மண்ணிலும் இந்த இலிங்கங்கள் செய்யப்பட்ட கல்வழிபாடு இந்திய நாட்டில் ஆரியர் வருகைக்கு முன்னரே அமைந்த ஒன்று.[29] இந்திய நாட்டில் மட்டுமன்றி, பலுசிஸ்தானத்திலும் அசாமிலுங்கூட இத்தகைய வழிபாடு இருந்திருக்கின்றது. இத்தகைய இலிங்க வழிபாடு இன்றும் தமிழ் நாட்டில் ஊர்தோறும் இருக்கக் காண்கிறோம். சத்தியாகிய மாரியும் கொற்றவையும் ஊர்தோறும் உள்ளமை போன்றே, இலிங்கமும் ஊர் தோறும் கோயில் அமைத்துப் போற்றப்படுவதை அறியாதார் யாரே! அவற்றின் வழிபாட்டு முறைகளும் வைதிக முறையாகிய வேதவிதிப்படி அமையாது, பிற்காலத்து, கலந்த, ஆகம அடிப்படையிலே உள்ளன. கோயில்களின் அமைப்புக்களும் அப்படியே. எனவே, இலிங்க வழிபாடு ஆரியர் வருமுன் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் மட்டுமன்றி, பிற இடங்களிலும் பரவியிருந்ததென்பது நன்கு புலனாகும்.

சிவனுடைய உருவமும் சிந்து வெளியில் அன்றே அமைந்துள்ளது. அது மூன்று முகங்களோடு கூடியுள்ளது. சிவவழிபாடு மிகப் பழமையானது. திருவாரூரில் புற்றிடங் கொண்ட இறைவனைப் பாடும் திருநாவுக்கரசர், அவன் கோயில் கொண்ட நாளை எண்ணி எண்ணிப் பார்த்து, முடிவில் எல்லை காண முடியாது திகைக்கின்றார்.[30] சிந்துவெளிச் சிவவழிபாட்டை நினைத்து ஜான் மார்ஷலும் அவ்வாறே வியக்கின்றார். சிவன் உருவம் மூன்று முகங்களோடு இருப்பதுடன் அதன் அடியில் யானை, புலி, காண்டாமிருகம், எருமை போன்ற உருவங்களும் உள்ளன. இவை இறைவன் 'பசுபதி' என்பதை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இவற்றை ஆராய்ந்து ஆராய்ச்சி வல்லுநராகிய கோபிநாதராவ் அவர்கள், சிந்து வெளியின் சிவ உருவம், தமிழ் நாட்டில் வடவார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் உள்ள மூன்று முகங்கொண்ட சிவ வடிவத்தை ஒத்துள்ளது எனத் திட்டமாக எழுதியுள்ளார்[31] ஜான் மார்ஷல் அவர்கள் தனித்த இலிங்க வழிபாட்டுடன், பிற வகை வழிபாட்டு முறைகளும் சேர்த்தே இவ்வுருவ வழி பாட்டுக்கு அடிகோலியிருக்க வேண்டும் எனக் காட்டுவர். தமிழ் நாட்டுச் சைவ சமய உண்மையாகிய 'முப்பொருள் உண்மை'யே உலகில் மிகப் பழைய கருத்து என்றும், அது இந்தியாவில் மட்டுமன்றி அந்தப் பழைய காலத்தில் மெசபட்டோமியாவிலும் பரவியிருந்தது என்றும் காட்டுகின் றனர்[32] இந்த முன்று முகச் சிவவடிவத்தைப் பின் வந்தவர் திரிமூர்த்தி என மாற்றிக் கூற முயன்று வெற்றி காணாது விட்டுவிட்டனர்.

மற்றும் அந்தச் சிவவுரு 'யோகநிலை'யில் உள்ளது. யோகம் இந்தியாவின் பழங்காலத்து முறைகளுள் ஒன்று. ஆரியர் வருமுன்பே இந்தியாவில் யோகம் பயின்றோர் பலர் இருந்தனர். காப்பிய காலத்துக்குப் பிறகே அஃது ஆரியர் வாழ்வில் இடம் பெற்றது[33]. இந்த உருவமே பின்னால் ஆரியர்களின் உருத்திரனாகக் கொள்ளப்பட்டது. சிந்து வெளிச் சிவ உருவத்தில் தலையில் உள்ள இரு பிரிவுக் கொம்பே, அஃது ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதைக் காட்டுகின்றது. இதையே பின்னால் ஆரியர் 'திரிசூல'மாக்கி, ஆயுதம் என்றனர்[34]. மற்றும் சிவன் உருவம் மான்தோல் ஆசனத்தில் இருந்து உபதேசம் செய்வது போல அமைந்துள்ளது. மான் தோல் ஆசனம் உபதேசத்துக்குக் கொள்ளும் நல்லாசனமாகப் போற்றப்படுகின்றது.

'சிவன்' என்னும் சொல் ஆரியருடையதன்று. வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பு இல்லை. பின்னர், ‘உருத்திரன்' என்றே அவன் குறிக்கப்பெறுகின்றான். ஆனால், தமிழில் இச்சிவன் பழங்காலத்திலிருந்து வழக்கில் இருந்து வருகின்றான். ‘செம்மை’ என்ற பண்பின் அடியாகவே சிவன் பிறந்தான் என்பர்[35] எனவே, சிவன் என்பது திராவிடர் வேர்ச்சொல்லாகிய 'செம்மை'யிலிருந்தே பிறந்திருக்க வேண்டும்[36]." மற்றும், சத்தியும் சிவமும் இணைந்த வழிபாடு தமிழருடையது. இரண்டையும் பிரிக்க முடியாது. 'சிவமின்றேல் சத்தி இல்லை; சத்தி இன்றேல் சிவமில்லை,' என்ற உண்மையே சைவ அடிப்படை. சத்தி தோற்ற அழிவு செய்பவள். இந்தச் சிவசத்தி நிலை தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் மட்டுமன்றி, மத்தியதரைக் கடற்பிரதேசங்களிலும் இருந்தது இந்தச் சத்தியைப் பற்றியும் இதனோடு இணைந்த சிவத்தைப் பற்றியுமே பிற்காலத்தில் பலப்பல பாடல்கள் உருவாயின.

மேலும், இந்தச் சிந்து வெளியின் வழிபாட்டு உருவம் தமிழ்நாட்டு ஐயனார் வழிபாட்டை நமக்கு நினைவுறுத்தும். தமிழ் நாட்டில் பல ஊர்களில் உயர்ந்த மரங்களின் கீழ் ஐயனார் சிந்துவெளிச் சிவனைப் போன்று நிமிர்ந்து தம் அடியின்கீழ் உயிர்களை அடக்கி வைத்திருப்பது போன்று உள்ளதை இன்றும் காணலாம். ஐயனார் என்றும், காத்தவராயன் என்றும், மன்னார்சாமி என்றும் பல பெயர்களால் ஐயனார் வழங்கப் பெறுகின்றார். மற்றும் இக்காலக் கோயிலிற்காணும் தட்சிணாமூர்த்தி என்பதும் இந்த அடிப்படையில் அமைந்ததேயாகும். அதன் பெயரே அது தென்னாட்டுக் கடவுள் என்பதை நமக்கு விளக்குகின்றதே! (தட்சிணம்-தெற்கு, மூர்த்தி-கடவுள்.) தென்னாட்டுக்கு உரிய கடவுளே அவர் என்பதைத்தான் அப் பெயரால் வழங்கினார்கள். பின்பு அது தென்முகக் கடவுளாய் நிற்கும் திசை நோக்கி அமையலாயிற்று. எனவே, தமிழ் நாட்டு ஐயனார் உருவைப் போன்றதே சிந்துவெளியில் உள்ள சிவன் உருவம் என்பது தேற்றம்.[37]

 இந்த உருவங்களைத் தவிர்த்து, மர வழிபாடும், விலங்கு வழிபாடும், நாகர் வழிபாடும் சிந்து வெளி நாகரிகத்தில் நாம் காண்பனவாகும். மரத்தை அறிவு வளர்ச்சியின் அடையாளமாக வழிபட்டனர். கல்லாலமரத்தின் அடியிலிருந்தே தட்சிணாமூர்த்தி சொல்லாமல் சொல்லிப் பல உண்மைகளை விளக்கினார். புத்தருக்குப் போதி மரத்தின் அடியிலேயே அருள் நோக்கு அமைந்தது. தமிழ் நாட்டுக் கோயில் வரலாற்றில் மரங்களே முக்கிய இடம் பெற்றுள்ளமையை யாவரே அறியாதார்! ஆரியர் காலத்துக்கு முன்பே தமிழ் நாட்டிலும், பரந்த இந்திய நிலப்பரப்பிலும் இம்மர வழிபாடு இருந்து வந்தது.

விலங்கு வழிபாடு தமிழ் நாட்டிலும் சிந்து வெளியிலும், மெசபட்டோமியாவிலும், சுமேரியாவிலும் சிறந்திருந்தது[38] மனித முகத்தோடு கூடிய விலங்குகளும், விலங்கு முகத்தோடு கூடிய மனித உடலும் போற்றப்பட்டன. புலியும் யானையும் சத்தியுடன் இணைத்து வழிபடப்பட்டன. காண்டாமிருகம், காட்டு எருமை போன்றவை சிவ வழிபாட்டுடன் இணைக்கப் பட்டன. அனைத்துக்கும் மேலாக ‘எருது' சிறந்த முறையில் வழிபடப் பெற்றது. சிந்து வெளி நாகரிகத்தில் எருது முக்கிய இடம் பெற்றுள்ளது. வழிபாட்டிலும் மக்கள் வாழ்விலும் இது பெரும்பங்கு கொண்டிருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். சிறப்பாக எருதுகளின் கொம்புகள் தூய்மை கருதி வழிபடப்பெற்றன.

அனுமன் வழிபாடு ஆரியர்களுக்கு முன்பே நாட்டில் உள்ளவர்களால் வழிபடப் பெற்று வழக்கத்தில் இருந்தது. அனுமன் என்ற பெயரே தமிழ்ப்பெயர் என்பதையும் அதுவே பிறகு மாறி ஆரியமொழியில் இடம் பெற்றதென்பதையும் வரலாற்று அறிஞர்கள் நன்கு காட்டியுள்ளார்கள். ஆண்+மந்தி என்ற சொற்களின் சேர்க்கையே ஆண்மந்தியாகிப் பின் அனுமன் ஆகிப் பின்னும் ஹனுமான் என ஆரிய மரபைத் தழுவியது. பாதி விலங்கு பாதி மனித நிலையைக் காட்டலே-மனிதன் குரங்குவழி உருவானான் என்ற உண்மையைக் காட்டலே. இக்குரங்கு வழிபாடு அக்காலத்தில் அமைந் திருந்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்ற தன்றோ!

நாகர் வழிபாடும் தொன்மை வாய்ந்த ஒன்றாகும். நல்ல பாம்பைப் பற்றிய குறிப்பு வேதத்தில் இல்லை. நாகர் வழிபாடும் ஆரியருக்குத் தெரியாத ஒன்று. ஆனால், தமிழர்கள் மிகுபழங் காலந்தொட்டே நாகர்களை வழிபட்டு வந்தார்கள். இன்றும் தமிழ் நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் நாகர் வழிபாட்டைக் காணலாம். நாகத்தைப் பூசிப்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாகலாம். ஒன்று, அச்சத்தின் வழி நிகழ்ந்திருக்கலாம்; மற்றொன்று, அவை பூமிக்கடியில் இருந்து வருவதால் இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் அந்த உருவத்தில் வெளிவருகின்றனர் என அப்பழங்காலத்தில் நம்பியிருக்கலாம்; தமிழ் நாட்டில் வீடுதோறும் 'மனைப் பாம்பு’ என்று நாகத்தைப் போற்றி வழிபடுவதும், அவற்றைக் கண்டாலும் அவற்றிற்கு ஊறு செய்யாமல் விட்டுவிடுவதும், அவற்றிற்குப் பொங்கல் இட்டுப் பூசை செய்வதும் இன்னும் நாம் காண்பனவே. மற்றும் நாகப் பட்டினம், நாகூர் போன்ற ஊர்களும், நாக நாடு, நாக கன்னிகை போன்றவையும் தமிழர் நாகரோடு கொண்ட தொடர்பினை நன்கு விளக்குவனவாகும்.

நீர் வழிபாடும் நாட்டில்-சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தது எனக் காண்கிறோம்[39]. தமிழ் நாட்டிலும் நீரைத் தெய்வமாக வழிபட்ட வரலாறு பழமையானது. தொல்காப்பியத்தில் நெய்தல் நிலத் தெய்வமாக வருணனை வணங்குவது இந்த அடிப்படையிலேயாம். இன்னும் ஆற்றில் புது வெள்ளம் வரும்போது தமிழ் நாட்டு மக்கள் அதைப் போற்றுவதைக் காண்கின்றோம். ஆரியர் வழக்கத்திலும் வருணன் வழிபாடும் புது வெள்ளம் போற்றலும் உள்ளன என்றாலும், அவர்கள் வருமுன்பே சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்நீர் வழிபாடு இந்தியா முழுவதுங் பரவி இருந்தது எனக்கொள்ளல் பொருந்துவதேயாகும். இந்த நீர் தம்மைத் தூய்மைப்படுத்துகின்றது என்ற உண்மையை உணர்ந்தவர் தமிழர். சிந்து வெளியில் அமைக்கப்பெற்ற குளமும், குளக்கரையிலிலுள்ள குளிக்குமிடங்களும், தென்னாட்டுக் குளங்களையும் அவற்றைச் சார்ந்தவற்றையும் ஒத்திருத்தல் காணலாம். மற்றும், இந்த நீர் வழிபாட்டு முறையிலேதான் ஆற்றங்கரை நாகரிகங்கள் உலகம் ழுழுவதும் உண்டாகியிருக்க வேண்டும் எனக் கொள்ளல் தவறாகாது. சிந்துவெளி நாகரிகமும், காவிரிக்கரை நாகரிகமும், எகிப்து, மெசட்டோமியா, சீன நாகரிகங்களும் ஆற்றங்கரை நாகரிகங்களேயல்லவா? எனவே, அத்தகைய முதல் வாழ்வை நல்கிய ஆற்றையும் அதுவழியே பெருக் கெடுத்தோடிவரும் நீரையும் யாரே போற்றாதிருப்பர்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 கிருட்டிணன் வழிபாடு சிந்துவெளி நாகரிகம் அறியாத ஒன்று. கிருட்டிணன் வழிபாடு காலத்தாற் பிந்தியது [40] மற்றும், கட்டடக்கலை, வண்ணக்கலை முதலிய பலவும் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை விளக்குவதோடு அவை பழந்தமிழ் நாட்டு - திராவிட நாட்டு , திராவிடர் தம் பண்பாட்டையும் வாழ்வையும் உணர்த்துகின்றன என்பது உண்மையேயாகும். -

ஜான் மார்ஷல் கூறுகின்றபடி அக்காலத்து இந்திய நாகரிகம்-சிந்து வெளி அடிப்படையில் அமைந்த நாகரிகம்அக்காலத்தே உலகில் வாழ்ந்த பிற சுமேரிய எகிப்திய நாகரிகங்களைக் காட்டிலும் மிக மிகச் சிறந்ததாய் விளங் கிற்று என்பதில் ஐயமில்லை[41]. இவ்வாறு இன்றைக்கு ஐயாயிரமாண்டுகளுக்கு முன்பே பரந்த இந்தியநாட்டின் தெற்கும் வடக்கும் பல்வேறு வகைகளால் இணைந்து இயைந்து சிறந்து செம்மை நலமுற்று ஓங்கி இருந்தனவென்றும், இந்தநிலை - ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த பண்பாடும் பிறவும் சிறந்தநிலை - காலப் போக்கில் மெள்ள மெள்ள வந்த மற்றவர்களுக்கு இடம் விட்டு, தெற்கே ஒரு புறத்தில் இன்று அமைந்துவிட்டது என்றும் கொள்வது பொருந்தும். எனவே, இந்தியநாட்டு வடக்கும் தெற்கும் மட்டுமின்றி, மேற்கே எகிப்து, மத்திய தரைக்கடல் நாடு வரையில் இன்றைய தென்னாட்டுப் பண்பாடும் நாகரிகமும் பிற நல்லியல்புகளும் பரவி நிறைந்திருந்தனவென்றும், இந்த உண்மையை இன்றைய நல்ல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து உணர்த்திக் கொண்டே இருப்பதும், அதுவழியே உலகு உண்மையை உணர்ந்து தெளிவதும் வரலாற்றுச் செம்மைக்கு வழி காட்டியென்றும் அறிதல் வேண்டும்.

இனி, இறுதியாக ஜான் மார்ஷல் அவர்கள் தம் நூலின் இறுதியில் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றியும், அதன் வழி அவர் தெளிந்த உண்மையைப்பற்றியும் கூறியதை அவர் வாக்கிலேயே நானும் காட்டி அமைகின்றேன்[42]. அவர் வழி சிந்து வெளி நாகரிக ஆராய்ச்சி மேலும் வளர்ந்து உலகுக்கு நலம் பயப்பதாக!

 

 

 

 

 

 

 

 

 

[43]

  1.  Mohan - Jo - Daro, by C. L. Mariwalla, pp. 69, 79.
  2.  The case for the Dravidian authorship of the Indus Civilization in the present, state of knowledge, seems worthy of acceptance, till the future offers a more trust-worthy evidence to alter this conclusion, Ibid. p. 79.
  3.  Oxford History of India, by Vincent A. Smith (Third Edition), pp. 26.32.
  4.  History of India, by Dr. N. K. Sinha and Dr. A. C. Banerji, pp. 29, 30.
  5.  Prehistoric, Ancient and Hindu India, by R. D. Banerji, M. A., pp. 9, 34,
  6.  Dravidian India, p. 44
  7.  Dravidian India, p. 53
  8.  prof. Rapsan.
  9.  J. Filliozat,
  10.  Political History of India.
  11.  Munda.
  12.  Political History of india, P. 88.
  13.  Siva and his Sakti do not appear in the Vedas, but only in more recent texts from a period when new religions were being formed by fusion of indigenous cults with the Vedic and Brahminical belief. (Political History of India, p. 87)
  14.  Pre-Hellenic iage of Greece.
  15.  Dr. H. R. Hall.
  16.  Mohenjo - Daro and Indus Civilization, Vol. I, p. 109.
  17.  Mohenja-Daro and Indus Civilization, p. 107.
  18.  ibid. p. 111
  19.  Excavation in Harappa, by Manho Sarup Vats, M. A.
  20.  Chak Purbane Syal and Kotla Nihang Khan in Punjab.
  21.  Excavation in Harappa, pp. 89, 432.
  22.  ibid. p. 297, 299.
  23.  ibid. p. 370.
  24.  ibid. p. 373.
  25.  ibid, p. 374.
  26.  ibid. p. 443.
  27.  Excavation in Harappa p. 466.
  28.  Indus Civilization, by Sir John Marshall, pp, 51, 52.
  29.  Indus civilization, p. 58.
  30.  திருவாரூர்த் திருத்தாண்டகம், அப்பர்.
  31.  Elements of Hindu Iconography, by T. A. Gopinathan Rao, p. 380.
  32.  Sir Shamash and lshtar.
  33.  Indus Civilization, by Sir John Marshall, p. 54
  34.  ibid. p. 55
  35.  'சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்.' (தேவாரம்)
  36.  Indus Civilization, p. 56.
  37.  Indus Civilization, p. 56.
  38.  Indus Civilization, p. 67.
  39.  Indus Civilization, p. 75.
  40.  Indus Civilization, p. 77.
  41.  ibid. p. 77
  42.  As mistake as it seems to me, that has too often been to take the modern jungle tribes as the lineal representatives of the Pre-Aryan and to assume that they have perpetuated all that is worth perpetuating of the cultural and religious traditions of the latter. India has always had her jungle tribes. She had them five thousand years ago, as she has them to-day. But side by side with them she also had her cultured classes of the cities and the gulf between the two was probably as great as it is now. As to the premitive beliefs of these jungle folks, they may, it is true, be reckoned as part and parcel of Hinduism, which have ever been ready to
  43.  admit within its fold any and every kind of teaching, creed, or cult, from the most transcendental docintne of theology to the most degraded type of festishim. This has been a characteristic of Hinduism far back as its history can be traced, still earlier Indus religion which preceded it, only that in remoteage there was presumably less diversity of belief than now. To this limited extent, tham, we are justified in belieivng that the non. Aryan jungle tribes of today do, in fact, preserve for us some of the cruder and more elemental features of the Pre-Aryan religion. But to assume, as so many have done, that such features represent the sum total of that religion is irrationai as to suppose that the rude grass and mud hovels of these same jungle tribes are representatives of the massives edifices of Mohenjo-Daro , and Harappa (Vol.I.p.78.)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard