இரண்டு வகைகளாக இந்த குடைவரைகளைப் பிரித்தோமேயானால் சில ஆலயங்கள் முகமண்டபமின்றி வெறும் கருவறை மட்டுமே உள்ளவைகளாகவும் மற்றும் சில மண்டபங்களோடு கூடிய முழு குடைவரைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளவை என்பது புரியும். முதல்வகைகளில் இருபுற முகப்பில் துவாரபாலகர்களும் உள்ளே கருவறையில் சிவலிங்கம் மட்டுமே உள்ளவாறு அமைந்துள்ளன. இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார் மட்டுமே தாய்ப்பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னே ஒரு நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ள முழுமையான குடைவரைகளின் முன்மண்டபத்தின் தூண் அலங்கார அமைப்பை கூர்ந்து கவனித்தால் சதுர வடிவ பிரம்மகாந்த தூண்களின் இடைப்பகுதி எட்டு பட்டைகளுடனும் மேல்பகுதி உருண்டும் அதற்கு மேலே கபோதத்தில் நாசிக்கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளவை புரியும். பிரஸ்தாரத்தில் சிம்மவரியும் உண்டு. இந்த தூண்களின் போதிகைகளின் அமைப்பு சற்றே முற்காலத்தவை எனக்கருதலாம். கருவறையும் முன்மண்டபமும் வெளியில் இருந்து வெட்டப்பட்டு பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.
பைரவகோணாவிலுள்ள ஒருசில குடைவரைகளின் வெளியே காணப்படும் முற்கால விநாயகரின் திருவுரு. தமிழகத்தின் பாண்டிய பல்லவ சாயலை இவர் சார்ந்திருப்பது கண்கூடு. பொதுவாக பல்லவர்களின் காலத்தைச் சேர்ந்த குடைவரைகளில் நாம் சண்டிகேஸ்வரரைக் காண்பதில்லை. ஆனால் பைரவகோணாவிலோ பல குடைவரைகளின் வெளிப்புறத்தில் சண்டிகேஸ்வரரும் உண்டு. இவற்றிலிருந்தே பல்லவர் இந்த குடைவரைகளை உருவாக்கி இருந்தாலும் அவர்களின் காலத்திற்கு முற்பட்டசாளுக்கிய ராஷ்டிரகூட அமைப்பின் மரபுகளை மாற்றவில்லை என்ற கருத்து நிலவுகிறது. மண்டபத்தின் மேல்பகுதி கபோதத்துடன் அழகுடன் பல்வேறு உறுப்புகளை செதுக்கி படைத்துள்ளமை கண்ணுக்கு விருந்து. தூண்களின் மேற் பகுதியில் போதிகையில் சிம்மங்களும், அதற்கு மேலே பூதவரியும், கபோதத்தின் நெற்றியில் முகங்களுடன் கூடிய நாசிக்கூடுகளும் அதற்கு மேலே சிம்மவரிகளும் ஒரு முழுமையான கற்றளியை நமக்கு நினைவுபடுத்துகின்றன. வெட்டுப்போதிகையின் ரு பக்கமும் வளைவு மட்டுமே அலங்கரிக்கின்றன. ஒரு சில குடைவரைகளின் தூண்களின் கீழ் அமர்ந்துள்ள சிம்மங்கள் பல்லவரின் தனிப்பாணி. அங்கே தொங்கும் முத்துமாலை வளைவுகள் மேலும் நமது வியப்பினைத் தூண்டுகின்றன. பக்கவாட்டுச் சுவற்றுப்பகுதியில் சண்டிகேஸ்வரரும் முன்மண்டபத்தில் துவாரபாலகர்களும் அமைக்கப்பட்டுள்ளனர். துவார பாலகர்களின் அமைப்பும் பெரும்பாலும் பல்லவரின் சிற்பப்பாணியையே ஒத்திருப்பது தெளிவு.சுலபமாக புரிந்து கொள்ளலாம். நான் முன்னர் சொல்லியவாறு, தாந்த்ரீக கோட்பாடுகளும் பிற சைவ சமய ஒழுக்கங்களும் பிரபல்யம் ஆகும்போது அங்கே வழிபாடும் கலாச்சாரமும் அதைச் சார்ந்து அமைக்கப்படும் ஆலயங்களின் அமைப்பும் அங்கே உள்ள மூர்த்தங்களின் ஸ்வரூபங்களும் மாறுபட்ட இயல்பில் படைக்கப்படுவது நமக்கு புதிதல்ல. இங்கும் வடிக்கப்பட்டுள்ள சிலாரூபங்கள் பல்லவ சிற்பக்கலையை ஒத்திருந்தாலும் இங்கே சிவபெருமானின் ரௌத்ராம்சம் புலப்படும்வகையில் அவை படைக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு காணப்படும் சிவபெருமானின் ஆடல் கோலமும் கூட நாட்டிய தோரணையிலுள்ள பைரவராகவே வடித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் பிரகாசம் மாவட்டங்களுக்கு நடுவில், நல்லமலை வனப் பகுதியில் பைரவகோணாவின் எட்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. அம்பாவரம் கொத்தப்பள்ளி கிராமங்களுக்கு அருகாமையில் அமைந்த இந்த தலம் கடப்பாவிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இந்த குடைவரைகளில் காணப்படும் தெய்வ உருவங்கள் மாமல்லபுரத்தின் சாயலை ஒட்டி அமைந்துள்ளன. மலை முகத்தில் வெட்டப்பட்ட இந்த குடைவரைகள் முகப்பு மண்டபத்தோடு அமைக்கப்பட்டு கோஷ்ட புடைப்புச் சிற்பங்களுடன் அழகுடன் அமைந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் பல்லவ அரசர்களால் இவை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. மேலும் ராஷ்டிரகூட, சாளுக்கிய சிற்ப பாணிகளும் இவற்றுள் காணப்படுகின்றன.