Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 2. களவும் கற்பும்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
2. களவும் கற்பும்
Permalink  
 


 2. களவும் கற்பும்

தொல்காப்பியத்தில் தமிழ் மக்களின் “களவு”, “கற்பு” என்ற மணவினை மரபுகளைப்பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இவ்விரு பிரிவுகளில் களவை முதலில் ஆய்ந்துவிட்டுப் பின்னர் கற்பியல் என்பதை ஆராய்ந்துள்ளார். இப்பகுதியில், தமிழ் மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள் என்ன என்பதை முதல் சூத்திரத்திலேயே கூறுகிறார்.
இன்பமும் பொருளும் அறனும் என்று ஆங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டம் காணுங்காலை
மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்
உறை அமை நல்லியாழ் துணையமையோர் இயல்பே
(தொல்காப்பியம் — களவியல் சூத்திரம் — 1)
முதலில் அறம், பொருள், இன்பம் என்பதால் தமிழர்களது கொள்கை அறம், பொருள், இன்பம் என்னும் வேத மரபுதான். ஆதலால் தொல்காப்பியர் காலத்திலேயே தர்ம, அர்த்த, காமம் என்ற மூன்று புருஷார்த்தங்கள்தாம் தமிழர் வாழ்க்கை என்பது தெளிவு. இந்தப் பாகம் களவியல் என்னும் பொருள் பற்றியது. ஆகையால், தொல்காப்பியர், இன்பமும், பொருளும், அறனும் என்று இன்பத்தை முதலில் வைத்தார். தருமம், அர்த்தம், காமம் என்பதை “திரிவருக்கம்” என்று கூறுவர். அதனால் திருவள்ளுவர் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூவகை அத்தியாயத்தில் எழுதியுள்ளார். இம்மரபு தெரியாதோர் வள்ளுவர் இன்பத்துப் பாலை இயற்றவில்லை. வேறு ஒருவர் இயற்றியது என்று கூறுவர். அது ஏற்புடையது அல்ல. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று புருஷார்த்தங்களும் தமிழர்களின் மரபே என்பதில் இனி ஐயம் இருக்க முடியாது.

இவ்வாறு இன்பத்தைக் கூற வந்த தொல்காப்பியர், வேதமரபை பின்பற்றும் வழியில் எட்டுவகையான மணவினைகளைக் கூறுவர். இதை தொல்காப்பியர், “எட்டுவகை மணங்களை வேதம் கூறிற்று என்றும் அவற்றில் களவு என்று கூறப்படுவது காந்தர்வம் என்ற வகையினுள் படும். இதை யாழை வாசிக்கும் கந்தர்வர்கள் எவ்வாறு இணைந்திருப்பார்களோ, அதுபோல் களவின்பால் தலைவனும் தலைவியும் இருப்பர்” என்று கூறுகிறார்.

எட்டுவகையான மணங்கள் யாவை என்று நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார். அவை பிரமம், ப்ராசாபத்யம், ஆர்ஷம், தெய்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்று எட்டு என்கிறார். பூப்பெய்திய கன்னியை இரண்டாம் மாதவிடாய் முன்னர் அணிகலன்களால் அலங்கரித்து பிரம்மச்சரியம் காத்த ஒருவனுக்கு தானமாகக் கொடுப்பது “பிரமம்” எனப்படும். பிரம்மச்சரியம் காத்தவனுக்கு மணம் செய்து கொடுப்பது தான் “பிரமம்” என்பதாகும். ஆதலால் மறுமணமோ, இரண்டாம் தாரமோ மணந்து கொள்வது “பிரமம்” ஆகாது.

குழந்தைகள் இல்லாதவருக்கு குழந்தை வேண்டி மணம் செய்து கொடுத்தல் அவன் வழி வளரவேண்டும் என்பதால், இம்மணத்தை “ப்ராஜபத்யம்” என்பர். இது இரண்டாவது மணவகை என்பர். பெரியோர்கள் கொடுப்பதற்கு முன்னர், ஒருவனுக்கும், ஒருத்திக்கும் கண்ணும் மனமும் இணைவதை “காந்தர்வம்” என்று வேதம் கூறிற்று என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். இதை வேதம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதை அறியாத சிலர், “களவு” என்பதுதான் தமிழர் மரபு என்றும், இது ஆரியர் மரபில் இல்லை என்றும், இதை பின்னர் ஆரியர் கெடுத்து, “கற்பு மணம்” என்பதை புகுத்தி விட்டனர் என்பர். இது அவர்களுடைய அறியாமைக்கு எடுத்துக்காட்டு எனலாம். இது இருவர் மனமும் ஒன்றல் இன்ப வாழ்வுக்கு இன்றியமையாதது. அதனால் “களவியல்” என்ற படலத்தை தொல்காப்பியர் முதலில் குறித்தார்.

மனு தமது தர்ம சாத்திரத்தில் எட்டு விதமான மணங்களைக் கீழ்வருமாறு குறிக்கிறார்.
பிராமம் தைவம் ததைவ ஆர்ஷம்
ப்ராஜாபத்யம் ததா ஆஸுர: காந்தர்வ:
ராக்ஷஸஶ்சைவ பைஶாச: அஷ்டமோ அதம: (மனு — 3-21)
அதேபோல் மனு ஒவ்வொருவகை மணவினையையும் விவரித்துள்ளார். அவற்றில் காந்தர்வ விவாஹத்தை மட்டும் காண்போம்.
இச்சயா அன்யோன்ய ஸம்யோக꞉
கந்யாயாஶ்ச வரஸ்ய ச .
காந்தர்வ꞉ ஸ து விஜ்ஞேயோ
மைதுன்ய꞉ காமஸம்பவ꞉ (மனு — 3.32)

கன்னியும் தலைமகனும் ஒருவரோடு ஒருவர் இச்சையால் இணைந்தால் அது காமத்தால் தோன்றிய இணைதல். அதுதான் “காந்தர்வம்” என்றழைக்கப்படுகிறது என்று குறித்துள்ளார். இதையே “களவு” என்று தமிழ் மரபு கூறுகிறது. (மனு — 3.32). இதை தொல்காப்பியர் “காமப்புணர்ச்சி” என்பர். அதனால் “களவியல்” என்னும் துறை தமிழ் மரபுக்கும், வேதமரபுக்கும் இரண்டுக்கும் பொருந்தும்.

அடுத்து கற்பியல் என்ற படலத்தில் தொல்காப்பியர் கற்புபற்றிக் கூறுகிறார். அதில் மணவினைகளில் “கற்பு” என்ற துறையைக் கூறுமிடத்து “கற்பு” என்பது “கல்பிதம்” என்பதின் தமிழாக்கம் என்று நச்சினார்க்கினியர் சுட்டிக் காட்டுகிறார்.

“பிரம்மவிவாஹம்” என்பதை மனு தமது தர்மசாத்திரத்தில் ஒரு சுலோகத்தால் (3-97) கன்னிப் பெண்ணை நன்கு உயர்ந்த வஸ்திரங்களால் அலங்கரித்து அணிகலன்கள் பூட்டி நல்ல ஒழுக்கமுடைய வரனுக்கு மணம் செய்து கொடுத்தல் “பிரம்ம விவாஹம்” அல்லது “கைக்கோள்” ஆதலால், தொல்காப்பியம் “கற்பியல்” என்னும் படலம் “பாணிக்கிரஹனம்” (கைப்பிடித்தல்) என்பதாம். தொல்காப்பியர் இதை ஒரு சட்ட விதியாகவே வர்ணிக்கிறார்.

“கற்பெனப்படுவது கரண மொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக் குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
இந்த சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் நச்சினார்க்கினியர் “களவு”, “கற்பு”, என்ற இருவகை மணமும் “கைக்கோள்” என்கிறார். “களவு” என்பது “காந்தர்வ” மணம் என்று கண்டோம். ஆதலின், இது சடங்குகள் இல்லாவிட்டாலும், தலைவன் தலைவியின் கையைப் பிடிப்பதால் இதுவும் “கைக்கோளின்” கீழ் கொண்டு வரப்பட்டது.
மேலும் “களவு” என்பது பெரியோர் அனுமதியின் முன்னர் நடந்தாலும், பின்னர் உலகறிய மணத்தில் முறைப்படி நடத்தல் வேண்டுமாதலால் இதுவும் “கைக்கோள்” என்பதின் கொண்டு வரப்பட்டது.

“கற்பியலில்” பல சட்ட நுணுக்கமான சொற்கள் உள்ளன. “கரணம்” என்ற சொல்லை இவ்வாறு காணலாம். “கரணம்” என்றால் எழுத்து மூலம் பதிவு செய்யப்பட்ட சான்று. இதன்படி ஒரு தலைவன் ஒரு பெண்ணுடன் இணைய வேண்டும் என்றால் அவன், “தான் உள்ளளவும் அப்பெண்ணைக் காப்பாற்றுவேன்” என்று ஒரு சான்று மூலம் ஒப்புதல் கொடுக்கவேண்டும். இது பெண்களுக்கு பாதுகாப்பு குறித்தது. இதைத்தான் இன்றும் “மணஓலை” என்று கூறுகின்றனர். அதனால் இன்று “ரெஜிஸ்டிரார்” ஆபீசில் பதிவு செய்கிறார்கள் அல்லவா, அது இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கு இருந்து வரும் மரபுதான். ஒரு பெண்ணை அடையவேண்டுபவன் “கரணம்” எழுதிக் கொடுத்தால்தான் மணக்கமுடியும். அதைத்தான் “கற்பு” என்று கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மரபு. இதைத்தான் தொல்காப்பிய சூத்திரம்,
“கற்பு எனப்படுவது கரணமொடு புணர்” என்று கூறுகிறது.

அடுத்து ஒரு பெண்ணை மணக்க விரும்புபவன் அந்தப் பெண்ணை கொள்ளக்கூடிய மரபுடையவனாக இருத்தல்வேண்டும். ஒன்றுக் கொன்று ஒவ்வா மரபு — அவர்கள் மண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால் கொளற்குரி மரபில் “கிழவன்” என்பது “மாப்பிள்ளையான தலைவன்” என்று பொருள். வயது முதிர்ந்தவன் என்று பொருள் அல்ல. “கிழவன்” என்பது “உரிமை பெற்றவன்” என்ற பொருளில் வரும். அதேபோல் “கிழவியைக் கொடுத்தற்குரிய மரபினோர் கொடுக்க” என்று கூறினார். மணப்பெண்ணின் தந்தை, உடன்பிறந்தான், மாமன் முதலிய ஒருவர். அதிலும் யாருக்கு உரிமை உண்டோ அவர்தான் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு உரிமையுடையோர் கொடுத்தால்தான் அப்பெண்ணை மணக்க முடியும். இம்மரபுகள் எல்லாம் கற்பிக்கப்பட்ட சட்ட மரபு. அதனால் இது “கற்பு” என்றழைக்கப்பட்டது. தொல்காப்பியர் எந்த அளவு அறநூல்களைக் கற்று இவ்விலக்கணத்தை இயற்றினார் என்பது இதனால் வெளிப்படும்.

அடுத்த சூத்திரத்தில் பெண்களைக் கொடுக்கக்கூடியவர் இல்லை என்பதால் மணம் இல்லை என்று ஆகி விடக்கூடாது என்பதால் அவளை அறிந்த பெரியோர் இருந்தாலும் அவர் அப்பெண்ணைக் கொடுக்கலாம் என்பது சட்டம். இது எல்லா வருணத்தாருக்கும் பொருந்தும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதை,

“கொடுப்போரின்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன் போகிய காலயான” என்ற சூத்திரத்தாலும்
“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்காகிய காலமும் உண்டே” என்ற சூத்திரத்தாலும் குறிக்கிறார்.

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “இது புணர்ந்து உடன் போயினார் ஆண்டு கொடுப்போரின்றியும் வேள்வி ஆசான் காட்டிய சடங்கின் வழியால் கற்பு பூண்டு வருவதும் ஆம் என்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டு வந்து கொடுப்ப கோடல் உளதேல் அது மேல் கூறியதின் அடங்கும்” என்றார்.

அடுத்துள்ள சூத்திரத்தில் இது நான்கு வருணத்தாரின் மணவினைக்கும் பொருந்தும் என்று கூறுபவர், சில காலத்தில் நான்காம் வருணத்தார்க்கு இல்லாதிருந்தது என்றும், ஆனால் தொல்காப்பியர் காலத்தில் நால்வருக்கும் கரணம் உண்டு என்றார். இதை விரித்துரைத்த நச்சினார்க்கினியர்,
“வேத நூல்தான் அந்தணர், அரசர், வணிகர் என்ற மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம், அந்தணர் முதலியோர்க்கும் மகட்கொண்ட வேளாண்மாந்தருக்கும் மந்திர தந்திர வகையால் உரித்தாகிய காலமும் உள” என்று கூறுகிறார். இப்பொருள்பற்றி மேலும் ஆராயும்முன், அடுத்த தொல்காப்பிய சூத்திரத்தையும் படித்தல் வேண்டும்.




__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

2. சங்ககால தமிழர் திருமணம்
பழந்தமிழர்களின் திருமணம்பற்றி அறிய தொல்காப்பியத்தில் உள்ள “கற்பியல்” என்ற பகுதி உதவுகிறது. தொல்காப்பிய சூத்திரத்துடன் அவற்றின்மீது விரித்து எழுதப்பட்டுள்ள இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும், அவர்களின் சங்க இலக்கிய செய்யுட்களும் திருக்குறள் மேற்கோள்களும் பெரிதும் உதவுகின்றன.

தமிழ்மக்கள் சிறந்த பண்பின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு, அவர்கள் கற்புடை வாழ்விற்கு முதலிடம் கொடுத்திருப்பதே யாகும். “கற்பின் சிறப்பே தமிழ் மக்களின் சிறப்பு” என்று காட்ட வந்ததுதான் சிலப்பதிகாரம் என்னும் ஈடுஇணையற்ற காப்பியம். கற்பு என்றால் என்ன என்று ஓர் எழிலார்ந்த இலக்கணத்தை எழுதியுள்ளார். அது ஒரு நுணுக்கமான சட்டவிதியாகக் காணப்படுகிறது.
“கற்பெனப்படுவது கரணமொடு புணர்
கொளற்குரி மரபின் கிழவன், கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” -என்பது இலக்கணமாய சூத்திரம். ஓர் ஆண்மகனும் பெண்ணும் தம் வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவியாக இணைந்து இன்பம் துய்க்கவும் வாழவும் வேண்டில் அதற்கு “கரணம்” என்பது வேண்டும். அப்பொழுதுதான் அவ்வுறவை சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். அது இரு வகையில் ஏற்படுத்தலாம்.

வாய்மொழியாக ஆன்றோர் முன் சபதம் மேற்கொள்ளுதலும், எழுத்து மூலமாக கொடுத்தலும் ஆகும். இதை நச்சினார்க்கினியர் இருவகை இருவகை என்கிறார். அதாவது
“ஆதிக்கரணமும் ஐயர் யாத்த கரணமும்” என்கிறார்.

ஆதிகாலத்தில் வாய்ச்சொல் சத்தியமாகக்கொண்டு அதை யாரும் மீற மாட்டார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல, ஆண் மகன் களவில் ஒரு பெண்ணை இணைந்து பின்னர் இல்லை என்று பொய்க் கூறுதலும், பொறுப்பேற்க மறுக்கவும், பெண்ணின் நலத்தையும் உரிமையையும் மனத்திற்கொண்டு ஐயர், இருடிகள் எழுத்துமூலமாக மணஓலை கொடுத்தல் வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தனர். அதைத்தான் “ஐயர் யாத்த கரணம்” என்றார்

தொல்காப்பியர். கரணத்தான் என்றால் “எழுத்தின் மூலம் பதிவு செய்பவன்” என்று பொருள். அவ்வாறு ஊரார் முன்பும் சான்றோர் முன்பும் கரணம் எழுதிக்கொடுத்து மணப்பதுதான் “கற்பு” எனப்படும். இதைத்தான் தொல்காப்பியர் “கற்பெனப்படுவது கரணமொடு புணர” என்று ஒரு பெண்ணோடு இணைந்து வாழ உரிமை கொடுப்பது கரணம் என்றார். இது சமுதாயத்தால் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமாகும்.

மணவினை என்பது ஐயரால் அந்தச் சான்றோர்களால் கற்பிக்கப் பட்டது. ஆதலால் “கற்பு” எனப்பட்டது. “கொளற்குரி மரபின் கிழவன்” எனில், ஒரு பெண்ணை மணக்க குலத்தாலும், அறிவாலும், செல்வத்தாலும், ஆண்மையாலும், வயதாலும், ஈடுடையவனாக இருத்தல்வேண்டும். அதாவது அப்பெண்ணைக் கொள்வதற்கு உரிய தகுதிபெற்றவன் என்பது. “கிழத்தியை” எனில் மணமகளை. கொடைக்குரி மரபினோர் கொடுப்ப, அதாவது அப்பெண்ணைக் கொடுக்கக்கூடிய உரிமை பெற்ற அவளது தாய், தந்தை, மாமன், முதலியோர் கொடுக்க, சட்டப்படி ஏற்க அனுமதிக்கப்படுகிறது. இந்த விதியும் பெண்ணின் நலத்தைக் காக்க ஏற்படுத்தப்பட்டது.

முன்பின் தெரியாத ஒருவர், ஒரு பெண்ணை ஒரு கோயிலுக்கு அழைத்து வந்து இப்பெண்ணை நான் தானம் செய்கிறேன் என்று மணம் செய்து கொடுத்தால் அது சட்டப்படி ஏற்பதற்கில்லை. தெரியாதவர், தெரியாத இடத்தில் கொடுத்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

“கற்பு மணம்” என்பது எல்லாவிதத்திலும் பெண்களின் நலனுக்கான விதிகளை அமைத்து கட்டுப்பாட்டுடன் கொண்டு வரப்பட்டதாதலின், சீரான சமுதாய வாழ்வை தமிழகம் கண்டது.

“கரணம்” என்பதை இளம்பூரனர் “வதுவைச் சடங்கு” என்று கூறுகிறார். திருமணம் என்ற பொருளில் “வதுவை” என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நச்சினார்க்கினியர், “இருமுதுகுரவர் கற்பித்தலாலும் அந்தணர் திறத்தும் சான்றோர் தேயத்தும் ஐயர் பாங்கினும், அமரர் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலாலும் கற்பு என்றாயிற்று” என்கிறார். இவற்றிலிருந்து தமிழ்மக்கள் போற்றிய கற்பு வேதநெறிப்படி அறநூல் தொகுத்த தருமசாஸ்திரம் கூறியபடி, வேதியனாகிய அந்தணர், மணமகனையும், மணமகளையும், மணவேள்வி செய்ய வழிகாட்டிட மணந்ததுதான் “கற்பு” என்பதாம். தமிழர் மணம் என்பது வேத நெறிப்படி சடங்குகள் செய்து நடை பெற்றதேயாகும்.

தமிழர்தம் திருமணச்சடங்குகள் எவ்வாறு இருந்தன என்று அகநானூறுப் பாடல்களில் இருந்து நச்சினார்க்கினியர் உதாரணமாகக் காட்டியுள்ளார்.

கற்பியல் அதிகாரத்தில் இரண்டு அகநானூறுப் பாடல்களை நச்சினார்க்கினியர் உதாரணமாகக் காட்டியுள்ளார். இவ்விரண்டு பாடல்களிலும், திருமணச் சடங்குகள் எவ்வாறு இருந்தன என்று காணக் கிடைக்கின்றன. இதில் முதல் பாட்டில் கூறப்பட்ட திருமண முறையைக் கீழே காணலாம்.

திருமண விழாவில் உற்றார் உறவினர்க்கும், ஊராருக்கும் சுவையான உணவுகள் அளிக்கப்பட்டன. உயர்ந்தோரை உபசரித்தனர். நல்ல சகுனம் என்று பறவைகளின் ஒலியை வைத்து நிச்சயித்து சந்திரன் ரோகிணி நட்சத்திரத்துடன் சேர்ந்த நாள் (திங்கள் சகடம் சேர்ந்த நாள்), கிரஹங்கள் எல்லாம் நல்ல வீட்டில் இருக்க நல்ல முகூர்த்தத்தில் சடங்குகளைத் தொடங்கினர். மணமுரசு முழங்க, நகரை அலங்கரித்து கடவுளைப் பூசித்து மணப்பெண்ணை அலங்கரித்து மகளிர்கள் எல்லாம் வாசனைத் திரவியங்களைப்பூசி, பெரிய ஆரவாரத்துடனே விருந்து அளித்து (பெருஞ்சோறு), முகூர்த்தக்கால் நட்டு குளுமையான பெரிய பந்தலை நட்டு, புதிய மணலைப் பரப்பி, நல்ல மங்கல விளக்கு ஏற்றி, பூ மாலைகளை தோரணமாகக் கட்டி அலங்கரித்தனர். காலையில் எழுந்து, கோள்கள் அனைத்தும் நல்ல வீட்டை அடைய, சந்திரன் ரோகிணி நட்சத்திரத்துடன்கூடிய முகூர்த்தத்தில் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்கள், தலையில் புதுக்குடங்களில் நீர் கொண்டு, புதிய அகல்களையும் (பாலிகைகளையும்) ஏந்தி வரிசை முறைகளை எல்லாம் ஏந்தி முன்னும் பின்னுமாக வர, புதல்வரை ஈன்றெடுத்த நான்கு மகளிர்கள் கூடி, “நீ கற்புடைய பெண்ணாக, நல்லவற்றைக் கொடுக்கும் பெற்றோர் மெச்சும் பெண்ணாகுக” என்று கூறி மணமகளை மணமகன் கைப்பிடிக்கும்போது ஒரு வாக்குறுதி கொடுத்தல் வேண்டும்.

மணமகன் நாம் இருவரும் இணை பிரியாது வாழ்நாள் முழுவதும் வாழ்வோமாக என்பான். இதையேத்தான் வேதம் படித்த அந்தணர், மணமகளையும் கூறும்படி செய்கிறார். இதையே திருவள்ளுவரும் திருக்குறளில் தலைமகன் கூறியதாகக் குறிக்கிறார்.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனால்
கண்ணீரை நீர் கொண்டனள் (குறள் - 1315)

அத்தொழில் நிகழும்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயாக — இவற்கு ஏற்றவகை குற்றேவல் செய்வாயாக அங்கியங் (அக்னி) கடவுள் அரிகரியாக (சாட்சியாக) அறிவர் மந்திரவகையால் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலை “கற்பு” என்றார்.
மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே என்பது தொல்காப்பியர் கூறிய சூத்ரம். இதன் உரையில் “வேதநூல் தான் அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம். அந்தணர் முதலியோர்க்கும், மகட்கொடைக்குரிய வேளாண்மாந்தர்க்கும் தந்திர, மந்திர வகையான் உரித்தாகிய காலமும் உண்டு” என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். அதனால் முதலில் வேளாண்மாந்தர்க்கும் வேதமரபின் கரணமோடு மணம் நடந்தது என்றும், பின்னர் சில காலம் இல்லாதிருந்து மீண்டும் நான்கு வர்ணத்தார்க்கும் வேதமரபிலான கரணம்தான் நிலைத்தது என்பதும் அறிய முடிகிறது.

மணப்பெண்ணின் கரம் பிடித்தல், தீயை வலம் வருதல், அப்பொழுது உன்னை நான் என்றும் கைவிடேன் என்று உறுதி கூறுவதும், பொரியை ஹோமம் செய்தல், அருந்ததி காணல் என்பதெல்லாம் வேத நெறியின் படி நடக்கும் மணவிழாவின் முக்கிய அங்கங்களாகும். இங்கு சங்க நூல்களும், தொல்காப்பியமும் ஓர் அரிய செய்தியைக் குறிக்கின்றன.

மணப்பெண்னின் தலையில் பட்டு வஸ்திரம் போர்த்தி, அவள் முகத்தை மூட, அதை மணமகன் மெதுவாக தன் விரல்களால் தூக்கி அப்பெண்ணின் முகத்தைப் பார்க்கும் மரபுபற்றிக் குறிக்கப்படுகின்றன. இம்மரபு தமிழகத்தில் இக்காலத்தில் இல்லை. ஆனால் தெலுங்கு, கர்நாடகம், கேரளம் ஆகிய இடங்களிலும், வட இந்தியாவில் பல இடங்களிலும் இன்னும் உள்ளது. அதனால் இந்தியா முழுவதும், திருமணச் சடங்குகள் ஒன்றாகவே இருந்துள்ளன. இதற்கு,
“மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
‘உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறிவியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற’ என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளதத்தே”
என்ற அகநானூறு 136ம் பாடலையும்,
“உழுதுதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்துகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக” — என
நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி
பல்இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
‘பேர்இற் கிழத்தி ஆக’ எனத் தமர்தர;
ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல்,
கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என.
இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி, மாஅ யோளே”
என்ற அகநானூறு 86ம் பாடலையும் நச்சினார்கினியர் மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். இவை தொல்காப்பிய உரைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. ஆதலின், இவை தொல்காப்பிய மரபைக் காட்டும் செய்திகளாகும்.

அகநானூறு 86, அகநானூறு 136 ஆகிய இவ்விரு பாடல்களிலும் தமிழர் தம் மரபு சங்ககாலத்தின் தொடக்க காலத்திலேயே பாடப்பெற்றதாக செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றில் மரக்கறி உணவும் இரண்டாவதில் மாமிச உணவும் விருந்தில் அளிக்கப்பட்டதை காண்கிறோம். அதனால் இது அந்தந்த சமுதாய மனிதர்களிடத்தும் நடைபெற்ற மணவிழா வழக்கு ஆகும். தமிழர் தம் மண விழாவில் வேத முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன என்பது இப்பாடல்களால் உறுதி செய்யப்படுகிறது.

இவை தவிர திருமணம் முடிந்த நாளிலிருந்து மூன்று நாட்கள் மணமகனும், மணமகளும் சேர்ந்து இரவில் பள்ளியில் படுக்கார். நான்காம் நாள் இரவில் பள்ளியறையில் இணைந்து படுக்க விடுவது மரபு. இச்சடங்கைப் பற்றிக்கூறும்போது நச்சினார்க்கினியர், பின்வருமாறு கூறுகிறார்.

“கரணத்தின் அமைந்து முடிந்த காலை ஆதிக்கரணமும், ஐயர் யாத்த கரணமும் இருவகைச் சடங்காலும், ஓர் குறைபாடின்றி, மூன்று இரவில் மயக்கம் இன்றி, ஆன்றோர்க்கு அமைந்த வகையால், பள்ளி செய்து ஒழுகி, நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து கற்பினும் மூன்றும் நாளும் கூட்டம் இல்லாமையானும் நாலாம் நாளின் கண்ணதாம்” என்று கூறுகிறார். “முதல் மூன்று நாட்களில் முதல் நாள் தண் கதிர்ச் செல்வர்க்கும் (சந்திரனுக்கும்) இடை நாள் கந்தருவருக்கும், பின்னாள் அக்னிக்கும் வழாது செய்து, நான் அங்கியங் கடவுட்கு எனக்கு நின்னை அளிப்ப நான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் என்று தலைமகன் கூறுவன்” என்று நச்சினார்க்கினியர் குறிக்கிறார்.

இவ்வாறு வேத நெறியில் கரணமொடு மணந்த தலைமகன் எந்த இடங்களில் எவ்வாறு மரபுடன் பேசவேண்டும் என்று தொல்காப்பியர் ஒரு நீண்ட சூத்திரத்தில் 31 இடங்களை குறித்துள்ளார். இது சங்ககால மரபை முழுமையாக அறிய உதவும் சூத்திரம். அவை விரிந்த மரபு ஆதலின், ஓரிரண்டை மட்டும் காண்போம்.

இச்சூத்திரம், “கரணத்தின்அமைந்து முதிர்ந்த காலை” என்று தொடங்குகிறது. சூத்திரத்தில், “அந்தணர் திறத்திலும் சான்றோர் தேயத்தும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு” என்கிறார். இங்கு, உரையாசிரியர், “வேட்பித்த ஆசிரியனும் கற்பித்த ஆசிரியனும் ஆகிய பார்ப்பார் கண்ணும் முற்றும் உணர்ந்த ஐம்பொறியையும் அடக்கி பெரியார் கண்ணும் தேவர்கள் கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினை தான் தொழுது காட்டினன்” என்று கூறுகிறார்.

இதுகாட்டும் தமிழ் மக்களின் திருமண மரபை தொல்காப்பியர் சூத்திரத்தாலும், அவர்கள் காட்டியுள்ள சங்கநூல்களாம் அகநானூறு, முதலிய செய்யுட்களாலும் உரையாசிரியர்களின் விரிவுரையிலிருந்தும் அறிவது, தமிழர் திருமண மரபு வேதநெறிப்படி பார்ப்பாராகிய ஆசிரியர் வழி நடத்தியபடி நடந்தது என்றும், அது அவ்விதத்திலும் இந்திய நாட்டின் பிற இடங்களில் இன்றுவரை நடக்கும் ஒன்றுதான் என்பதும் அறிந்தோராகிறோம். இதை “தெய்வகற்பு” என்றும் சங்க நூல்கள் கூறுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

1. காலம்தோறும் தமிழர் திருமணம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர் திருமணம் வேதநெறிப்படி நடந்தது என்பதை தொல்காப்பியம் மற்றும் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு முதலிய பாடல்கள் மூலமும் அவற்றுக்கான உரையாசிரியர்களின் எழுத்திலும் காண்கிறோம்.
இதே மரபுகள் காலம்தோறும் வேதநெறியைப் பின்பற்றி இன்று வரையும் தமிழ் மக்கள் பின்பற்றி நடாத்துகிறார்கள். இந்த மரபினை சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஆண்டாள் பாசுரம் வழியாக இங்கே காண்போம்.
சிலப்பதிகாரத்தில், கோவலன் - கண்ணகி மணவிழாவை மங்கல வாழ்த்துக் காதையில் விரிவாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். புகார் நகர் வாணிகன் மாநாயக்கனின் மகள் கண்ணகி. அவள் வயது பன்னிரண்டு. கோவலனின் தந்தை மாசாத்துவானும் செல்வவணிகன். கோவலன் வயது பதினாறு. இரு குடும்பத்தினரும் ஒரு நல்ல நாளில் மணவிழா நிகழ்த்த நாள் குறித்து, திருமணத்தின் தொடக்கமாக இளம்பெண்களை யானையின் மீது அமரச்செய்து மத்தளம் கொட்டி, முரசு எழுப்பி, நகர்வலம் வந்து, கண்ணகி கோவலன் திருமணச் செய்தியை அறிவிக்கின்றனர்.

மங்கல அணி நகரில் வலமாக வந்தது என்பதை மங்கலசூத்ரம் நகர் வலமாக எடுத்து வரப்பட்டது என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். மகளிரை யானைமேல் ஏற்றி வலம் வந்து அறிவித்தல் மரபு என்கிறார் அடியார்க்கு நல்லார். கண்ணகியைக் கூறுமிடத்து கற்பில் அருந்ததி போன்றவள் என்றும் அருங்குணத்தாள் என்றும், ஆன்றகுடி வழி நிற்போள் என்பதையும் குறிப்பாகக் காட்டுவார். அதேபோல் கோவலனைக் கூறும்போது “காதலால் கொண்டேத்துங் கிழவன்” என்று இளங்கோ கூறுகிறார்.
கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமண விழாவினை மிக எழிலாக இளங்கோ படைத்துள்ளார். பின்வரும் காட்சிகள், கவிநயம் மிகுந்தவை. தமிழர் மரபையும் காட்டுபவை.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து,
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!
“காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல்,
தீது அறுக!” என ஏத்தி, சின்மலர் கொடு தூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார்
அன்று நடந்த திருமணத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார்.
நீல விதானத்து நித்திலப் பூம்பந்தலின் கீழ் முதிய பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் செய்து மணம் முடிக்கின்றனர்.
தமிழர் தம் மணவிழா முத்துப்பந்தல் கீழ் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலின் கீழ் நடைபெற்றதும், வேதம் கற்றறிந்த அந்தணர் வேதநெறிப்படி மணவினை நடத்தி வைத்தனர் என்பதையும் இவை தமிழர் வாழ்வியல் மரபாக இருந்ததையும் காண்கிறோம்.
இந்நாளிலும் மணப்பந்தலை அவரவர் சக்திக்கேற்ப அலங்கரித்து, மலர்கள், நறும்புகைகள், அந்தணர் மறைவழி காட்டிட மங்கலக்கயிற்றை மணமகள் கழுத்தில் கட்டுதல் போன்றவை தமிழகத்தில் வீடு தோறும் நடைபெறுகின்றன. மணவிழாவில் கூடியிருந்த அனைவரும் காதலர் இருவரும் பிரியாமல், பற்றிய கைகள் நழுவாமல் தீது அறுக என்று வாழ்த்துகின்றனர். மலர்களையும் அட்சதையையும் மணமக்கள்மீது தூவுகின்றனர். அவ்வாறாக அருந்ததி போன்ற கண்ணகி திருமணத்தை நடத்தினர் என்கிறார் இளங்கோ அடிகள்.
கோவலன், கண்ணகியைக் கைப்பிடித்தான் என்பதை “கவவுகைப் பிடித்து” என்கிறார். இதை தமிழ் இலக்கண நூல்கள் கைக்கோள் என்றும் “கற்பு” என்றும் கூறினர். வேதநெறியில் இதை “பாணிக்ரஹனம்” என்கின்றனர்.
அதனால் தமிழ்த் திருமணங்களில் நல்லநாள், நட்சத்திரம் பார்த்தல், மறைவழியில் (வேதமரபில்) தீ வலம் வருதல், நோன்பு முடித்தல், கைத்தலம் பற்றல், உன்னை பிரியேன் என்று உறுதி கூறி மணத்தல் எல்லாமும் அன்றும் இன்றும் மாறவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 



2. சூடிக்கொடுத்த சுடர்கொடி கண்ட கனா
சிலப்பதிகாரப் பாடலைத் தொடர்ந்து, தமிழர் திருமண விழாவை அறிய சூடிக் கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் பாசுரங்கள் பெரிதும் உதவுகின்றன.
ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் “கனாக் கண்டேன் தோழி” என்ற இனிய தொடர்கொண்டு அமைந்த பாடல் இன்றும் தமிழர் மனங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனிமையாகப் பாடப்பட்டு வருகிறது.
ஆண்டாள் கூறும் திருமணம்: யானைகள் நகரை வலம் வர, நம்பியை பூரண பொற்குடங்களை ஏந்தி எதிர்கொண்டு அழைக்கின்றனர். எங்கும் தோரணங்கள் கட்டி அலங்கரித்துள்ளனர். இது மாப்பிள்ளையை வரவேற்றல்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்,
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
நாளை மணநாள். மணப்பந்தலை பாளைகளாலும், கமுகு, வாழை மரங்களாலும் அலங்கரித்துள்ளனர். அந்தப் பந்தலின் கீழ் தலைமகன் நுழைகின்றான். இது மணநாளுக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு.
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!
மணநாளன்று இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் வந்து மந்திரங்கள் கூறி வாழ்த்தி, இப்பெண்ணைக் கொடுக்கப் பேசி (மகள் பேசல்), மந்திரம் கூறிக் கோடி புடவை கொடுத்து, மணமாலை மற்றும் அணிகலன்களால் அலங்கரித்து நெற்றிச்சூடகம் முதலிய சூடுகின்றனர். இது மணமகள் அலங்காரம்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
நாற்றிசையிலும் இருந்து கொண்டுவந்த புனித நீரால் பார்ப்பன சிரேஷ்டர்கள் மறை ஓதி நீர் தெளித்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணியை தலைமகன் சூடியிருக்க இருவருக்கும் கையில் காப்பு கட்டுவர்.
நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனி நல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
கையில் தீபமும் கலசமும்கொண்டு இளமங்கையர்கள் எதிர்கொள்ள மதுரை மன்னன் (தலை மகன்) சிறந்த ஆரவாரத்துடன் பந்தலில் புகுவான். அப்போது மத்தளம் கொட்டிற்று. வரிசங்கம் ஊதப் பட்டது. பெண்ணின் கைத்தலம் பற்றினான் (இது பாணிக்ரஹனம்).

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!
அவ்வமயம் வேதம் ஓதும் அந்தணர்கள் (வாய் நல்லார்) மந்திரங்கள் ஓத. பசும் இலை (தர்ப்பை புல்) பரப்பி, தீ வளர்த்து தலைமகன் பெண்ணின் கையைப் பற்றிக்கொண்டு தீயை வலம்வருவர் (அக்னியை வலம் வந்து அவள் சாட்சியாக இப்பெண்ணை மணக்கிறேன் என்று வாக்கு கூறி மணக்கிறான்). இதை “தீ வலம்வருதல்” என்று பெயர். அக்னி தூய்மையின் சின்னம். இவ்வுலகிற்கு முழுவதும் தூய்மைக்கு அக்னிதான் அதிபதியாக உள்ளான். அவன்தான் தலையாய இம்மணவிழாவுக்கு தெய்வ சாட்சி.
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,
காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்! இப்பிறப்பிலும் அடுத்தும் வரும் ஏழேழ் பிறவிக்கும் இவளைக் காப்பேன் என்று கூறும் அவன் அப்பெண்ணின் காலைப்பற்றி, அம்மிக்கல்போல் நமது மணவினை உறுதியாக நிலைத்து நிற்கும் என்பதை விளக்கும் விதமாக அம்மி மிதிக்கச் செய்து அழைத்து வருவான். ஆண்மகன், மணந்தவுடன் முதன் முதலில் காலைப் பிடிப்பது தன் மனையாளின் காலைத்தான்.
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி,
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!
இதை அடுத்து பெண்ணின் அண்ணன்வந்து அக்னியை நோக்கச் செய்து, அவள் கையை அவன் கை மேல் வைத்துபொரி கொடுத்து அதை தீயில் போடும்படிக் கூறுவான். இதை “லாஜ ஹோமம்” என்றும் “பொரி ஹோமம்” என்றும் கூறுவர்.
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி,
அரிமுகன்அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
அதன்பின் பெண்ணுக்கு குங்குமம் இட்டு, சந்தனம் பூசி, அவர்களை வீதி வலம் செய்து, யானை மேல் சென்று மஞ்சனம் ஆடுவது மரபு.
குங்குமம் அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம் செய்து மண னநீர்,
அங்கவனோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
சொல்நயமும் பொருள் நயமும் கவிநயமும் கொண்ட இன்பம்தரும் இந்தப் பாடலால் ஒரு கற்புத் திருமணத்தைக் காட்டுகின்றாள் “சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்”.
தமிழர் திருமணத்தை சடங்குகளை எழிலுற, படிப்படியாக ஓர் ஒப்பற்ற பாடலாக, ஒவ்வொரு சடங்கையும் “கனாக் கண்டேன் தோழி நான்” என்று தமிழர் திருமண முறையைக் காட்டியுள்ளார்.
1200 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தமிழ்மக்கள் தங்கள் பெண்களுக்கு மணவிழா செய்யும்போது எல்லோரும் கூடி மகிழ்கிறார்கள். மணவிழாவில் எங்கும் அய்யர் வேதமந்திரத்துக்கு சமமாக பாடப்படும் பாடல் இது. இதனை தமிழர் மணவிழா மந்திரம் என்றே கூறலாம்.




__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 3. அழகுக்கு அழகு செய்தான்

கம்பன் தனது ராமகாதையில், சீதையின் திருமணத்தை “கடிமணப் படலம்” என்று மிக அழகுற விரிவாக விவரித்துள்ளார். இப்படலம் முழுவதும் கவிநயமும், சொல்நயமும், சுவைநலமும், படிக்கப் படிக்க, இனிமை சேர்க்கும். இத்தனைச் சுவையாக பாடஇயலும் என்பதற்கு சான்றாக இந்தக் கவிதைகள் அமைந்துள்ளன.
மணநாளுக்கு முன்பு ராமன், சீதையின் மனவோட்டம், மறுநாள் மணமுரசு அறைய ஜனகன் கட்டளையிடுதல், நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு விரைதல், மணமண்டபத்திற்குத் தசரதன் வருதல், திருமண மண்டபத்தின் தோற்றம், ராமன் நீராடி மணக்கோலம் புனைதல், ராமன் தேரில் ஏறிவரும் காட்சி, மண்டபம் சேர்ந்து ராமன் முனிவரையும் தந்தையையும் தொழுது அமர்தல், சீதை மண்டபத்துள் வந்த காட்சி, வசிட்ட மாமுனி மணவேள்விக்குத் தேவையான பொருள்களுடன் வந்து வேள்வியைத் தொடங்குகிறான்.
தண்டுலம் விரித்து (அரிசி தரையிலே பரப்பி) தருப்பை சாத்தி விதிமுறையில் மண்டிலம் வகுத்து, மெல்லிய மலர் கொண்டு தீயில் சொரிந்து தீயை முட்டினான். இவை எல்லாம் பண்டைய மறைநெறி என்கிறார் கம்பன்.
அப்பொழுது ராமனும், சீதையும் மெல்ல வந்து மண்டபத்தில் மணத்தவிசில் அமர்கின்றனர். அதைக் காணும்பொழுது போகமும் யோகமும் இணைந்து இருந்ததாம். அப்பொழுது ஜனகன் குளிர் நீர் பூவும், பொருளும் என்று “நீ என் மாமகளோடும் மன்னுதி” என்று ராமனின் தாமரைக் கையில் நீர்வார்த்து கொடுக்கின்றான். ஒரு பொருளை பிறர்க்கு தானமாக தரும்போது அவர் கையில் பூ வைத்து நீர் வார்த்துக் கொடுத்தல் வேண்டும்.
இத்திருமணம் கன்னிகாதானம். ஆகையால் ஜனகன் ராமன் கையில் நீர் வார்த்துக் கொடுத்தான். அப்பொழுது மந்திரங்கள் முழங்கின. மங்கள வாத்தியங்கள் முழங்க, எல்லாரும் பூமாரி பொழிய, ராமன் தீ சாட்சியாக மந்திரம் மும்முறை சொல்லி, வேள்வியில் ஆவுதி செய்து, தையலின் கையைப் பிடித்துக்கொண்டு வேள்வித்தீயை வலம் வந்து, பொரி ஹோமம் புரிந்து, அம்மி மிதித்து, அருந்ததி கண்டனர்' என்று கம்பன் வர்ணித்துள்ளான்.
மணமேடையில் இருக்கும் ராமன் சீதை இருவர்மீதும் வானவர் பூமழை பொழிகின்றனர். மன்னர்கள் பொன்மலர் தூவுகின்றனர். மற்றவர்கள் முத்துக்களையும் மலர்களையும் தூவுகின்றனர். இதனால் அந்தச் சூழல் வானில் மின்னும் நட்சத்திரங்கள் நிறைந்திருப்பதைப் போல ஆனது என்கிறான் கம்பன்.
தமிழிலும் தொல்காப்பியத்திலும், அகப்பாடல்களிலும் எவ்வாறு தமிழர் திருமணம் கூறப்பட்டுள்ளதோ, இளங்கோவடிகளும், ஆண்டாளும் எவ்வாறு தமிழர் திருமணத்தை வர்ணித்துள்ளனரோ அதைப்போலவே சீதையின் திருமணத்தை கம்பன் இங்கே வர்ணிக்கக் காண்கிறோம். இதை கம்பனின் கவி வரிகளால் படித்து ரசிப்பதே சாலச் சிறந்தது.
நீந்த அருங்கடல் என்று, நிறைந்த வேதியர்,
தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான்.
தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன்.
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.
“கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
பூமகளும் பொருளும் என, நீ என்
மாமகள் தன்னொடும் மன்னுதி” என்னா,
தாமரை அன்ன தடக்கையின், ஈந்தான்.
வெய்ய கனல்தலை வீரனும், அந்நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கைபிடித்தான்.
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 



4. சேக்கிழார் சித்திரிக்கும் தமிழர் திருமணம்
இணை சொல்லமுடியாத வரலாற்றுக் காப்பியம் திருத்தொண்டர் புராணம். இதில் சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சேக்கிழார், இந்தப் பகுதியில் தமிழர் திருமண மரபுகளை நமக்கு விரிவாகக் காட்டுகின்றார்.
சுந்தரர் வைதிக சைவ அந்தணர் குலத்தில் பிறந்தவர். அவர் சிறுவனாக இருந்தபோது அந்நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்பவரால் மகனாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர். தனது மகன்போல ஏற்றுக்கொள்ளுதல் மரபு ஆதலினால் சுந்தரர் அந்தணர் மரபிலும் அரச மரபிலும் வளர்ந்தவர் என்று சேக்கிழார் கூறுகிறார்.
அக்காலத்து மாப்பிள்ளை மணக்கோலத்தில் பெண் வீட்டிற்குச் சென்று அங்கு முறைப்படி மணந்துகொள்வது மரபு. மணப்பெண் வீட்டினர் மணவிழாவைக் கொண்டாடும்விதமாக பூப்பந்தல் அமைத்து, பலவிதமாக அலங்கரித்து, மணநாளின் முந்திய நாள் மாப்பிள்ளைக்கு மந்திரவிதிப்படி பொன்னால் செய்த காப்பு அணிவிப்பார்கள். திருமண நாளன்று சடங்குகள் எல்லாம் செய்தனர் என்பதை சேக்கிழார்,
“மாமறைவிதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றினர்” என்கிறார்.
பின்னர் கணிதநூல் புலவர் குறித்துக்கொடுத்த திருமண நேரம் வருவதற்கு முன்பாக மணமகனுக்கு திருமஞ்சனநீர் ஆட்டுவித்து பட்டாடை புனைந்து பன்னீரில் சந்தனக்கலவை சாத்தி மணக்கோலம் பூணச் செய்வர். பின்னர் மங்கல கீதம் முழங்க, மகளிர் சூழ, மறையவர்கள் மந்திரம் ஒலிக்க திருமணப்பந்தலுக்குள் மணமகன் வந்து அமர்வார்.

அவ்வாறு சுந்தரர் வந்ததை சேக்கிழார்,
“நிறைகுடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகை ஏந்தி
நறைமலர் அருகு சுண்ணம் நறும்பொரி பலவும்வீசி
உறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்துவீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார்” என்று விளக்குகிறார்.

இந்த எழில் மிகு காட்சியை சேக்கிழார் காட்டியப் பின்னர் சிவபெருமான், சுந்தரரை தடுத்தாட்கொண்டதை விரித்து எழுதிச் செல்கிறார்.

சுந்தரர் திருமணவிழா குறித்து பெரியபுராணத்தில் சேக்கிழார் குறித்துள்ள அனைத்தும் சங்ககால அகப்பாட்டில் கூறப் பட்டுள்ளவை என்பதைக் காண முடிகிறது.
தமிழ் மரபில் மணவினை என்பது சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஒன்றுபோலவே நடைபெற்று வருகிறது என்பதைக் காண்கிறோம்.
ஒரு மாபெரும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் காண்கிறோம். ஒரு மனித வாழ்வில் திருமணம் என்பது மிகவும் இன்றியமையாத நிகழ்ச்சி. அதில் ஒவ்வொரு அங்கமும் அனைவர் உள்ளத்திலும் மங்கல நிகழ்ச்சியாகவும் இன்பம் பயப்பதாகவும் இருத்தல் வேண்டும். இதுவே ஈராயிரம் ஆண்டுகளாக காலந்தோறும் நம்மிடையே வளர்ந்து வந்துள்ள பண்பு. இதையே வரலாற்று ஆசிரியர் 'தமிழ் பண்பு' என்பர்.
இத்தகைய இன்பமான நினைவுகள் தரும் மணவிழாவை அரசியல் மேடையாகவோ, அரசியல் எதிரியைத் தூற்றும் வாய்ப்பாகவோ பண்புள்ள எவரும் பயன்படுத்தமாட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

5. தொல்காப்பியமும் தமிழர் வாழ்வும்
முந்தைய அத்தியாயங்களில், தமிழ் இலக்கியங்களில் தமிழர்களின் திருமணங்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் கண்டோம்.

“களவியலும்”, “கற்பியலும்” அகத்திணையின் ஒரு பகுதி என்று உரையாசிரியர்கள் கூறுவர். இம்மரபு இன்பச்சுவையின் அடிப்படையில் நாட்டிய வழக்குக்கு ஏற்ப புனையப்படவேண்டும். அதைத்தான், தொல்காப்பியத்தில் “நாடகவழக்கிலும் உலகியல் வழக்கிலும்” என்னும் சூத்திரத்தால் குறிப்பிட்டார்.

“களவியலும்” நாட்டிய மரபைப்போலவே அமைக்கப்பட்டதுதான். திருமணத்துக்கு முன்னர் ஓர் ஆணும் பெண்ணும் காமவசப்பட்டு இணைவதை களவியல் பகுதியில் தொல்காப்பியம் கூறுகிறது. இதையும் ஒரு மணமாகவே தமிழ்மரபு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆயினும், இது இறுதியில் “கற்பு” விதிப்படி திருமணத்தில் முடிதல் வேண்டும். திருமணத்துக்கு முன்னர் ஓர் ஆணும் பெண்ணும் இணைதல் அறம் ஆகுமா? என்ற கேள்விக்கு, தொல்காப்பியம் அறமே என்று கூறுகிறது. ஆனால் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவேண்டும். “களவு” “கற்பில்” முடியவேண்டும் என்று விதிக்கிறது. இதை வேதம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்
காமக்கூட்டம் கூறும் காலை
மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”
என்பது சூத்திரம்.
மறையோர் தமது நூலில் எட்டுவகையான மணங்களைக் கூறியுள்ளனர். அவற்றில் “களவு மணமும்” ஒன்று. “மறையோர் தேயம் என்னில் என்ன எனில், மறையோர் இடத்து ஓதப்பட்ட” என்றும், “களவு என்று சொல்லப்படுகின்ற ஒழுக்கம் அறத்துக்கு அப்பாற்பட்ட நெறி அல்ல, வேத விதியாகிய தந்திர நெறி” என்று உரை ஆசிரியர் இளம்பூரணர் கூறுகிறார்.

கந்தர்வர் என்ற தெய்வப்பிறவிகள் ஆணும் பெண்ணுமாக எப்பொழுதும் இணை பிரியாது யாழேந்திச்செல்வர். அவர்போல் களவியலில் கூடியோர் செல்வர் என்பது சூத்திரத்தின் பொருள். இதை “கந்தர்வ மணம்” என்பர்.

களவியலுக்குப் பிறகு கற்பியலைத் தொல்காப்பியம் கூறுகிறது. கற்பு மணம் குறித்து தொல்காப்பிய சூத்திரத்தை ஏற்கெனவே கண்டுள்ளோம் இப்பகுதியில் வைதிக மரபில் குறிக்கப்பட்ட எட்டுவகையான மணங்களை தொல்காப்பியம் குறிக்கிறது எனவும் கண்டோம்.
மேலும் கற்பியலின் கீழ் நான்கு முக்கிய மரபுகளை தொல்காப்பியம் கூறுகிறது. மணவாழ்விலே தலைவனும் தலைவியும், செவிலித் தாயும் தோழியும் எவ்வாறு பேசவேண்டும் என்றும், எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் விரிவாக தொல்காப்பியம் கூறுகிறது. எடுத்துக்காட்டாக தலைமகன் தெய்வத்தை வணங்கும்போது எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும், அந்தணர் திறத்தும், அறிஞர் திறத்தும் ஏனையோரிடத்தும் எவ்வாறு பழகவேண்டும் என்றும் தொல்காப்பியம் விதிக்கிறது.
“ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்...
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பில் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்”
இதுபோல் தலைவி எவ்வாறு பழகவேண்டும் என்றும் தாய், தோழி ஆகியோரிடம் பழகவேண்டிய மரபுகளும் குறிக்கப்பட்டுள்ளன. இந்த மரபுகள் இன்றும் பெரும்பாலான இல்லங்களில் பின்பற்றப் படுகின்றன. “மறையோர் என்போர் குலனும், குணமும் கல்வியும் உடையோராகிய அந்தணர்” என்கிறார் இளம்பூரணர்.
இவற்றை நாட்டிய மரபிலே அமைத்தல்வேண்டும் என்பவையே தமிழ் மக்களின் வாழ்வியல் எனலாம். இதுவே தொல்காப்பியர் நோக்கமாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard