அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற வெளிசக்தி (external field) இல்லை என்ற உணர்வில் உறுதி ஏற்பட்டது. இதை சொல்வதற்குக் காரணம் நான் வறட்டு நாத்திகம் பேசுபவன் அல்ல என்பதை உணர்த்துவதற்காகவே.மற்றபடி பாரதியின் ‘காணும் இடமெல்லாம் நான்’ என்னும் கோட்பாடு, ஐன்ஸ்டினின் ‘உலகம் ஒரு சுழற்சி’, ராமகிருஷ்ணரின் ‘நிர்சலனம்’ என்ற உணர்வு ஆகியவை புரியாவிட்டாலும் அவைகளில் உள்ளவைகளை என்னால் இப்போதைக்கு மறுக்க முடியவில்லை. புரியாததால் அல்லது அனுபவிக்காததால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை. இப்போதைக்கு அவற்றை மதிக்க மட்டுமே முடிகிறது.
வேதங்களும், உபநிடங்களும் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் இப்போதைக்கு இல்லை.
என்னுடைய இந்தக் கடிதம் அது குறித்தான என்னுடைய முயற்சியின் முதல் கட்டம் என்றே நினைக்கிறேன். கேள்வி நேரடியாக இல்லாவிட்டாலும், எனக்குத் தெரியும் பதில் அதை நோக்கிய பயணமாகவே இருக்கும். கேள்விக்கே வருகிறேன். நான் ஏன் இந்து?. எனக்கு அது தாய் மதமா அல்லது அந்நிய மதமா?. அதுதான் இந்து மதத்தின் சக்தி என்று தயவு செய்து எல்லாரையும் போல் நீங்களும் சொல்ல வேண்டாம். (எனக்கு இது அபத்தமாகவே படுகிறது, பைபிளில் இப்போது ஒரு அதிகாரத்தை உருவாக்கி அதில் கருப்பசாமியைப் பற்றி எழுதி விட்டால் நான் கிறிஸ்துவன் ஆகி விடுவேனா? என்பது போல் கேள்விகளை எனக்குள் அவை எழுப்பும்.).
இந்து என்பதை வரையறுக்க முடியவில்லை என்ற ஒரு காரணமோ அல்லது அரசியல் அமைப்பு சட்டத்தில் புத்த, கிறிஸ்துவ, முஸ்லிமாக இல்லாதவர்கள் இந்து என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
எனக்கும் சக இந்துவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மொழியில்லை, பொது உணவு இல்லை, பொது வழக்கம் (வழிபடுவதில் கூட) இல்லை, ஏன் பொதுக் கடவுளே கூட இல்லை. இதுதானே உண்மை?எனக்குத் தெரிந்து எனது தாத்தாவின் தலைமுறையில் குலதெய்வ வழிபாட்டைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை (அல்லது அவர்கள் சொல்லியும் கேட்டதில்லை). என் தலைமுறையில்தான் எங்கேயோ இருக்கும் திருப்பதியிலும், சபரிமலையிலும் இருப்பதைக் கடவுள் என்று எண்ணும் போக்கு என் போன்ற கிராமத்தின் வழி வந்தவர்க்கு ஏற்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு கூட நிறைய பிரசித்தி இல்லை, ஒரு தலைமுறைக்கு முன் வரை.
எனக்குத் தெரிந்து என் கிராம மக்கள் வணங்கியது இதுவரை கருப்பசாமி, சுடலைமாடன், கன்னியம்மன் போன்ற கிராம தெய்வங்கள்தான். மிஞ்சிப் போனால் இருக்கன்குடி கோவிலுக்குக் கடா வெட்ட சென்று வருவார்கள், அவ்வளவுதான். இவர்கள் (என்னையும் சேர்த்து) அனைவருக்கும் ராமாயணம் கதையாக மட்டுமே தெரிந்திருக்கிறது (அதுவும் கம்பரால், அல்லது பட்டி மன்றங்கள் மூலமாகவா என்று தெரிய வில்லை). எங்கள் கிராமத்தில் சுற்றியோ அல்லது எளிதில் அடையக் கூடிய தொலைவிலோ எந்த சிவன் கோவிலும், ராமர் கோவிலும் இல்லை (அல்லது இருந்தது இல்லை). எனக்குத் தெரிந்து என் மூதாதையரில் கீதையோ, வேதமோ படித்தவர்களோ அல்லது படிக்க நினைத்தவரோ கூடக் கிடையாது.
இப்போது என் கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு இருந்தும் நான் ஏன் இந்து? அல்லது இந்து என்ற மதமும் பிற அந்நிய மதங்களை என் மேல் திணிக்கப்பட்ட மதமா?
அது எங்கிருந்து என்னை நோக்கி வந்த மதம்? கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமிற்கும், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் தூரங்கள் மட்டும்தான் வித்யாசமா? ஒரு வேளை அது சமீப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்றால், அதற்கு முன் என் மூதாதையர்களுக்கு எந்த மதமும் கிடையாதா? அவர்களுக்கு என்று எந்த வழிபாட்டு முறையும் கிடையாதா?. மனிதனின் ஆதி காலத்தில் மதம் இருந்திருக்காது, எல்லா மதங்களுமே பிற்பாடு வந்ததுதான் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
என் கேள்வி என்னுடைய கிராமத்திற்கு என்று தனிப்பட்ட வழிபாட்டு முறை இல்லையா? அல்லது கூடிய விரைவில் இல்லாமல் போகுமா?. இப்போது என் தலைமுறையில் நான் பார்க்கும் முக்கியமான மாற்றம் கோவிலில் படைக்கும் உணவு குறித்தது. படித்த (அல்லது அப்படி கூறிக்கொள்ளும்) வட்டம் கோவிலில் அசைவம் சாப்பிடுவதைப் பாவம் போல் பார்க்கத் தலைப்படுகிறது. அவர்களுக்குப் பெரிய கோவில்கள் எனப்படும் கோவில்கள்தான் அழகுடனும், சக்தியுடனும், தெய்வாம்சத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறது. நம்ம சாமிக்குப் பிடிச்சத நம்ம படைக்கிறோம் என்ற என் வாதம் அங்கு எடுபடவில்லை. (முற்றிலுமாக உடல்நலத்தைக் காரணம் காட்டி நான் அசைவத்தை மறுப்பதை ஆதரிக்கிறேன். ஆனால் இது வேறு. வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனால் கோவிலில் ஒரு குற்ற உணர்வோடுதான் சாப்பிடுவார்கள் அல்லது மறுப்பார்கள்).
அதே போல நீத்தார் கடன் கொடுக்கு வழக்கம் எனக்குத் தெரிந்து என் தாத்தாவோ, பாட்டியோ செய்ததில்லை. இறந்த பதினாறாம் நாள் காரியம் செய்ததோடு சரி என்பது அவர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது. இப்போது அந்த வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த மாற்றங்கள் நல்லதா தீயதா என்பதல்ல என் கேள்வி. என் கேள்வி கீதையும், வேதங்களும் எனக்கு பைபிள் அல்லது குரானைப் போல மட்டும்தானா? அல்லது எனக்கும் இவைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதுதான்.
தெளிவாகக் கேட்டு விட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அன்புடன்,
காளிராஜ்.
[ஏரல் அருணாச்சல சுவாமி கோயில் முகப்பு]
அன்புள்ள காளிராஜ்,