துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
அறநெறியாளர்களுக்கு அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும் இல்லறம் பூண்டோர் கடமை.
இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.
இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர்.
அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன். - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்)
அவளுடைய வருத்தம் என்ன தெரியுமா? "என்னால் தர்மவான்களுக்கு உணவளிக்க முடியவில்லை. அந்தணரைப் பேணமுடியவில்லை. துறவியரை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. நம்முடைய பழைய மரபுப் பெருமையான விருந்தினரை அழைத்துத் தக்கவற்றைச் செய்யமுடியவில்லை. ஒரு இல்லறப் பெண்ணான எனது கடமைகள் எல்லாவற்றையும் செய்யும் நற்பேறை இழந்த என்னைப் பார்க்க உன் தாயும் தந்தையும் வந்திருந்தனர்" என்றுதான் அவள் தொடங்குகிறாள். செல்வக் குடிப்பெண்ணாகப் பிறந்த அவள் "எனக்குப் பட்டும் பீதாம்பரமும் இல்லை, முத்தும் வைரவைடூரியுமும் பதித்த தங்கநகைகள் இல்லை, பெருமாளிகை வாசம் இல்லை" என்று கூறவில்லை. மாறாக
"அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"
(சிலப்பதிகாரம்: கொலைக்களக் காதை: 71-73)
[எதிர்தல், எதிர்கோடல் - வரவேற்று உபசரித்தல்]
என்று கூறியே வருந்தினாள்.