8 . புறத்திணையும் நாட்டிய வழக்கே! முந்தைய அத்தியாயத்தில் புறத்திணையும் நாட்டிய வழக்கே என்று கூறியிருந்தேன். மன்னர்கள் போரில் பெறும் வெற்றியும், வீழ்தல், நடுகல், எடுத்தல் முதலியவும் எப்படி நாட்டிய மரபாகும் என்ற ஐயம் ஏற்படுவது இயற்கையே. தொல்காப்பியரின் புறப்பொருள் சூத்திரங்களையும், உரை ஆசிரியர்களின் விருத்திகளையும் ஆழ்ந்து படிப்போருக்கு இம்மரபுகள் “நாட்டிய மரபுகளே” என்பது எளிதில் விளங்கும். எடுத்துக்காட்டாக மாடு பிடிக்கச்செல்லும் இடத்து தொல்காப்பியர் “துடிநிலை” என்றும் “கொற்றவை நிலை” என்றும் இரண்டு துறைகளைக் கூறுகிறார். இவை இரண்டும் கூத்துக்கள் என்றும் அவரே கூறியுள்ளார். வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறி ஆட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி வேந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆர்என வரூஉம் மாபெரும் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவர் ஏந்திய ஓடா கழல்நிலை உளப்பட ஓடா உடல் வேந்தடுக்கிய உன்ன நிலையும் ..... என்று தொடங்கும் சூத்திரத்தில் தொல்காப்பியர் 21 வகையான நிலைகளைக் கூறுகிறார்.
இவை அனைத்தும் கூத்துகள் என்பது படிப்போர் அறிவர். இதை உரை ஆசிரியர் தெய்வத்துக்குச் செய்யும் கடன்களை அறிந்த வெறி அயர்ந்த வேலன் “காந்தள் பூவை சூடிக்கொண்டு ஆடிய கூத்து” என்று கூறுகிறார். அதேபோல எந்த அரசனின் வீரர்கள் வென்றார்கள் என்று அறிய போந்தை (பனம் பூ), அல்லது வேம்பு அல்லது ஆர்பூ (அத்திப்பூ) ஆகிய பூக்களில் ஒன்றை சூடிக்கொண்டு ஆடுவதை “மலைந்த பூ” என்றும், பிற “வள்ளிக்கூத்து”, “உன்ன நிலை”, “பூவைநிலை” என்று 21 வகையான கூத்துகள் என்று தொல்காப்பியரே சூத்திரத்தில் குறித்துள்ளார். இவற்றைத் துறைகள் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். மேலும் ஓர் எடுத்துக்காட்டு. தொல்காப்பியர் கூறும் “பூவைநிலை” என்றால் என்ன? ஓர் அரசன், மாற்றானுடன் கடுமையாகப் போரிட்டு, முருகன் போலவோ அல்லது கண்ணன் போலவோ அல்லது பலராமன் போன்றோ வெற்றி அடைந்தான் என்றால், அந்த அரசனை முருகன் அல்லது கண்ணனாக உருவகித்து பாணரும் விறலியரும் புகழ்ந்து பாடி ஆடுவது “பூவைநிலை” என்று கூறுகிறார். இதுபோல் புறத்திணையில் எத்தனை துறைகள் உள்ளனவோ அத்தனை வகை கூத்துகள் குறிக்கப்படுகின்றன. அதுபோல் வீரம் விளைவித்து இறந்துபட்ட மறவனுக்கு நடுகல் எடுக்கும் ஒவ்வொரு நிலையும் “ஒரு துறை என்றோ கூத்து என்றோ” அறிகிறோம். ஆதலால் புறத்திணை இயல் முழுதும் நாடக வழக்கின் அடிப்படையில் என்பது திண்ணம்.