நேற்று திரு.கி.வீரமணியின் ‘உடையும் இந்தியாவா உடையும் ஆரியமா’ வசையரங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான வசையரங்கு என்பது மட்டுமல்ல. அவர்களின் அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.
முதலில் முனைவர் மங்கள முருகேசன் ஆரம்பித்தார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக திருஞானசம்பந்தர் ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று சொன்னதாக சொல்லி திராவிட இனத்தின் தொன்மையை நிறுவினார். முனைவருக்கு அந்த வார்த்தைகளை கூறியவர் திருஞானசம்பந்தர் அல்ல, அப்பர் என யாராவது சொன்னால் நல்லது.
அப்புறம் வந்தார் முனைவர் ராமசாமி. ஒரு ஆய்வு நூலுக்கு இரண்டு பெயரா? அதுவும் முடிவை முதலிலேயே சொல்லலாமா என்றெல்லாம் அகாடமிக்காக மிரட்டினார். “The Origin of Species by Means of Natural Selection, or The Preservation of Favoured Races in the Struggle for Life” என்று தன் நூலின் பெயருக்கு தலைப்பு வைத்த டார்வின் அன்னாரிடம் மாட்டியிருந்தால் என்னவாகியிருப்பார் என நினைத்து வியந்தேன். டார்வின் தப்பினார். அதோடு அவர் நிறுத்தவில்லை. குமரிக் கண்டம் இருப்பதற்கு சாட்டிலைட் சான்றுகள் இருப்பதாக உண்மையிலேயே ‘படம் காட்டுவதாக’ மிரட்டினார். அந்த ‘சாட்டிலைட் சான்றுகளை’ பெரியவர் வெளியிட்டால் நன்றாக இருக்கும். குமரி கண்டம் எனும் ‘திராவிட பெருமை’ குறித்து மற்றவர்களுக்கு என்ன என அவர் கேள்வி கேட்டார். ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர், சு.கிறிஸ்டோபர் ஜெயகரன் எனும் நிலவியலாளர்.
அப்புறம் இந்த நூலில் அண்ணாதுரையை சிஐஏ ஏஜென்ட் என கூறியிருப்பதாக சொன்னதுதான் அவர் பேச்சின் உச்சகட்ட காமெடி. உண்மையில் ‘உடையும் இந்தியா’ நூல் டி.என்.சேஷன் எழுதிய பிரபல நூலின் ஒரு பகுதியை மட்டுமே மேற்கோளாகக் கூறுகிறது:
அதன் பின்னர் பேசிய வீரமணியும் வழக்கம் போல மனுஸ்மிருதியில் திராவிடன் என்று உள்ளது என்றார். 56 தேசங்கள் இருப்பதாக தெருக்கூத்துகளில் கூட சொல்வதாக சொன்னார். 56 தேசங்களின் பெயர்களையும் (பார்த்து) வாசித்தார். திராவிடத்தில் சூத்திரர்கள் அரசாட்சி செய்வதாக மனுஸ்மிருதி சொல்வதாக சொன்னார்.
உண்மையில் அவர் கூறிய மனுஸ்மிருதி பகுதிகள் ‘உடையும் இந்தியா’ கூறும் வாதங்களுக்கே வலு சேர்ப்பதாக அமைந்தன. ‘உடையும் இந்தியா?’ நூல் என்ன சொல்கிறது? பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை சமூக வெளிகள். சாதிகள் என்பவை ஒவ்வொரு வர்ணம் எனும் சமூக வெளியின் உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதாக உள்ளன. அந்த இயக்கம் சமூக-பொருளாதார மற்றும் அரசியலதிகார காரணிகளால் நிர்ணயிக்கப் படுகின்றனவே அன்றி இனத்தால் அல்ல.
இதுதான் சாதியம் குறித்த – சாதியத்தை ஆதரிக்காத – ‘உடையும் இந்தியா?’ நூலின் நிலைபாடு. இந்த வரலாற்றுப் பார்வையையே வீரமணி சுட்டிய மனு ஸ்மிருதி பகுதிகள் (மனு 10:43-45) விளக்கின. ஏனெனில் அங்கு ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஆரிய’ என்பதும் சமூக அந்தஸ்து சார்ந்த பதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவு. புத்தரும் தமது தருமத்தை ஆரிய தருமம் என்றே கூறுகிறார்.
இவை தவிர பல நகைசுவை துணுக்குகளையும் கேட்க முடிந்தது. உதாரணமாக சிராஜ் உத் தவுலாவை பிரிட்டிஷாரிடம் காட்டிக் கொடுத்தது ஒரு பார்ப்பனன் என்று சொன்னார் வீரமணி. சிராஜ் உத் தவுலாவுக்கு எதிராக மிக முக்கியமாக செயல்பட்டவர் நால்வர். அவர்களில் இருவர் இஸ்லாமியர். ஒருவர் சீக்கியர். மற்றொருவர் இந்து. அந்த இந்துவும் பார்ப்பனரல்லர். சிராஜுக்கு எதிராக பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்ட இந்த துரோக கும்பலின் தலைவர் மிர் ஜாபர். அவரே அடுத்த நவாபாக பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டார். வீரமணிக்கு முன்னால் பேசிய “பேராசியர் ராமசாமி” நாலந்தா பல்கலைக்கழகத்தை எரித்தவர் குமாரில பட்டர் என்று கூறினார். நாலந்தாவை எரியூட்டியவர் இஸ்லாமிய போர்த் தளபதியான பக்தியார் கில்ஜி. கூடவே இவர் இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது.
மரபணு ஆராய்ச்சிகளை ‘ரத்தம் கலந்துவிட்டது’ ‘ரத்த குரூப்பை ஆராய்ச்சி செய்தால்’ என்றெல்லாம் சொன்னார் வீரமணி. மரபணு ஆராய்ச்சி வேறு ரத்த வகை குறித்த ஆராய்ச்சி வேறு. மானுட குழுக்களின் புலப்பெயர்வுகளை க்ரோமோஸோம்களில் –குறிப்பாக Y க்ரோமோஸோம்களில்- அமைந்துள்ள மரபணு அடையாளங்காட்டிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ஆரிய திராவிட இனவாதம் இன்று உடைக்கப்படுகிறது.
ஆக, ‘உடையும் இந்தியா?’ நூலை உடைக்க கழகத்தவர்கள் இன்னும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். படிக்க வேண்டும்.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
இருப்பினும் நாம் இருப்பது போலத் தானே இருக்க முடியும்? சிலர் ஓயுந்து விடுவார்கள் என்னைப் போல. சிலர் இன்னமும் நம்பிக்கையுடன் முயல்வார்கள் உங்களை ப் போல. உங்கள் முயற்சிகள் வெல்ல வாழ்த்துக்கள்.
ஒன்று கடைசியில். இழக்க ஒன்றுமில்லாத, திறந்த மனதுடன் இருக்கும் வளரும் இளம் தலைமுறையினருக்கு உங்கள் முயற்சிகள் விழிப்புணர்வைத் தரும்.
அது என்னது குமரி கண்டம். பொய் சொல்வதற்கும் ஒரே அளவு வேண்டாம். இவர்கள் சொல்லும் நிலப்பரப்பு 2 கிலோ மீட்டர் கடலுக்கு அடியில் உள்ளது. எதோ 100 மீட்டர் ஆழத்தில் இருந்தால் கூட எதாவது இருக்கலாம் என்று சொல்லலாம். ௨ கிலோ மீட்டர் …ஹ்ம்ம்…. பூசணி காய் தோட்டத்தையே சோற்றில் மறைப்பார்கள் போல் இருக்கிறது…
வலிக்குது;
அழுதிருவேன்.
# வீரமணி
யார் பாடியிருந்தாலும் இதை இனத்தைச் சுட்ட பாடவில்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அப்பர் பெருமான் இங்கே ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ (திருமறைக்காட்டு திருத்தாண்டகம்) என்று சிவபெருமானையே பாடுகிறார். ’பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே’ என்ற மாணிக்கவாசகத்தையும் நோக்குக.