கொல்லா விரத்தையும் மேற்கொண்டு மாமிசம் தின்னுவதையும் நீக்கியவனை எல்லாவுயிரும் கைகூப்பி வணங்கும்.
அருள் என்பது எல்லாவுயிர்களிடத்தும் பேதமில்லாமல் காட்டும் கருணையாகும். இத்தகைய கருணை மாமிசம் உண்பர்களுக்கு உண்டாகாது என்பது வள்ளுவர் கருத்து.
உண்ணற்ககள்ளை, உணில், உண்க, சான்றோரால்
எண்ணப்பட வேண்டாதார். (921
அறிவுடையவர் கள்ளை உண்ணக்கூடாது; உண்ண நினைப்பாராயின் அறிவுடையவர்களின் மதிப்பு, தனக்கு வேண்டாம் என்று நினைப்பவர் உண்ணட்டும். கள்ளுண்பவர் அறிவையிழப்பர்; அறிவுடையவர்களால் மதிக்கப்படமாட்டார்.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால், என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. (923)
கள்ளுண்டவன் தன் தாயின் எதிரில் கூட மதிக்கப்பட மாட்டான்; மானம் இழப்பான். அகவே கள்ளுண்டு மயங்கியவன் சான்றோர்களின் எதிரில் எந்த நிலையை அடைவான்?
களித்தறியேன் என்பது கைவிடுக, நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (928)
கள்ளுண்டு அறியமாட்டேன் என்று பொய் சொல்லு வதைவிட்டு விடுக; கள்ளுண்டு களித்திருக்கும் சமயத்தில் முன்பு சொல்லிய பொய்யும் வெளிப்பட்டுவிடும்.
களித்தானைக் காரணம் காட்டுதல், கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. (929
கள்ளுண்டு களித்திருப்பவனுக்கு நீ கள்ளுண்ணக் கூடாது என்று காரணங்கள் காட்டி விளக்கிக் கூறுவதால் பயனில்லை. அவ்வாறு செய்வது நீருக்குள் மூழ்கி யிருப்பவனை விளக்கைக் கொண்டு தேடுதல்போல ஆகும்.
மது மாமிசங்கள் முன்னோர் நூல்களில் மறுக்கப்பட வில்லை. வேதங்களில், வேதகாலத்து மக்கள், மாடு, ஆடு போன்ற பலவகை மிருகங்களை வேட்டையாடியும், யாகஞ்செய்தும் உண்டனர். சோமலதையின் சாற்றைப் புனிதமாகக் கருதி உண்டு மயங்கினர்.
தமிழ் இலக்கியங்களிலும் திருக்குறளுக்கு முந்திய எந்த இலக்கியங்களிலும் மாமிசமும் மதுவும் விலக்கப்பட வில்லை; இவைகளை உண்பதால் பழிபாவம் வரும் என்று கூறப்படவும் இல்லை. சங்க நூல்களின் காலத்தில் இருந்த தமிழ்மக்கள் எல்லோரும் மாமிசமும் மதுவும் உண்டு மயங்கி மகிழ்ந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலே காணலாம்.
துன்னல் சிதாஅர் நீக்கித், தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்,
பெறல் அரும் கலத்தில், பெட்டாங்கு உண்கெளப்,
பூக்கமழ் தேறல் வாக்குபுதரத்தர,
வைகல் வைகல், கைகவி பருகி, (154-158)
நீங்கள் கரிகால் பெருவளத்தானிடம் சென்றால் அவன் உங்களுடைய “பலதையல்களுள்ள நைந்த துணியை அவிழ்த்து எறியும்படி. செய்வான்; சுத்தமான கொட்டைக் கரை போட்ட பட்டாடை கொடுப்பான்; கிடைப்பதற்கு அருமையான பாத்திரத்தில், “வேண்டி௰ அளவு உண்ணுங்கள்” என்று சொல்லி பூமணம் வீசம் கள்ளை ஊற்றிக் கொடுக்கக் கொடுக்க, ஓவ்வொருநாளும் பெற்றுக் கைகூப்பி வணங்கிக் குடித்து” மகிழ்வீர்கள்.
இது பொருநர் ஆற்றுப்படை. பொருநர் அற்றுப் படை யென்பது பத்துப் பாட்டில் ஒரு பாட்டு. இது இளஞ் சேட்சென்னி என்னும் சோழமன்னவன் புதல்வனாகிய கரிகால் பெருவளத்தான் என்னும் சோழமன்னனைப்பற்றி முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவரால் பாடப்பட்டது.
வல்லோன் அட்ட பல்ஊன் கொழுங்குறை
அரிசெத்து உணங்கிய பெரும்செந்நெல்லின்
தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல்
அரும்கடித் தீம்சுவை அமுதொடும் பிறவும்
விருப்புடை மரபில் காப்புடை அடிசில்
மீன்பூத்தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பில் தான்நின்று ஊட்டி (472-470)
சமையல் செய்வதில் வல்லவன் சமைத்தபலவகையான இறைச்சிகளின் கொழுப்பான தசைகள், நன்றாகக் காயவைத்த சிறந்த செந்நெல்லிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அரிசியால் சமைத்த சோறு, நல்ல வாசனையும் இனிமையும் பொருந்திய தித்திப்பு உணவு, இன்னும் மற்றபண்டங்கள், விருப்பத்துடன் உண்ணக்கூடிய சிறந்த உணவு அகியவைகளை பெரிய வெள்ளிப் பாத்திரங்களிலே பரிமாறுவான். உங்களுடைய குழந்தைகளின் முகங்களை வரிசை வரிசையாக நோக்கி மகிழ்ச்சி அடைவான். மிகுந்த அன்புடன் தானே உணவுகளை எடுத்து அவர்கள் வாயில் ஊட்டுவான். உங்களையும் உண்ணச் செய்வான்.
இது பெரும்பாணாற்றுப்படை. பெரும்பாணாற்றுப் படை யென்பது பத்துப் பாட்டில் உள்ள மற்றொரு பாடல். இப்பாடல் காஞ்சியை யாண்ட மன்னவனாகிய தொண்டைமான் இளந்திரையனைப்பற்றிக் கடியலாரர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரால் பாடப்பட்டது.
சிறிது கள் கிடைத்தால் அதனை எங்களுக்குக் கொடுத்து விடுவான். அதிகமான கள் கிடைத்தால் அதனை நாங்கள் உண்டு பாடல்பாட, மிஞ்சியதை அவனும் மகிழ்ந்து உண்ணுவான். கொஞ்சம் சோறு கிடைத்தாலும், அதைப் பல பாத்திரங்களில் பரிமாறிப் பலருடன் உண்பான். அதிக சோறு கிடைத்தாலும் பல பாத்திரங்களில் பரிமாறிப் பலரோடும் உண்பான். எலும்பும் தசைகளும் கலந்த உணவு கிடைக்கும் இடங்களையெல்லாம் எங்களுக்குக் கொடுப்பான். அம்பும் வேலும் நுழைந்துவரும் போர்க்களங்களில் எல்லாம் தான் சென்று முன்னிற்பான். இப்பாடல் அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் அரசனைப்பற்றி அவ்வையார் பாடியது. அவன் இறந்த போது, அவன் பெருமையைப் பற்றிக் கூறி வருந்தியது.
மேலே கூறிய பாடல் பகுதிகளிலிருந்து, தமிழ் நாட்டிலும் மது மாமிசம் உண்டல் இழிவாகக் கருதப்பட வில்லை; விலக்கப் படவில்லை; என்பதை உணரலாம்.
புத்த மதமும், ஜைனமதமும் பரவிய காலத்தில் மாமிசம் உண்ணாமைதான் உயிர்க்கருணை அதாவது ஜீவகாருண்யம் என்னும் கொள்கை இந்தியாவில் பரவிற்று. வேகத்தை அடிப்படையாகக் கொண்ட மதங்களும் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டன. புத்த, சமண மதங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்து இந்துமத அச்சாரியார்கள் அனைவரும், புலால் உண்ணாமையையும் மதச் சீர்திருத்தமாகக் கொண்டனர். இக்கொள்கையையே திருவள்ளுவரும் கூறினார்.
தமிழ் நூல்களிலே முதல் முதலில், மதுவையும் மாமிசத்தையும் கண்டித்து எழுதிய நூல் திருக்குறள்; அவைகளை முதல் முதலில் கண்டித்தவர் திருவள்ளுவர். தமிழ் நூலாராய்ச்சி யுடையவர்கள் இவ்வுண்மையை அறிவார்கள்.