துன்பம் நீங்கி வாழ்வதே இன்பம். பொருள்செல்வம் இருந்தால் தான் இந்த உலகில் இன்பமாக வாழலாம். இதைப்போல் இறப்புக்குப் பின் உள்ள மறுமை உலக வாழ்க்கைக்கு அருள்செல்வம் வேண்டும். பொருள் செல்வத்தை அடைவதற்கு ஒரு வள்ளலிடம் செல்வதற்கு வழி சொல்லுபவை, நாம் முன்பு கண்ட ஆற்றுப்படைப் பாடல்களும், பத்துப்பாட்டின் மற்ற நான்கு ஆற்றுப்படை இலக்கியங்களும்! அருள் செல்வத்தை அடைவதற்காக, உலகை எல்லாம் படைத்து, அளித்து, காக்கும் வள்ளல் ஆகிய இறைவனிடம் செல்வதற்கு வழி கூறுவது திருமுருகாற்றுப்படை. இதற்கு முருகு, புலவர் ஆற்றுப்படை என்ற வேறு பெயர்களும் உள்ளன.
317 அடிகள் கொண்ட இப்பாட்டை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார்.
பொருளை எவரிடத்தில் இருந்தும் எந்த வழியிலும் பெற முடியும். ஆனால் அருள் உள்ளம் என்பது கடவுளால் மட்டுமே அருளப்படுவது. அதைப் பெறுவதே மறுமை வாழ்வுக்குச் சிறந்தது என்னும் உயர்ந்த நோக்கத்துடன், முருகனிடமிருந்து அருளைப் பெற்ற ஓர் அரும்புலவன் மற்றவனுக்கு அதைப் பெறவழி சொல்வதாக, ஆற்றுப்படையாக நக்கீரர் இந்நூலை இயற்றியுள்ளார்.
உலக உயிர்கள் எல்லாம் மகிழ்ந்து வாழக் கடவுள் புரியும் அருட்செயல்களை உணர்ந்து பார்க்கும் உள்ளம்தான், பிறர் நலனுக்காக வாழும் அருள் உள்ளமாய் ஆகும். அந்த இறையருளை உணர்த்துவதே இந்த நூலின் முதன்மை நோக்கம் ஆகும்.
தன் ஊர்தியாகிய தோகை மயில் மீது சிவந்த ஒளிமிக்க மேனியுடன் தோன்றும் முருகனின் தோற்றத்துக்கு, உலகம் எல்லாம் மகிழக் காலையில் நீலக்கடல் அலைகளின் மீது எழும் செங்கதிரோனின் தோற்றத்தை உவமையாகக் கூறி, நூலைத் தொடங்குகிறார் நக்கீரர்,
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு... (1-2)
இந்த உவமை, முருகனின் அழகிய தோற்றப் பொலிவை மட்டும் சுட்டவில்லை. இருளை அழித்தல், ஒளிவழங்கி உலகைக்காட்டுதல், வெப்பம் என்னும் உயிர்ச்சத்தை உலக உயிர்களுக்கு எல்லாம் ஊட்டுதல் ஆகிய பயன்பாடுகளையும் உணர்த்துகிறது. வெளிப்படையான இவற்றை மட்டும் அன்றி, உள்ளார்ந்த பயன்பாடு தரும் பண்புகளையும் சுட்டுகிறது. தீமைகளைச் சுட்டுஎரித்தல், நன்மைகளின் பால் செலுத்தும் ஞான ஒளிதருதல் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது.
ஆன்மிக ஆற்றுப்படையாக அமைந்துள்ள இந்நூல் ஆறுமுகன் ஆகிய முருகன் காட்சி தரும் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அருள் பெற வழிகாட்டுகிறது; ஆறுபகுதிகளாக அமைந்