மேலே காட்டிய இரண்டு பாடல்களின் மூலம் இக்கருத்துக்களைக் காணுகின்றோம்.
இந்த இரு குறள்களிலும் பிராமண வருணம் ஒன்று உண்டு என்பது ஓப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால், அடுத்த வருணங்களாகிய க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணங்களையும் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார். அனால் வெளிப்படையாக மற்ற வருணங்களைப்பற்றிச் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் குல ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று கூறுவதன் மூலம் மற்ற வருணங்களையும் ஒப்புக்கொள்ளுகிறார்.
வருண தர்மத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று சொல்லுவதற்கும், குல ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்கும் பொருளில் வித்தியாசம் இல்லை; சொல்லில்தான் வித்தியாசம்.
இல் பிறந்தார்கண் அல்லது இல்லை, இயல்பாகச்
செப்பமும் நாணமும் ஒருங்கு. (951)
நல்ல நடத்தையும், ஓழுக்கந் தவறி நடப்பதற்கு வெட்கப்படுதலும் பூரணமாக உயர்ந்த குடியில் பிறந்தவர்களிடந்தான் காணப்படும்; மற்றவர்களிடம் இக்குணம் தானாகக் காணப்படாது.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார். (952)
உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கம், உண்மை, நாணம் இம்மூன்றிலிருந்தும் தவறமாட்டார்கள்.
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு. (953
உண்மையான உயர்ந்த குடியில் பிறந்தவர்க்குத் தன்னிடம் வரும் ஏழைகளைப் புன்சிரிப்புடன் வரவேற்றல், அவர்க்கு வேண்டியதைக், கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், தன்னிலும் கழ்ப்பட்டவரைக் கேவலமாகப் பேசாமை இந்த நான்கு குணங்களும் உரிமையானவைகள் என்று கூறுவர்.
உயர்ந்த குடியில் பிறந்தவர்களிடம் உள்ள குற்றம், வானத்தில் உள்ள சந்திரனிடம் காணப்படும் கருமையைப் போல் எல்லோர்க்குந் தெரியும். ஆதலால் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கந் தவறக்கூடடாது.
நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)
ஒருவனுடைய நல்ல குணங்களுக்கிடையே, அன்பில்லாமை காரணமாக உண்டாகின்ற கொடுஞ் செயல்கள் காணப்பட்டால் அவனைப்பற்றிச் சிந்திக்கத் தோன்றாது; அவன் பிறந்த குலத்தைப் பற்றியே சந்தேகம் தோன்றும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும், காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல். (9509)
நிலத்தின் தன்மையை அதில் முளைத்த பயிர் காட்டி விடும். உயர்ந்த குலத்தில் பிறந்தவரின் குணத்தை அவர் பேசும் சொற்கள் காட்டி விடும்.
மேலே காட்டப்பட்ட பாடல்கள் குடிமை என்னும் அதிகாரத்தில் உள்ளவை. உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தாம் நல்லொழுக்க மூடையவர்களாயிருப்பார்கள்; ஒழுக்கந் தவறி நடக்கமாட்டார்கள்; கெட்ட காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; கெட்டசொற்களைப் பேசமாட்டார்கள்; கமான குலத்தில் பிறந்தவர்கள்தாம் கெட்டகாரியங்களைச் செய்வார்கள்; இக் கருத்துக்கள் மேற்காட்டிய குறள்களிலே காணப்படுகின்றன.
இதனால் பிறப்பினால்தான் மக்களுக்குள் உயர்வு தாழ்வுகள் உண்டாகின்றன; நல்லொழுக்கம் தீயொழுக்கம் தோன்றுகின்றன; என்பது திருவள்ளுவர் கருத்தென்று உணரலாம்.
இங்கே திருவள்ளுவர் குறிப்பிட்டி ருக்கும் குடிமையென்பது ஜாதியல்ல. அதாவது பிராமண க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ஜாதிகளைக் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட ஒரு பரம்பரையைக் குடியென்றும், குலம் என்றும் குறிப்பிடுகிறார்.
இவர் கருத்துப்படி பிராமணர்களுக்குள் உயர்ந்த குடி, தாழ்ந்த குடி உண்டு? க்ஷத்திரியர்களுக்குள் உயர்ந்த குடிதாழ்ந்த குடி. உண்டு; வைசியர்களுக்குள் உயர்ந்த குடி தாழ்ந்த குடி உண்டு; இதைப்போலவே சூத்திரர்களிலும் உயர்ந்த குடி. தாழ்ந்த குடி. உண்டு. இந்த உயர்ந்த குடி. தாழ்ந்த குடி. வேற்றுமைகூட பிறவியினால்தான் ஏற்படுகிறது என்பது அவர் கருத்து. அகவே பிறப்பினால் உயர்வு தாழ்வுடைய பல ஜாதிகள் உண்டு என்னும் கொள்கையைத் திருக்குறள் வலியுறுத்துவதைக் காணலாம்.
பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யால். (972)
எல்லா வுயிர்களுக்கும் பிறப்பில் வேற்றுமையில்லை. அனால் அவரவர்கள் செய்கின்ற தொழில் வித்தியாசத்தால் உயர்வு தாழ்வு உண்டு.
இக்குறள் பெருமையென்னும் அதிகாரத்திலே கூறப்பட்டள்ளது. பிறப்பிலே மக்களுக்குள் வேறுபாடில்லை என்று இதில் சொல்லப்படவில்லை. உயிர்ப் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பிறக்கும் இயல்பு ஒன்று; பிறப்பில்லாமல் எந்த உயிரும் வாழ்வதில்லை என்றுதான் கூறப்படுகின்றது. மக்களுக்குள் பிறப்பினால் வித்தியாசம் இல்லை; பிறப்பினால் ஜாதி உண்டாகவில்லை; என்று இக்குறளுக்குப் பொருள்கூற இடமில்லை.
இக்குறளின் கருத்தைச் சிலர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. திருவள்ளுவர் மக்களுக்குள் பிறப்பினால் வித்தியாசம் இல்லை என்று கூறிவிட்டார்; அவர் ஜாதி வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளவில்லை; வருணாஸ்ரம தருமத்தை அதரிக்க வில்லை; பிறப்பினால் வேற்றுமை யில்லையென்பதே தமிழர் நாகரிகத்தின் சின்னம்; இதுவே தமிழருடைய தனிக் கலாச்சாரம்.
திருவள்ளுவர் தமிழருடைய தனிப்பட்ட கலாச்சாரத்தை இக்குறளின் மூலம் எடுத்துக் காட்டி விட்டார்; என்று சிலர் கூறுகின்றனர். திருக்குறளில் பெரும் பாகத்தில் ஒப்புக்கொள்ளப் பட்ட கொள்கையை இந்த ஒரு குறளில் மறுக்கப்பட்டதாகக் கூறுவது பொருத்தமற்றது.
மக்களுக்குள் பிறப்பினால் வேற்றுமையில்லை என்று அர்த்தம் பண்ணுவதா இருந்தால் இது திருவள்ளுவரால் சொல்லப்பட்டதாகக் கருதமுடியாது; இக்கருத்துடைய வேறு யாரோ ஒருவர் இக்குறளைத் திருக்குறளிலே நுழைத்ததாகத்தான் எண்ண வேண்டும். இக்குறள் திருவள்ளுவரின் வாய்மொழிதான் என்று தீர்மானித்தால் வருணபேதத்தை ஆதரிக்கும் திருவள்ளுவருடைய கருத்திற்கு விரோதமில்லாமல்தான் பொருள் கூறவேண்டும். அதலால் இதற்குப் பரிமேலழகர் கூறியிருக்கும் உரைதான் பொருந்தும், பிறப்பொக்கும்” என்பதற்கு அவர் சொல்லியிருக்கும் பொருளைப் பாருங்கள்.
“வினைவயத்தால் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று, அதன் பயன் அனுபவித்தல், எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் பிறப்பு ஓக்கும்”. இது பரிமேலழகர் உரை.
எந்த வருணத்தாரும் பூர்வவினைகாரணமாகவே பிறந்தனர். அந்த வினைப்பயனை அனுபவிக்கவே பிறந்தனர். அதலால் எல்லாவுயிர்களும் பிறப்பதற்குக் காரணமா யிருந்தது. முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை என்ற ஒன்றுதான். அதில் வேற்றுமை யில்லை. இதுவே பரிமேலழர் கருத்து. வருணபேதம் உண்டு என்பவர்கள் இக்கருத்திலேயே பிறப்பு ஒன்று என்று கூறுகின்றனர்
பிறப்பிலேயே உயர்வு தாழ்வு உண்டு; பிறவியினால்தான் நல்லகுணம் கெட்டகுணம், உண்டாகின்றன; பிறந்த குலத்திற்குரிய தொழிலைச் செய்வதுதான் மக்கள் கடமை); என்ற விஷயங்களை, ஒழுக்கம், குடிமை, முதலிய அதிகாரங்களிலே திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இவற்றை முன்பே காட்டியிருக்கிறோம். இத்தகைய கொள்கையை யுடையவர் “பிறப்பொக்கும்” என்பதைப் பரிமேலழகர் கூறிய அர்த்தத்தில் தான் சொல்லியிருக்கவேண்டும். இல்லா விட்டால் திருவள்ளுவர் மொழி முன்னுக்குப் பின் முரணானது என்ற குற்றத்திற்கு இடமாகும்.
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மூன்று வருணத்திலும் பிறந்தவர்கள் பூணூல் அணிவதற்குமுன் சூத்திரர்களாகவே, எண்ணப்படுகின்றனர். பூணூல் அணிந்து, வேதம் ஓதித் தங்கள் கர்மானுஷ்டானங்களைப் பின்பற்றத் தொடங்கியபிறகுதான் பிராமணப் பெற்றோருக்குப் பிறந்தவன் பிராமணன் அகிறான். கத்திரியப் பெற்றோருக்குப் பிறந்தவன் க்ஷத்திரியனாகிறான், வைசியப் பெற்றோருக்குப் பிறந்தவன் வைசியன் ஆகிறான். அதுவரையிலும் இவர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பிறப்பில் வித்தியாசம் இல்லை. இந்தக்காரணத்தாலேயே இந்த மூன்று வருணத்தாருக்கும் “துவிசர்' என்று பெயர். துவிசர் என்றால் இருபிறப்பாளர் என்று அர்த்தம். பரிமேலழகர் கூறியபடி இவர்கள் வினைவசத்தால் வினைப்பயனை அனுபவிக்கப் பிறந்தவர்கள்.
மேலே காட்டியவைகளைக்கொண்டு, திருவள்ளுவர் எந்த வகையிலும் வருணபேதத்தைக் கண்டிக்கவில்லை; வருண பேதத்தை, ஜாதி முறையை, குலாச்சாரத்தை ஓத்துக்கொள்கிறார் என்பதை அறியலாம்.
பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு; உயர்ந்த ஜாதியில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களால்தான் சிறந்த காரியங்களைச் செய்யமுடியும்; என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் திருவள்ளுவரின் பிறப்புக்கதை கூட எழுதப் பட்டிருக்கிறது என்று கூறலாம்.
திருவள்ளுவர் அதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பிராமணருக்கும் பிறந்தவர். பகவன் என்பவர் வேதமோதிய சிறந்த ஓழுக்கமுடையவர்; வினைவசத்தால் புலைச்சியின் மீது மோகங்கொண்டார். அவருக்குப் பிறந்தவர்கள் இடைக்காடர், அதிகமான், ஓளவை, உப்பை, உறுவை, வள்ளி, திருவள்ளுவர் முதலியவர்கள். திருவள்ளுவர் வளர்ந்தது வள்ளுவர் வீட்டில்; ஆனால் அவருடைய பிறப்பு உயர்ந்ததாக இருந்ததால் அவர் பல நூல்களையும் கற்றார்; அறிவு ஓழுக்கங்களில் உயர்ந்து விளங்கினார்; திருக்குறள் என்னும் சிறந்த நூலை எழுதினார்.
இது ஒரு கற்பனைக்கதை யென்பதே பலர்கருத்து. ஆனால் “உயர்ந்த பிறப்புடையவர்களின் வாயிலிருந்துதான் சிறந்த சொற்கள் தோன்றும்” என்னும் திருவள்ளுவருடைய கொள்கையை ஒட்டி எழுந்ததுதான் இக்கதை.
ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுக்குள் சிறந்தது அறியவேண்டிய எல்லா விஷயங்களையும் படித்தறிந்த மக்களைப் பெறுவதுதான். இதைத் தவிர வேறு உண்டு என்று நாம் தெரிந்து சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின். (62)
ஒருவன் பிறரால் பழிக்கப்படாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்றிருப்பானாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் துன்பம் உண்டாகாது.
தந்த மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (67)
தந்தை மகனுக்குச செய்யவேண்டிய கடமை, அவனைப் படித்தவர்களின் கூட்டத்தில், சிறந்தவனாகக் கொண்டாடும் படி செய்வதுதான்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும், தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய். (69)
தாயானவள், தன் மகனைப்பற்றிக் கல்வியில் சிறந்தவன் ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பிறர் சொல்லக் கேட்டால், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடஅதிக மகிழ்ச்சியை அடைவாள்.
கல்வி கற்று ஓழுக்கமுடையவனாக நடந்துகொள்ளுதல்
மகனுடைய கடமை.
மேலே காட்டிய பாடல்கள் “புதல்வரைப் பெறுதல்” அல்லது “மக்கட்பேறு” என்னும் அதிகாரத்தில் உள்ளவை.
மகனுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும்; மகனை நல்லொழுக்க முடையவனாக்க வேண்டும்; மகனும் கல்வி கற்கவேண்டும்; நல்லொழுக்கங்களைப் பின்பற்றி நடக்கவேண்டும். இவை பிரம்மச்சரிய அஸ்ரமத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை. குருகுலத்திலிருந்து கல்வி கற்றலும், குருவின் கட்டளைப் படி. நடத்தலுந்தான் பிரம்மச்சாரியின் கடமை.
திருவள்ளுவர் காலத்தில் இப்பொழுதிருப்பது போன்ற பள்ளிக்கூடங்ககள் இல்லை. அக்காலத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டுமானால் ஆசிரியர்களின் வீடுகளில் வைத்துத்தான் படிக்க வைக்க வேண்டும். இதுதான் குருகுலவாசம். குருவின் வீட்டிலேயே இருந்து கொண்டு கல்வி கற்பதுதான் ஒருவன் பிரம்மச்சரிய நிலையில் இருக்கும் காலமும்.
பிரம்மச்சரிய அஸ்ரம தர்மம், கிரகஸ்த அஸ்ரம தருமம், இரண்டும் இல்லறவியலில் அடங்கிக் கிடக்கின்றன. இல்லறவியலில் உள்ள புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் பிரமச்சரிய தருமம் அடங்கி விட்டது.
வானப்பிரஸ்த அஸ்ரமமும், சந்நியாச அஸ்ரமமும் ஏறக்குறைய ஒன்றுதான். அதலால் இவ்விரண்டைப் பற்றியும் விரிவாகத் துறவறவியவில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பவைகளில் உள்ள முக்கிய விஷயங்களைக் கவனிப்போம். வானப்பிரஸ்த, சந்நியாச அஸ்ரமங்களில் செல்லுகிறவர்கள் பின்பற்ற வேண்டிய விரதங்களைப்பற்றியும், அவர்கள் பெற வேண்டிய அறிவைப்பற்றியும் திருவள்ளுவர் துறவறவியலில் கூறுகிறார்.
செல்வத்தில் சிறந்த செல்வம் கருணையாகிய செல்வமே யாகும். பொருளால் வரும் செல்வம் அற்பர்களிடமும் உண்டு. வானப்பிரஸ்தர்களும், துறவிகளும் எல்லா வுயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும்.
இவ்விரதங்கள் பெரும்பாலும் சமண சந்நியாசிகள் பின் பற்றும் விரதங்களைப்போல இருப்பதனால் திருவள்ளுவரைச் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்று சில அராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். இது ஆராய்ச்சிக் குரிய விஷயம்.
கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம்,
போக்கும் அது விளிந்து அற்று. (330)
ஒருவனிடம் பெரிய செல்வம் வந்து சேர்வது நாடகக் கொட்டகைக்கு, நாடகம் பார்ப்பதற்காக ஜனக்கூட்டம் வந்து கூடுவது போன்றதாகும். அச்செல்வம் அழிந்து விடுவது, நாடகம் முடிந்தவுடன் ஜனக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றதாகும். அதலால் செல்வம் நிலையற்றதென்று அறிந்துகொள்ள வேண்டும்.
பிறப்புஎன்னும் பேதமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (358)
பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை நீங்க வேண்டுமானால் மோட்சத்திற்குக் காரணமாக இருக்கின்ற உண்மைப் பொருளாகிய கடவுளை உணர்வதே அறிவாகும்.
ஆராவியற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா வியற்கை தரும். (370)
திருப்தி படையும் தன்மையற்ற ஆசையை, ஒருவன் விட்டு விட்டானாயின், அப்பொழுதே அந்த அசையின்மை அவனுக்கு மோட்சத்தைக் கொடுக்கும். அசை யின்மையே முக்தி பெறுவதற்கு வழியாகும்.
என்று உணரவேண்டும்; கடவுளை நம்பித் துதிக்கவேண்டும்; எப்பொருளிலும் அசையில்லாமைதான் முத்திக்கு வழியென்று காணவேண்டும்; தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு ஊழ்வினைதான் காரணம் என்று நம்பவேண்டும்; இவைகள் துறவிகளுக்கு வேண்டிய ஞானமாகும்.
துறவற இயலில் வானப்பிரஸ்தர்களும், சந்நியாசிகளும், அனுஷ்டிக்க வேண்டியன என்று கூறப்படுபவைகளும், அறிய வேண்டும் என்று கூறப்படுபவைகளும் புதியவைகள் அல்ல; முன்னோர் நூல்களில் அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தர்மத்தையே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
துறவறவியலில் 13 அதிகாரங்கள் உள்ளன. இவற்றுள் முதல் 10 அதிகாரங்கள் சிறப்பாக வானப் பிரஸ்தர்கள் பின்பற்ற வேண்டிய தா்மங்களைக் கூறுகின்றன; மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்னும் மூன்று அதிகாரங்கள் துறவிகளின் தர்மங்களைக் கூறுகின்றன; என்பது சில அறிஞர்களின் கொள்கை.