திருவள்ளுவமாலை என்பது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களின் கோவை என்று பொருள்படும். மொத்தம் ஐம்பத்து மூன்று வெண்பாக்களாலான பாக்களையுடையது.
இதில், பல பாக்கள் கருத்துச் செறிவுடனும், மேற்கோளாக ஆளத்தக்கனவுமாகமும் உள்ளன. சில பாக்கள் குறளின் முப்பாலின் இயற்பகுப்புகளை எடுத்தோதுகின்றன; கவிதை நலம் நிறைந்து கற்பனையால் குறளைச் சிறப்பிக்கின்றன சில; வடமறைநூலுக்கும் இதற்கும் வேற்றுமை காட்டி ஏற்றம் கூறுகின்றன சில; குறள் ஆசிரியரைப் பாராட்டுகின்றன சில; வள்ளுவரின் இதயத்தின் ஆழத்தையும், அவரது அறிவின் ஆற்றலையும் தெளிவையும் உணர்ந்து தாங்கள் பெற்ற இன்பத்திற்குக் கனிந்த கற்பனையுடன் செய்த பாக்கள் பிற.
காலம்
வள்ளுவமாலை திருக்குறள் அரங்கேற்றத்தின்போது சங்கப் புலவர்களால் பாடப்பெற்றது என்பர் ஒருசாரார். கல்லாடத்தில் கூறப்பட்டுள்ள குறள் அரங்கேற்ற நிகழ்ச்சி இத்தொகுப்பின் முதல் பாட்டுக்கு ஆதாரமாக இருக்கலாம். அப்பாடல் மதுரையில் உள்ள சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு ஒத்து இருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவர் என்று குறிப்பது. ஆனால் பழங்கதைகளில், குறள் அரங்கேறிய காலத்தில், சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோடு ஒக்க இருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து மூழ்கினர் என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வள்ளுவமாலை குறள் ஆசிரியர் காலத்தது அல்ல; பிற்காலத்தே தோன்றியதே என்பர்.
காலத்தால், பண்டைய குறள் உரை ஆசிரியர்கள் பதின்மருக்கு முந்தியது திருவள்ளுவமாலை என்பது பல அறிஞர்களின் முடிவு. இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதெனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக அமையும் என்று கூறியுள்ளனர். எவ்வாறாயினும் திருவள்ளுவமாலை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை என்பார் தெ பொ மீ.
தொடுத்தது யார்?
அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.
வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.
இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது. சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.