Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 096 குடிமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
096 குடிமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


openQuotes.jpgநற்குண நற்செயல்கள் இயல்பாக அமையப்பெற்ற குடியில் பிறந்தவர்களைப் பற்றிக் கூறுவதுதான் 'குடிமை' என்ற பகுதி. அப்பெயரும் அக்கருத்தினையே வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.
- வீ முனுசாமி

 

உயர்குணங்கள் கொண்டோரைக் குடிப்பிறந்தார் என அழைக்கிறார் வள்ளுவர். அவர்களை இல்பிறந்தார், குடிப்பிறந்தார், வாய்மைக்குடி, பழங்குடி, மாசற்றகுடி, குலத்திற்பிறந்தார் எனவும் வழங்குகிறார். இவர்களிடம் இருக்கவேண்டிய குடிமைப் பண்புகளாக அதாவது நற்குணங்களாக அவர் காட்டுவன: நேர்மை(செப்பம்), நாண், ஒழுக்கம், வாய்மை, நாண், நகை, ஈகை, இன்சொல், யாரையும்இகழாமை, செல்வத்திற்காகக் குணம் கெடாமை, செல்வம் குன்றியபோதும் கொடுப்பதில் குறையாமை, வஞ்சனையிலாமை, குற்றம் நீங்கியமை, அன்பின்மை தோன்றாமை, மேம்பாடான பேச்சு, பணிவுடைமை ஆகியன. இவற்றுள் நாண் அதாவது தீயன செய்ய அஞ்சுதல் என்னும் குணம் மட்டும் இவ்வதிகாரத்திலேயே மூன்று குறள்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

குடியியல்:

பொருட்பாலின் இறுதியில் குடிமக்களுக்காக ஒரு இயல் ஒதுக்கினார் வள்ளுவர். ஒரு நாட்டின் இன்றியமையா உறுப்பாகிய குடிமக்களைப் பொறுத்தே, நாட்டின் பெருமையும் சிறப்பும் பண்பாடும் அமைகின்றன. பரிமேலழகர் தவிர்த்த மற்ற உரையாசிரியர்கள் இதைக் குடியியல் என்று அழைக்கின்றனர். (பரிமேலழகர் இப் பகுதியைப் பல்பொருள் கலவையான மிச்சமீதி இருக்கிற ஒன்றாக வேறு எங்கிலும் சொல்லப்படாதவை விளக்கப்படுவதற்கு உரியதாக விளங்குகிறது என்ற பொருளில் இதை ஒழிபியல் எனக் கூறுவது வள்ளுவரின் பெரும்பங்களிப்பை உணராதிருக்கிறது.) குடியியலில் குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நாணுடைமை, குடி செயல்வகை, உழவு, இரவச்சம் என்ற ஒன்பது அதிகாரங்களில் குடிமக்கள் மேற்கொள்ள வேண்டிய குணங்களையும் குறிக்கோள்களையும் கடமைகளையும் சிறப்புக்களையும் தொகைவகை செய்து திட்பமுறக் கூறியுள்ளார் வள்ளுவர். குடிமக்களுக்கு ஆகாத இயல்புகள் நன்றியில் செல்வம், நல்குரவு. இரவு. கயமை என்ற நான்கு அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
ஓர் அரசமைப்பை வரையறை செய்யும் பொருட்பாலின் முதல் குறளில் குடி என்ற சொல்தான் கூறப்பட்டுள்ளது; அங்கு நாடு என்ற சொல் காணப்படவில்லை. தெ பொ மீனாட்சிசுந்தரம் 'குடிகளே குடிமக்களாகி நாட்டை ஏற்படுத்துகின்றனர். குடிமக்கள் நிறைமனிதர்களாக இருந்தால்தான் நாடு என்பதன் நோக்கம் நிறைவேறும். இங்கே நிறைவு பற்றிப் பேசுவதற்குக் காரணம், பல்பொருள் கலந்த பகுதியில் மானுட உயிரின் மகத்துவம், நாட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அடைய வேண்டிய உயர்வைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மானிட உயிர்களும் குடிமக்களும் நாட்டின் உறுப்பினர் ஆவர். நாடு மக்களின் நலனுக்குக்காகத்தான் உள்ளது. அறத்துப்பாலில் மானுட நிறைவு பற்றிக் கூறியுள்ள விரிந்த பொருளில் திருவள்ளுவரால் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளைப் பார்க்கும்போது, பொருட்பால் அறத்துப்பாலின் துணையாகப் பயன்படுகிறது. இதுபோன்று முழுமையாக அடைவதற்கு இது போதுமான சூழ்நிலையயும் சமுதாயப் பொருளாதார அளவில் ஏற்படுத்துகிறது..... பொருட்பாலின் இறுதியில் குடிமக்கள் முழுமைக்கு உரியதாக விளக்கப்படும்படி அவர்கள் நாட்டின் மணிமுடியாகவும் புகழாகவும் விளங்குகிறார்கள் என்பதைக் காட்டும். இதுதான் திருவள்ளுவரின் பெருங்கொடை' என்பார்.
நாட்டுக்குக் குடிகள் இன்றியமையாதன என்றது நாடு என்ற அதிகாரத்து முதற் குறளில், 'தள்ளா விளையுளும் தக்காரும் செல்வரும் சேர்வது நாடு' என்பதில் வற்புறுத்தப் பெற்றது. குடிகட்கே முதன்மை தந்து நாட்டினியல்பை விளக்கினார் வள்ளுவர். தக்கார் என்றசொல் சுட்டும் குடிமக்களது இயல்பு, குடிமை என்ற அதிகாரத்தாலே உணர்த்தப்படுகிறது. குடிகளது இயல்பைப் பொது வகையில் கூறி, அதில் குறிப்பிடப் பெற்ற நாணம் முதலிய குணங்களை மானம் முதலிய சிறப்பு அதிகாரங்களால் முறையே உணர்த்திச் செல்கின்றார். குடிமக்கள் தகவும் சால்பும் பண்பு மிக்கவராகத் திகழின் அவரினின்றும் உருவாகுவோர் நாட்டுப்பற்றுடன் தத்தம் கடமைகளைச் சரிவரப் புரிந்து நாட்டின் மேம்பாட்டினைப் பேணிக்காப்பர். குடியியல் இன்றியமையாத சமூக-வாழ்வியல் கட்டுமானத்தை விளக்குவதாக உள்ளது.
மக்களின் பல கூறுகளுக்கும் அடிப்படையான குடி, குடும்பம் என்ற அமைப்பின் சிறப்பையும், அதன் உறுப்பான தனிமாந்தர்தம் இயல்புகளால் அவர்களும் அவர்களால் அவர்களது குடியும் எங்ஙனம் அமையின் நலம் பயக்கும் என்பதனைக் குடிமையியல் விரித்துரைக்கிறது.

குடிமை:

குடியியலில் முதலிலுள்ள குடிமை அதிகாரம் குடிப்பிறந்தார்‌ தன்மை கூறுகிறது. இவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இல், குடி, குலம் என்பன சமுதாய வாழ்வில் மக்களின் உயர்வைக் குறிக்கும் ஒரு பொருட் சொற்களாம். இதில் 'இல்' என்பது வீட்டிற் பிறந்த நற்குணமுடையோரையும் குடி என்பது அங்ஙனமாய்ப் பலர் கூடிய குடும்பத்தையும் குலம் என்பது குடும்பம் பல கூடிய ஒரு தொகுதியையும் உணர்த்துவன. குலம் குலை என்பதினடியாகப் பிறந்த சொல். ஒரு குலையில் காய்த்தவை போல, உறவுடைய வழிமுறையில் வருபவர்கள் ஒரு குடியினராவர். குலம் என்பது வழித்தோன்றல் முறையைக் குறிப்பதுவேயன்றி வேறல்ல.
குடும்பமே சமுதாயத்தின் சிறிய அலகு அதாவது சிற்றெல்லை. குடும்பம் பல சேர்ந்ததே குடி. குடிமை என்பது குடியிலிருந்து விரிந்து குடிமக்களாவரது பண்பைக் குறிக்கிறது.
தமிழண்ணல் 'குடி என்ற பெயர்ச்சொல், சங்க காலத்தில் பெருவழக்கினதாகும். தமிழக மக்கள் தாம் வாழ்ந்த நிலம், ஊர், உறவு, தொழில் காரணமாக ஒரு குடியினர் எனப்பட்டனர். ஓவியர்குடி, ஆவியர்குடி, வேளிர்குடி, ஆய்குடி என ஆள்வோர் குடிகள் பல விளங்கின. குடும்பம் என்ற சொல் சங்கப் பாடல்களில் காணப்பட்டிலது. ஆயினும் குடும்பன், குடும்பி, குடும்பம் என்பன வழக்கிலிருந்துள்ளன. தாய் தந்தை மக்கள் அடங்கிய ஒரு வீட்டாரை, ஒரு குடும்பம் என்றனர். குடம்பை என்ற சொல், பறவைகளின் கூட்டைக் குறித்தது. குடம்பை போலவே மக்கள் வாழிட மரபு நோக்கி, குடும்பம் என்றனர். ....மாந்தர்க்குத் தத்தம் குடிமீது அளவற்ற மதிப்பும் பற்றும் பாசமும் உள்ளன. சிலசமயம் இக்குடி என்பதே, சாதியோ என்று மயங்கத் தோன்றும்' என்பார்.
குடும்பம், அதைச் சுற்றி உடன் பிறந்த உறவின் முறையார் ஆகிய சுற்றம், ஆகிய இரண்டுமே குலம் எனப்படும். வாழும் ஊரால், தொழிலால், குருதிவழி உறவால் குடிகள் பல அமைதல் இயல்பேயாகும். குடும்பம் குலம் சுற்றம் என்ற பாகுபாடுகள் குடியமைப்பின் விரிவுகளும் பகுப்புகளுமாம். இவை ஒரே மூலத்தில் வளர்ந்தவை. இது கூட்டம், வகையறா, வீடு, குடியார் என்றவாறு பல பெயர்களில் வெவ்வேறு வட்டாரங்களில் அறியப்படும். குடிமை, குடும்பத்துக்குரிய நற்குடி உறுப்பினர் பண்பு கூறுவது. ஒருவரது உயர் பிறப்பை வற்புறுத்துவதாக உள்ளது அதாவது பிறப்பை உயர்வாக்குவதைச் சொல்கிறது இது. நற்குணங்களுடன் இருந்தால்தான் அது உயர்குடிப் பிறப்பு எனச் சொல்லப்படும்; நற்குணங்கள் கொண்டவர்களை மட்டுமே உயர் குடியாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருந்தாலும் மனித உயிர்களை நிறைவு அடையச் செய்வது குடும்பத்தின் முக்கியத்துவம் ஆகும். சமூகக் கடமைகளுக்குத் தனிமனிதர்களின் முழுமையும் கட்டுப்பாடும் தேவைப்படுகின்றன. குடிமை அதிகாரத்தில் தனிமனிதர் நிறைவு பற்றி மிகவும் பேசப்படுகிறது. அவர் நல்லாரோடும் நல்லவற்றோடும் பொருந்துதலும் தீயாரோடும் தீயவற்றோடும் மருவாமையும் பற்றியது இப்பாடல் தொகுப்பு.

'ஒழுக்கம் உடைமை குடிமை' (133) என்பது குடிமைக்கு வள்ளுவரே சொன்ன பொருள் வரையறை ஆகும். அப்பாடலில் உள்ள 'குடிமை' என்பது நற்குடிப்பண்பு என்னும் பொருளது. நல்ல குடியில் பிறந்தவர்களுக்கு உயர்ந்த பண்புகள் இருக்கும். அதனால் குடிப்பிறப்புக்கே தனிச் சிறப்பு தந்து போற்றினார்கள். குடிவழியாகச் சிறந்த பண்புகள் வளர்ந்து வந்தன. 'அது யார் வீட்டுப்பிள்ளை?' என்று கேட்டு அதனது பண்பை உய்த்துணரும் வழக்கம் உண்டு. குடிப்பண்புக்கு மாறுபடுதலும் உண்டு ஆனால் அவை மிக அருகியே இருக்கும்.
குடிப்பிறந்தார் என்பது நற்குடிப்பிறந்தாரைக் குறிக்கும் சொல். நற்குண நற்செயல்கள் இயல்பாக அமையப்பெற்ற குடியில் பிறந்தவர்களைப் பற்றிக் கூறுவதுதான் 'குடிமை' என்ற இப்பகுதி. நற்குடியில் பிறந்தவர்களிடம் நேர்மையும் தீச்செயல் புரிவதற்கு அஞ்சும் குணமும் (நாண்) ஒருசேர இயல்பாக அமைந்திருக்கும் என்கிறார் வள்ளுவர். இவைதவிர்த்து இவ்வதிகாரத்தில்‌ கூறப்படும்‌ குடிப்பிறந்தாரின்‌ பண்புகளாவன: ஒழுக்கம்‌, வாய்மை, நகை, ஈகை, இன்சொல், இகழாமை, பணிவு என்பனவாம்‌. இவ்வொழுக்கங்கள்‌ குறித்துத்‌ தனித்‌தனி அதிகாரங்கள்‌ குறள்‌ நூலுள்‌ உள்ளமையும்‌ நோக்கத்தகும்‌. பழங்குடி, பண்பிற்பிரியாது, பணிவு, பழிப்படுவ செய்யாமை முதலியன, குடிப்பிறந்தார் இயல்புகள் என விதக்கப் பெறுகின்றன. 'குன்றுவ செய்தல்‌ இலர்‌', 'சால்பில செய்யார்' என வருவன வள்ளுவர்‌ எதிர்மறை முகத்தான்‌ கடிந்துகூறிய ஒழுக்கங்‌களை இவரும்‌ விலக்கி நல்வழிச்‌ செல்வார்‌ என்பதைக் காட்டுகிறது. இவர்கள் குடிநலத்தின்கண் பற்றுள்ளம் கொண்டவர்களாயிருப்பர். இவர்களிடத்தே குற்றம் உண்டானால் அது வானிலுள்ள மதியில் காணப்படும் களங்கம்போல் விளங்கித் தோன்றும் ஆதலால் தம் வாழ்வில் களங்கம் உண்டாகாது காத்துக் கொள்வர். மொத்தத்தில் குடிமை என்பது பல நற்பண்புகளின்‌ திரட்சியான ஒரு பிழம்பு.

குடிமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 951ஆம் குறள் செம்மையும், இழிசெயலுக்கு அஞ்சும் நாணமும் ஒருசேர, நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து, இயல்பாக அமைவதில்லை என்கிறது.
  • 952ஆம் குறள் நற்குடிப் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாண் இம்மூன்றிலும் தவறமாட்டார் எனச் சொல்கிறது.
  • 953ஆம் குறள் நற்குடியிற் பிறந்தவர்களுக்குச் சிரித்தமுகம், கொடுத்தல், இன்சொல், யாரையும் இகழாமை ஆகிய இந்நான்கும் கூறுகள் என்பர் என்கிறது.
  • 954ஆம் குறள் கோடி கோடியாகப் பொருள் பெறுவதாயிருந்தாலும் நல்ல குடியில் பிறந்தார் தம் குடிக்குத் தாழ்வாயின செய்தல் இல்லாதவர்கள் என்கிறது.
  • 955ஆம் குறள் கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழம்பெருமை கொண்ட குடிப்பிறப்பினர் தம் நற்குணத்திலிருந்து நீங்க மாட்டார் எனச் சொல்கிறது.
  • 956ஆம் குறள் குற்றமற்ற குடிமரபுக்கேற்ப வாழ்வோம் என்று சொல்பவர் வஞ்சனை கொண்டு பண்பற்ற செயல்களைச் செய்ய மாட்டார் என்கிறது.
  • 957ஆம் குறள் நற்குடியில் பிறந்தவரிடத்து உண்டாகும் குற்றம் வானத்து மதிக்கண் களங்கம் போல விளங்கித் தோன்றும் எனச் சொல்கிறது.
  • 958ஆம் குறள் குடிநலமுடையவன் கண்ணே அன்பின்மை காணப்படுமானால் அவனது குடிப்பிறப்பில் ஐயம் உண்டாகும் என்கிறது.
  • 959ஆம் குறள் நிலத்தின் தன்மையைப் பயிர் காட்டும்; நற்குடியிற் பிறந்தமையை பேசும் சொற்களே புலப்படுத்தும் என்கிறது.
  • 960ஆவது குறள் தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குலப்பெருமை வேண்டுமானால் எல்லாரிடத்தும் வணக்கமாக நடந்து கொள்க என்கிறது.

 

குடிமை அதிகாரச் சிறப்பியல்புகள்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் (954) என்ற பாடல் நற்குடியில் பிறந்தவர் கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும் ஒழுக்கக் குறைவான செயல்களைச் செய்யமாட்டார் என்கிறது. கையூட்டுப் பெறாத குணம் கொண்டதைச் சொல்லும் குறள் இது.

குலப் பெருமை காப்பாற்ற நினைப்பவர் ஏய்த்துப் பிழைக்கவேண்டும் என எண்ணமாட்டார் என்பதை சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார் (956) என்ற பாடல் சொல்கிறது.

மற்றவரிடம் உண்டாகும் குற்றத்தைவிட நல்ல குடும்பத்தில் தோன்றியவரிடம் ஏற்படும் குற்றம் நிலவின் களங்கம்போல் விளக்கமுற உயர்ந்து தோன்றும் என்பதால் தவறுசெய்யார் என்று சிறந்ததோர் உவமையால் விளக்கும் பாடல்: குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (957)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard