இந்திய சமூக, அரசியல் வரலாற்றில் பிராமணியம் மிக முக்கியமான இடத்தைப் பெற்று வந்துள்ளது. தமிழக வரலாற்றில் இன்றுவரை பிராமணியம் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிராமணியத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. பண்டைத் தமிழகத்தில் பிராமணியம் கால் கொள்ளத் தொடங்கியதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களில் பிராமணர்கள், அந்தணர், பார்ப்பனர், முனிவர், நான்மறையாளர், இரு பிறப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பிராமணர்களின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் ``ஆரிய வாழ்க்கை முறையைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காக ஒரு பேரியக்கம் தொடங்கியது.'' (தென்னிந்திய வரலாறு பக்கம்) என்று கூறி விட்டு மேலும் அவர் ``தென்னிந்தியா ஆரிய மயமாவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகள் ஆயின. அந்த நீண்ட காலத்தில் ஆரிய வாழ்க்கை முறை சிறிது சிறிதாக வேரூன்றியதன் பயனாகத் தென்னிந்தியாவில் ஒரு புதிய பண்பாடு தோன்றி வளர்ந்தது'' (பக். 127) என்று கூறுகிறார். இந்தப் புதிய பண்பாடு ஏன் தோன்றியது? தமிழ்ச்சமூகத்தில் அதற்கான தேவை என்ன? என்பவை ஆய்வுக்குரியவை.
தமிழக வரலாற்றினை ஆய்வு செய்த அறிஞர்கள் பிராமணர்களின் புதிய பண்பாடு பற்றி சில குறிப்புகளை கூறியுள்ளனர். பிரிட்டிஷ் ஆய்வாளர் J.R.Marr ``சங்கத் தொகை நூல்களில் பிராமணர்களின் வழக்கங்கள் புராணக் கடவுள்களின் கதைகள் குறிப்பிடப்படுவதிலிருந்து தமிழ்ச்சமூகத்தில் இந்தோ ஆரியரின் ஊடுருவல் எந்த அளவுக்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. (The Eight Anthologies பக். 457) என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்க பேராசிரியர் ழுநடிசபந.டு.ழயசவ ``பிராமணர்கள் நீண்ட காலத்திற்கு முன் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.'' (The Poems of Ancient Tamil 155) என்று கூறுகிறார். ஆனால் பேராசிரியர் கே.கே.பிள்ளை ``பிராமணர்கள் எல்லோரும் ஆரியர்கள் அல்ல, தமிழகத்தில் இருந்த ஒரு பிரிவினர் பிரமாணர்களாக மாறினர் என்பது பிராமணர்களில் `வடமா' என்ற பிரிவு இருப்பதிலிருந்து தெரிகிறது.'' (Aryan Influence in Tamilaham during sangam Ephoch) என்று மாறுபட்ட கருத்தைக் கூறியுள்ளார். ஆனால் George L.Hart பிரமாணர்கள் எல்லோரும் வடநாட்டிலிருந்து வந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் உள்ளவர் பிராமணராக மாறினர் என்ற கருத்து தவறு என்று மறுக்கிறார். அதற்குக் காரணமாக அவர் கூறுவதாவது:- ``பிராமணர்கள் தமிழ்நாட்டின் பழமையான கருத்தான தெய்வீக புனிதம் (Sacred) என்பதுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து தங்களை விலக்கி வைத்துக் கொண்டனர். அதனால் தாங்கள் களங்கப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டனர்'' (பக். 55) இக்கருத்து மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.
தமிழக வரலாற்றில் சங்க காலம் என்று அறியப்படுகிற காலம் கி.மு. முதல் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அடிப்படையில், குல மரபுக்குழுச் சமூகமாக (Tribes) இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த குழுச் சமூகத்திலிருந்து அரசு (STATE) என்ற அமைப்பு உருவான காலகட்டத்தைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன என்று பேராசிரியர் க.கைலாசபதி ஒரு கருதுகோளை (HYPOTHESIS) முதலில் வெளியிட்டார். கைலாசபதி கூறுகிறார். ``சான்றோர் இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம் நாகரிக உலகின் நுழைவாயிலிலே நிற்கும் சமுதாயமாகும். கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக்குழுக்கள் (Tribes) சிதறிக் கிடந்தன. நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து காலப்போக்கிலே தமிழகத்தில் மூன்று அரசுகள் உருவாகின. முடியுடை வேந்தர் தலை தூக்கினர். தமிழகம் நாகரிக உலகில் நுழைந்தது. அதாவது அரசு தோன்றியது'' (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பக்கம் 24, 25) பேராசிரியர் கைலாசபதியின் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியை ரொமிலா தாப்பர் ``For the Tamils this was period of evolution from tribal chief tainships to kingdoms” (A History of India Pg-105).
பேராசிரியர் கைலாசபதி இந்த கருதுகோளை வெளியிட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விரிவான ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. குழுச்சமூகத்தில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பது ஏற்படவில்லை. குழுவில் எல்லோரும் சமம். தனிச்சொத்து என்ற எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது. சமூகத்தில் தனிச்சொத்துடைமை என்பதும் அதன் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதும் அதன் உச்சமாக `அரசு' என்ற அமைப்பும் உருவானது வரலாற்றின் மிக முக்கிய ஒரு கட்டமாகும். தமிழக வரலாற்றிலும் குழு நிலையிலிருந்த சமூகம் சிதைவடைந்து அரசு அமைப்பு தோற்றம் கொள்ளும்பொழுது சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
தமிழக வரலாற்றில் தோன்றிய புதிய அரசும், அதன் அடிப்படையான உயர்குடிமக்களும் தங்களின் புதிய வாழ்க்கை முறையை அங்கீகாரம் செய்ய ஒரு புதிய கோட்பாட்டை எதிர்நோக்கினர். இந்தப் புதிய தேவையை நிறைவு செய்ய தமிழகத்தில் பிராமணர்கள் தங்களின் புதிய பண்பாட்டைப் புகுத்தினர். பிராமணிய பண்பாட்டின் தோற்றத்தை அரசின் தோற்றத்துடன் இணைத்து புதிய கருத்தை உருவாக்கியவர் பேராசிரியர் கோசாம்பி. ``பிராமணியத்தின் வளர்ச்சி என்பது குழு சமுதாயத்தில் அரசனை தலைமையாகக் கொண்ட வர்க்கங்களின் தோற்றத்தைக் குறிப்பதாகும்'' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். (An Introduction to the study of Indian History - 122).
கோசாம்பி பொதுவாக வரைவு செய்த இந்தக் கருத்து தமிழக வரலாற்றிற்கும் பொருந்தி வரும் ஒன்றாகும். தமிழ்ச் சமூகத்தில் அரசு தோன்றுவதற்கான சூழலை முதலில் பார்ப்போம். இது பற்றிய ஓர் அறிமுக ஆய்வினை பேராசிரியர் கா.சிவத்தம்பி செய்துள்ளார். தனது ``Organization of Political Authority in early Tamilnadu'' என்ற கட்டுரையில் தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றி அறிவதற்கு முதற்படியாக அது பற்றிய சொற்களை ஆய்வு செய்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அரசின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக ஆய்வு செய்வதற்கான ஒரு நுழைவுவாயிலை அமைத்துத் தந்துள்ளது.
பேராசிரியர் சிவத்தம்பி தனது மேற்கண்ட கட்டுரையில் அரசு உருவாவதற்கு அடிப்படையாக உள்ள காரணங்களைப் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் முக்கியமானவை. (1) உற்பத்திப் பெருக்கம்- அதன் மூலம் உபரி உருவாக்கம் (2) சமூகத்தில் ஏற்றத் தாழ்வான மக்கள் பிரிவினர் உருவாதல், (3) பண்ட மாற்றுக்குப் பதிலாக வணிகம் வளர்ச்சியடைதல், (4) தனிச்சொத்துடைமை - இவை அரசு உருவாவதற்கு அடிப்படை அமைவனவாகும்.
பேராசிரியர் சிவத்தம்பி தனது Drama in Ancient Tamil Society நூலில் தமிழ்நாட்டில் அரசு உருவாக்கம் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், தனிச்சொத்துடைமை அடிப்படையில் நிலவுடைமை சமுதாயம் (Fudalism) தோன்றியதால் அரசு தோன்றியது என்ற வாய்பாட்டைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவுடைமை சமுதாயம் தோன்றியது மிகப்பிந்திய காலத்தில் ஆகும். சங்க காலத்தில் நிலவுடைமைச் சமுதாயத்திற்கான சிறு தோற்றமே ஏற்பட்டிருந்ததாகவே கொள்ள முடியும். அரசு தோன்றுவதற்கான முக்கிய அடிப்படைக் காரணிகளில் ஒன்றான உபரி உற்பத்தி என்பதும் கூட பெருஅளவில் ஏற்பட்டு விடவில்லை. உள்நாட்டு வணிகத்தை விட வெளிநாட்டு வணிகத்தின் மூலமே அதிக செல்வம் சேர்ந்தது. இந்த செல்வம் நகரங்களில் புதிய மக்கள் பிரிவை உருவாக்கியது. பாசன வசதி பெற்ற நதிக்கரை பிரதேசங்களில் விவசாயத்தில் உபரிச் செல்வம் ஒரு சிலர் கைகளில் சேர்ந்தது.
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் நதிக்கரைகளிலேயே உருவாயின. உலகம் பூராவுக்கும் இந்த விதி பொதுவானது ஆகும். பட்டினப் பாலை, மதுரைக்காஞ்சி முதலியவற்றில் நகரங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் வாழ்க்கை நிலைமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் மிக ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்தனர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த ஏற்றத்தாழ்வு அரசு உருவாவதற்கான காரணத்தைத் தந்தது. குழு நிலையில் வாழ்ந்த சமுதாயத்தில் ரத்த உறவுடைய குழு உறுப்பினர் என்ற நிலைக்குப் பதிலாக அரசு உருவான பின் நில எல்லையில் வாழும் நாடு என்ற கருத்து உருவானது. மேலும் தனியான படை என்ற அமைப்பும் உருவானது. குழு சமூகத்தில் தனியான படை கிடையாது. குழு உறுப்பினர் அனைவரும் ஆயுதம் தாங்கிப் போரிட்டனர்.
சங்க இலக்கியத்தில் `படை' என்ற சொல் வரும் இடங்களைக் கூர்ந்து கவனித்தால் `படை' சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் மட்டுமே இருந்த உண்மை புலப்படும். மற்றக் குழுத் தலைவர்களான வேளிர், சீறூர் மன்னர்களிடம் படை இருந்ததாக அறிய முடியவில்லை. மேலும் `படைஞர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் (பதிற்றுப் பத்து 25) குறிப்பிடப்படுகிறது. `படைஞர்' என்ற சொல் நிரந்தரப் படையின் உறுப்பினர் என்று பொருள் கொண்டதாகக் காணப்படுகிறது. மேலும், குமரிப்படை தழீய கூற்று வினையாடவர் (புறநானூறு 294) என்றும் ``நின் படைகொள் மாக்கள்'' *(புறம் 29) என்றும் படைவீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட படை வீரர்கள் மூவேந்தரின் படை வீரர்களே. நிரந்தரப்படை என்பது அரசு என்ற அமைப்புடன் இணைந்த ஒன்று. இது சங்க காலத்தில் உருவாகத் தொடங்கி விட்டதை அறிய முடிகிறது.
சங்க இலக்கியத்தில் `வேந்தர்' என்ற சொல் சேர, சோழ, பாண்டியர்களை மட்டுமே குறித்தது. மேலும் `வம்வேந்தர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. இது புதிய `வேந்தர்' என்ற பொருளைக் குறிக்கிறது. வேந்தர்கள் புதிதாக உருவானவர்கள் என்பதையே இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். மேலும் வேந்தர்களுக்கு மட்டும் குடை, முரசு, முடி உரியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
புதிதாக உருவான அரசு அதன் தலைமையில் உள்ள அரசன். இதன் நிலைபேற்றை உறுதிப்படுத்த சடங்குகள், வேள்விகள் செய்யப்பட்டன. இத்தகைய வேள்விகளை முன்னின்று நடத்தியவர்கள் பிராமணர்கள். குழுநிலைச் சமுதாயத்தில் பிராமணர்களுக்கு இடம் இல்லை. சங்க இலக்கியத்தில் குழுத் தலைவர்கள் வேள்வி செய்ததாகவோ அல்லது பிராமணர்களைக் கொண்டு வேறு சடங்குகள் செய்ததாகவோ ஒரு குறிப்பும் இல்லை. பெரும்பான்மையான மக்களுக்கும், பிராமணர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பெரும் அரசர்களாகக் குறிப்பிடப்பட்ட சேர, சோழ, பாண்டியர்களே வேள்வி செய்தனர். அவர்கள் அவைகளிலே பிராமணர்கள் இடம் பெற்றனர்.
பிராமணர்கள் பற்றி சங்க இலக்கியம் கூறுவனவற்றை தொகுத்து நோக்கலாம். சங்க இலக்கியத்தில் பிராமணர்கள் அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். பிராமணன் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. பிராமணர்கள் வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
``அறம்புரி கொள்கை நான்மறை முதல்வன்''- புறம் 93
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26
அந்தணர் வேதம் ஓதுதலை வண்டுகளின் ரீங்காரத்துடன் ஒப்பிட்டு,
``தாதுண் தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட'' - மதுரை காஞ்சி 655, 656
என்று கூறப்பட்டுள்ளது.
வேதம் அறிந்தமை பிராமணர்களின் தனிச்சிறப்பு. தமிழ்ச்சமூகத்தில் வேறு யாரும் வேதம் அறிந்திருந்ததற்கான குறிப்பு ஏதும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்'' - (பதிற்றுப்பத்து 24)
என்று குறிப்பிடப்படுகின்றனர். இதுவும் பிராமணர்களின் தனித்தன்மைச் செய்கைகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேலும் `பிராமணர்கள் அந்திக்காலத்தே, தீயை வளர்ப்பர், தம் கடமையைச் செய்வர்.
``அந்தி அந்தணர் அயர'' - குறிஞ்சிப்பாட்டு 225
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீவிளக்கிற்றுஞ்சும் - புறம் 2
பிராமணர்கள் வேள்வி நடத்தி வைத்த செயல் சங்க இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
``நெய்மலி ஆவுதி பொங்கப் பன் மாண்
வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பவகொல்'' - புறம் 15
``வேத வேள்வி துறை முடித்தூ உம்'' - புறம் 224
``வேள்வி முற்றிய கேள்வி அந்தணர்க்கு
அருங்காலம் நீரோடு சிதறி''
``அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை'' - பட்டினப்பாலை 54, 55
வேள்வி செய்விக்கும் சிறப்பு பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. வேறு யாரும் வேள்வி செய்வித்தாகக் குறிப்பு இல்லை.
பிராமணர்கள் தனியாக வாழ்ந்தனர். அங்கு நாய், கோழி போன்றவை இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. கிளிகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்படுகிறது.
``பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது
வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்று
மறை காப்பாளர் உறை பதி'' - பெரும்பாணாற்றுப்படை 298-301
அந்தக் காலத்திலேயே அக்ரகாரங்கள் தமிழகத்தில் தோன்றி விட்டன என்பதை இது தெரிவிக்கிறது.
பிராமணர்களுக்கும், அரசர்களுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
``பார்ப்பார்க்கல்லாது பணி பறியலையே'' (பதிற்றுப்பத்து 63) என்று சேரவேந்தனை சிறப்பித்து கூறப்படுகிறது. பார்ப்பனருக்கு அரசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தனர் என்பது இதனால் விளங்கும். மேலும் சோழ அரசன் ஒருவன்,
``நின் முன்னோரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்'' - புறம் 43
என்று குறிப்பிடப்படுகிறான். பார்ப்பனருக்கு எந்த தீங்கும் அரசர்கள் செய்யமாட்டார்கள் என்ற செய்தி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பாண்டிய அரசனுடைய அவையில் பிராமணர் இருந்தனர் என்பதை
``நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26
என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.
பிராமணர்கள் அரசனுக்கு அருகில் இருந்து ஆலோசனை கூறி அவனை வழி நடத்தும் இடத்தில் செல்வாக்குடன் இருந்தனர் என்பது சங்க இலக்கியத்தால் அறியப்படுகிறது. இதனை உறுதி செய்து பேராசிரியர் George L.Hart தனது The Poems of Ancient Tamil என்ற நூலில் ``Brahmins seem to have identified themselves closely with the Kings'' (ஞ-54) என்று கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிராமணர்களுக்கும் புதிதாக தமிழகத்தில் தோன்றிய அரசுக்குமான நெருங்கிய பிணைப்பை உறுதி செய்யும் ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. பிராமணர்களும் அவர்களின் புதிய பண்பாடும், அரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர், சோழர் காலங்களில் தமிழ்ச் சமுதாயம் நிலவுடைமை சமுதாயமாக வளர்ச்சியடைந்த பின் அதன் தத்துவமாக பிராமணியம் முழுமை அடைந்து சமூக ஆதிக்கம் பெற்றதை அறிய முடிகிறது.
சங்க காலத்தில் தொடங்கிய பிராமணிய தத்துவ வளர்ச்சியுடன் சமஸ்கிருத மொழியும் தமிழ்ச்சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பல்லவ, சோழர் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழி கோவில்களில் தமிழைப் புறந்தள்ளி ஆதிக்கம் பெற்றது. தெய்வங்களின் பெயர்கள் சமஸ்கிருதமாயின. வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் நிலைபெற்றது. ஆனால் சாதாரண பொதுமக்கள் வழிபட்டு வந்த கிராமப்புறத் தெய்வ வழிபாட்டில் பிராமணர், சமஸ்கிருத ஆதிக்கம் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் சமூக ஆதிக்க நிறுவனமாக செயல்பட்டன. கோயில்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தினர். அரசனை தலைமையாகக் கொண்ட பெரும் நிலவுடைமையாளர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து நன்கு தெரிய வருகிறது. சமூகத்தின் இந்த ஆளும் வர்க்கங்களுக்கு பிராமணியம் தத்துவமாக விளங்கியது. சமூக ஆதிக்க சக்திகள் பிராமணர்களையும், சமஸ்கிருத மொழியையும் ஊட்டி வளர்த்தனர்.
பிராமணிய தத்துவத்தின் ஆதிக்கம் இன்று வரை வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிந்ததே. பிராமணிய மதம் தான் இந்து மதம் என்று பெயர் பெற்றது. இந்து மதம் என்பது இஸ்லாம், கிறிஸ்தவம் போல் உருவாக்கப்பட்ட மதம் அல்ல. பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் கடவுள்கள் இணைத்த ஒரு கூட்டு உருவாக்கம் ஆகும். இதுபற்றிய ஆய்வு இன்னும் ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட வேண்டும்.