வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப்பற்றிப் புலவர்களுக்குள் பல திறப்பட்ட கருத்துக்கள் உலவுகின்றன. “இன்றுள்ள தமிழ் இலக்கியங்களிலே திருக்குறள்தான் முற்பட்டது. தொல்காப்பியத்திற்கு அடுத்தது திருக்குறள் தான். ஏனைய சங்க இலக்கியங்கள் எல்லாம் திருக்குறளுக்குப் பிற்பட்டவைதாம்”” என்று கூறுவோர் உண்டு.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களுக்குப் பிறகு தான் திருக்குறள் தோன்றியிருக்கவேண்டும். பழைய இலக்கிய வரிசைகளைப் பற்றிப் பேசும்போது பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் &ழ்க்கணக்கு” என்று தான் உரைக்கின்றனர். பத்துப் பாட்டும் எட்டுத்தொகையுமே சங்க இலக்கியங்கள் என்று கருதப்படுகின்றன; பதினெண் கீழ்க்கணக்கு அவை களுக்குப் பிற்பட்ட காலத்தினவாகவே எண்ணப்படுகின்றன. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்று; முப்பால் என்னும் பெயருடன் இவ்வரிசையில் காணப்படுகின்றது.
திருக்குறள் ஐம்பெருங் காப்பியங்களுக்கு முன்னும், சங்க நூல்களுக்குப் பின்னும் தோன்றியிருக்கவேண்டும். சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களில் திருக்குறளின் சொற்றொடர்கள் காணப்படுகின்றன.
“தெய்வம் தொழாஅள் கொழுநன்தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற
அப்பொய்யில் புலவன் பொருள் உரை தேறாய்” என்பது மணிமேகலை.
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழும் தகைமை திண்ணியதால் என்பது சிலப்பதிகாரம். இவைகள்,
தெய்வம் தொழாஅன் கொழுநன் தொழுது எழுவான்
பெய்எனப் பெய்யும் மழை என்ற திருக்குறளைப் போற்றும் பகுதிகள்.
சங்க இலக்கியங்களிலே திருவள்ளுவரைப் பற்றிய குறிப்பே இல்லை. சங்க இலக்கியக் கருத்துக்கள் பலவற்றைத் திருக்குறளிலே காணலாம்.
“முந்தை யிருந்து நட்டோர் சொடுப்பினும்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
பழைமையான நட்புள்ளவர்கள் நஞ்சைக் கொடுப்பாராயினும் கண்ணோட்டமுள்ளவர்கள் அதை உண்பார்கள்”
(நற்றிணை 355) என்பது நற்றிணைச் செய்யுள். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டதே.
பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்பதற்காகவே செல்வத்தைத் தொகுத்த அண்மையையுடைய நீ பிறர் நன்மைக்காகவே இவ்வுலகில் வாழ்வாயாக” (பதிற்றுப்பத்து 38)
இப்பதிற்றுப்பத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதே.
பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்னும் திருக்குறள்.
“செம்மையின் இகந்து ஒரீஇப்
பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும்
பகையாவது அறியாயோ
தீயவழியிலே பொருள் தேடுவார்க்கு, அப்பொருள்
“இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தைத்தான் தரும்” என்பது கலித்தொகை. (14)
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல்
என்பது குறள். இக்குறள் மேறகண்ட கலித்தொகைக் கருத்தைக் கொண்டதே.
“ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று
ஈதலை விரும்பி இரந்தவர்க்கு உதவாது வாழ்வதைவிட சாதலே சிறந்ததாகும்” என்பது கலித்தொகை. (6)
சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை
என்ற திருக்குறளிலே அக்கருத்தைக் காணலாம். இவ்வாறு சங்க கால கருத்துக்கள் பல திருக்குறளிலே அமைந்திருக்கின்றன.
பழைய சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவிலேதான் ஆக்கப்பட்டன. முதலில் ஆசிரியப்பாவிலும், பின்னர், வஞ்சிப்பாவிலும், அதன் பின்னரே கலிப்பா, பரிபாடல், வெண்பா அகியவைகளிலும் நூல்கள் இயற்றினர். சங்க நூல்கள் எல்லாம் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்களிலே ஆக்கப் பட்டிருக்கின்றன. திருக்குறள் வெண்பாவினால் ஆகியது. இதுவும் சங்க நூல்களுக்குப் பிற்பட்டதே திருக்குறள் என்பதற்கு ஒரு சான்று.
திருக்குறள் சங்க நூல்களுக்குப் பிற்பட்டது என்பதற்கு மற்றும் பல காரணங்கள் உண்டு. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய நூல்களிலே மதுவும் மாமிசமும் கடியப்படவில்லை.
இவை இரண்டையும் விலக்க வேண்டும் என்று கூறப்படவும் இல்லை. சங்க இலக்கியச் செய்யுட்களில் எல்லாம் இவைகள் பாராட்டிப் பாடப்படுகின்றன. ஓளவையார், கபிலர் போன்ற பெரும் புலவர்கள் எல்லாம் மதுவும் மாமிசமும் உண்டவர்கள்.
திருக்குறளிலே, இவை இரண்டும் கண்டிக்கப்படுகின்றன; விலக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்தப்படுகின்றன. சங்க காலத்திலே பல தார மணம் ஆதரிக்கப்பட்டு வந்தது. திருக்குறளில் பல தார மணம் ஆதரிக்கப்படவில்லை. “வாழ்க்கைத் துணை நலம்” என்னும் அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம்.
சங்க காலத்திலே, ஆடவர்கள், பரத்தையர்களுடன் கூடி வாழ்வது குற்றமாக எண்ணப்படவில்லை. காதல் பரத்தையர் சேரிப்பரத்தையர் என்றவர்களுடன் அண்கள் கூடிக் குலவி வந்தனர். இவைகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.
திருக்குறளில், காமத்துப்பாலில்கூட “பரத்தையர்ப் பிரிவு” என்று தனியதிகாரம் காணப்படவில்லை. பொருட்பாலில் “வரைவின் மகளிர்” என்ற அதிகாரத்தில் வேசையர் நட்பு வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது.
மது; மாமிசம்; பல தார மணம்; வேசையர் நட்பு இவைகள் சங்க காலத்தில் கண்டிக்கப்படவில்லை. இவைகள் ஒழுக்கக் குறைவு என்று எண்ணப்படவும் இல்லை. சங்க காலத்திற்குப் பின்னர்தான் இவைகள் கண்டிக்கப்பட்டன. ஆதலால் இவை களைப் பற்றிக் கூறும் திருக்குறள் சங்க நூல்களுக்குப்பின் தோன்றியதாகவே யிருக்கவேண்டும் இதில் ஐயமேயில்லை.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே திருக்குறளே காலத்தால் முற்பட்ட நூலாக இருக்கலாம். திருக்குறள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக இருக்கலாம் என்பதே பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் கருத்து.
திருவள்ளுவர் காலம் இரண்டாயிரம் அண்டுகளுக்கு முன்; மூவாயிரம் அண்டுகளுக்கு முன்; என்று கூறுவது தான் வள்ளுவர்க்குப் பெருமையென்று சிலர் எண்ணுகின்றனர். இப்படிக் கூறுவதுதான் தமிழர்க்குப் பெருமை; தமிழர் நாகரிகத்திற்கு உயர்வு; என்று கருதுகின்றனர் சிலர்.
ஒரு புலவர்க்குப் பெருமை ஏற்படுவது காலத்தின் பழமைமையைப் பொறுத்தது அன்று; ஒரு நூலுக்கு மதிப்பு உண்டாவது மிகப் பழைமையான நூல் என்பதால் மட்டும் அன்று, பிற்காலத்திலே பிறந்த நூலானாலும், முற்காலத்திலே தோன்றிய நூலானாலும் மக்கள் வாழ்க்கையோடு இணைந்து நின்று அவர்களுக்கு வழி காட்டும் நூலே சிறந்த நூலாகும். அத்தகைய நூலை ஆக்கிய அரும்புலவரே முதற் புலவர் அவார். இந்த உண்மையை உள்ளத்திலே கொண்டவர்கள் திருவள்ளுவர் காலத்தைப் பற்றிக் கலக்கம் கொள்ள வேண்டியதில்லை.
திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின்னே பிறந்ததாயினும் இது ஒப்பும் உவமையும் அற்ற உயர்ந்த நூல். இது போன்ற நூல் திருக்குறளுக்கு முன்னும் தோன்றியதில்லை; பின்னும் பிறந்தது இல்லை. இது அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.