1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
தான் எத்தகைய உதவியும் முன்பு செய்யாமலிருக்கத் தனக்கு மற்றொருவன் செய்த உதவிக்குப் பதில் உதவியாக அவனுக்கு இந்த மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் அவன் செய்த உதவிக்கு அவை ஈடாக மாட்டா.
செய்ந்நன்றி அறிதல் - தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை.101
2.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
ஒருவனுக்கு மிகவும் அவசியமான காலத்தில் பிறனொருவன் செய்த உதவியானது சிறியதாக இருந்தாலும் அவன் உதவி செய்த நேரத்தை நோக்கும் போது அச்சிறிய உதவி உலகத்தினும் மிகவும் பெரியது ஆகும்.
காலம்-(ஒருவனுக்கு மிகவும் இன்றியமையாத) சமயம்; ஞாலம்-பூமி; மாணப் பெரிது-மிகவும் பெரியது.102
3.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
இதைச் செய்தால் இன்ன பயன் நமக்குக் கிடைக்கும் என்ற பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால், அவ்வுதவியினால், வரும் நன்மை கடலை விடப் பெரியது ஆகும்.
தூக்குதல்-ஆராய்ந்து பார்த்தல்; நயன்-நன்மை.103
4.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
ஒருவன் தமக்குத் தினை அரிசி போன்ற மிகச் சிறிய அளவுள்ள நன்மையைச் செய்தான் எனினும் அந்த நன்மையினால் விளையத் தக்க பயனை அறிந்து கொள்ளத் தக்கவர் அதனைப் பனம் பழம் போன்ற பெரிய அளவுள்ள உதவியாகக் கொண்டு அவனைப் பெருமைப்படுத்துவர்.
தினை-தினை அரிசி; தினை, பனை - சிறுமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டுக்கள்; துணை-அளவு.104
5.உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
ஒருவர் மற்றவருக்குச் செய்யும் உதவியை அவ்வுதவியின் அளவாகக் கருதுதல் கூடாது. அவ்வுதவியைப் பெற்றுக் கொண்டவருடைய தகுதியின் அளவையே அவ்வுதவியின் அளவாகக் கருதுதல் வேண்டும்.
வரைத்து-அளவுடையது; சால்பு- தகுதி, குணம்.105
6.மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
அறிவு ஒழுக்கங்களில் குற்றமற்றவருடைய நட்பினை மறவாமல் இருப்பாயாக. துன்பம் வந்த காலத்திலே உனக்கும் பேராதரவாய் இருந்தவரது நட்பை நீங்காமலிருப்பாயாக.
துறவற்க. நீங்காமலிருப்பாயாக; துப்பாயார்-பேராதரவாக இருப்பவர்.106
7.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
தமக்குற்ற துன்பத்தை நீக்கியவருடைய நட்பினை ஏழு வகையாகத் தொடர்ந்து வரும் எல்லாப் பிறப்புக்களிலும் மறவாமல் நினைப்பர் நல்லோர்.
எழுமை எழு பிறப்பும்-ஏழுவகையாகத் தோன்றும் எல்லாப் பிறப்புக்களும்; விழுமம்-துன்பம்.107
8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல குணம் அன்று. பிறர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லதாகும்.108
9.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
முன்பு நமக்கு ஒரு நன்மையைச் செய்தவர் பிறகு நம்மைக் கொல்வதைப் போன்ற பெரிய துன்பங்களைச் செய்தாராயினும், முன்பு அவர் செய்த அந்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்தால், பின்பு அவர் செய்த அந்தத் தீமைகளெல்லாம் தீமையில்லாதனவாக ஒழிந்துவிடும்.
கொன்றன்ன இன்னா - கொலை செய்தாலொத்த துன்பங்கள்; உள்ள-நினைத்துப் பார்க்க.109
10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எத்தகைய நற்செயல்களை அழித்துத் தீமைகள் செய்தவர்க்கும் அத்தீமைகளிலிருந்து தப்பிப் பிழைச்க வழி உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்து, அவருக்குத் துன்பத்தைச் செய்தவனுக்கு அத்துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்க வழியே இல்லை.
நன்றி கொன்றார்-நற்செயல்களை அழித்தவர்; உய்வு-தப்பிப் பிழைக்கும் வழி; மகற்கு-மகனுக்கு.110