தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பொது யுகம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கால மகேந்திரவர்மன் கட்டிய சீயமங்கலம் குடைவரை சிவன் கோயிலிலுள்ள ஆடல்வல்லானின் புடைப்புச் சிற்பமே காலத்தில் முந்தையதாகக் கணிக்கப்பட்டுள்ளது. தூண் சிற்பமாக உள்ள இந்த சிற்பம் முயலகனின்றி வடிக்கப்பட்டாலும் பாணாசுரன் மத்தளம் கொட்ட வேறொரு கணம் அவரை துதி செய்ய பாதத்தினருகில் அரவம் சீறிப்பாய இடக்கையில் கோடரியும் வலக்கையில் தீயகலும் ( பிற்கால சிற்பங்களில் இவ்வாறு காணப்படுவதில்லை ) ஏந்தி வலது முன்கரம் அபயம் அளிக்க இடதுகரம் டோலஹஸ்தமாக பக்கவாட்டில் தொங்கவிட்டுள்ளமை மிக சிறப்பு. முப்புரிநூல், ஆடை ஆபரணங்கள், கணுக்கால்களில் சலங்கை, கழுத்தினில் உருத்திராக்கமணியுடன் அணிகலன், காதுகளில் பத்ரகுண்டலங்கள், படர் சடையில் பிறைச்சந்திரன், கபாலம் ( கரோட்டி ) ஆகியவை அணிசெய்ய சற்றே தலைதனை இடப்பக்கமாக சாய்த்து மந்தகாச புன்னகையுடன் ஆடல்வல்லான் இங்கே காட்சி கொண்டுள்ளார்.
சீயமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலூக்காவில் அமைந்துள்ள தெள்ளாறு ஊராட்சியின் கீழ் உள்ள ஒரு சிறு கிராமம். இந்த கிராமத்தின் பெயர் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் தந்தை சிம்மவிஷ்ணுவின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்றும் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. வந்தவாசிக்கு தென்மேற்காக 25 கி.மீ. தொலைவிலும், சேத்துபட்டிற்கு தென்கிழக்காக 21 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலைக்கு வடகிழக்காக 63 கி.மீ. தொலைவிலும் இந்த தலம் அமைந்துள்ளது. இந்த ஊரின் சிறப்பே மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய ஏழாம் நூற்றாண்டு குடைவரை சிவன் கோயிலும் மேற்கு கங்க மன்னன் இரண்டாம் ராஜமல்லன் கட்டிய ஒன்பதாம் நூற்றாண்டு சமண குடைவரை கோயிலுமே ஆகும். அதோடு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த ஆச்சார்யர் திக்நாகர் பிறந்த ஊரும் சீயமங்கலம் என்றும் நம்பப்படுகிறது.
பல்லவ மன்னன் முதலாம்மகேந்திரவர்மன்பொ.யுஏழாம்நூற்றாண்டில் ( 600-630 CE ) இங்குஉருவாக்கியசிவனை “தூண்-ஆண்டார்” என்று தமிழிலும் ஸ்தம்பேஸ்வரர் என்று சமஸ்கிருதத்திலும் ( பல்லவ கிரந்த எழுத்துக்களில் ) அழைக்கப்பட்டுள்ளார். திருச்சி மலை மீதுள்ள குடைவரையிலுள்ளது போலவே இங்கும் லலிதாங்குரனின் ஆணைப்படி குடைவரை அமைக்கப்பட்டதாக கல்வெட்டு பதிவுகள் உணர்த்துகின்றன. இதன்படி இந்த குடைவரை நிச்சயமாக மகேந்திர பல்லவனின் காலத்தியது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த கோயிலின் முன் இரண்டு தூண்கள் உள்ளதால் “தூண்-ஆண்டார்” என்ற பெயர் வந்திருக்கலாம். அவனிபாஜனப் பல்லவேஸ்வர கிருஹம் என்றே இந்த ஆலயத்திற்கு பெயர் வழங்கியுள்ளது. அவனி என்பதுவும் மகேந்திர பல்லவனின் பட்டப்பெயர்களில் ஒன்றுதான்.