Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 21. இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
21. இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்
Permalink  
 


21. இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்
ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழக வரலாற்றில் மகோன்னதமாக விளங்கியது சோழப் பெருமன்னர்களின் ஆட்சி. அவர்களது ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் இமயத்தை எட்டியது போல் உயர்ந்து நின்றது. அவர்கள் ஆட்சி கலைகளிலே, கட்டட வல்லமையிலே, இசையிலே, நாட்டியத்திலே, ஓவியத்திலே, இலக்கியத்திலே, வேளான்குடிச் செம்மையிலே, பொருளாதாரத்திலே, வெளி நாட்டுத் தொடர்பிலே, கடல் கடந்த கடாரம்வரை வென்ற ஆண்மையிலே, குடியாட்சி முறையிலே அவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை. அதனால் அவர்கள் ஆட்சியை உலக வரலாற்று அறிஞர்கள் பொற்காலம் என்று கூறுவர்.

இவ்வளவு சிறப்புகளையும் ஒருங்கே அவர்கள் அடைந்திடக் காரணமானது அவர்கள் கடைபிடித்த தர்ம நெறியே. அவர்கள் பின்பற்றிய அறநெறி “மனு நெறி”. அதற்கும் காரணம் தர்ம சாத்திரம் அளித்த மனுவின் வழித்தோன்றல்கள் அவர்கள். மனுவின் மைந்தன் இக்ஷ்வாகு. இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றியவன்தான் உலகம் போற்றும் இராமபிரான். அந்த இராமன் வம்சத்தில் உதித்தவர் சோழப் பெரு மன்னர்கள். இதை சோழர்களது செப்பேடுகளே தவறாமல் குறிக்கின்றன. இதே வம்சத்தில் உதித்தவன் புறாவுக்காக தன் சதையை அறுத்தளித்த மன்னன் சிபிச்சக்ரவர்த்தி. இதையும் சோழச் செப்பேடுகள் கூறுகின்றன.

“இக்ஷ்வாகு வம்ச பிரபவ: இராமோ நாம ஜனைச் சுருதஹ:” என்று இராமன் பிறப்பை வடமொழி நூல்கள் கூறுகின்றன.

இராமனது வரலாற்றையும், சிபியின் வரலாற்றையும் குறித்து சங்க இலக்கியமாம் புறநானூற்றிலேயே குறிப்புகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்கள் பலர் கோதண்டராமன் என்று பெயர் பூண்டிருந்தனர். இராமனை அறத்தின் மூர்த்தியாகக் கூறுவது வழக்கம். இராமன் மனு வகுத்த அறத்தைப் பின்பற்றினான். இக்ஷ்வாகு வழியாக தங்களை கூறிக்கொண்ட சோழர்களின் லெய்டன் செப்பேடு, திருவாலங்காடு செப்பேடு, இந்தளூர் செப்பேடு முதலிய அனைத்து செப்பேடுகளிலும், தாங்கள் தமிழகம் ஆண்ட மனுவின் வழிவந்த இக்ஷ்வாகு வம்சத்தினர் என இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், குலோத்துங்கன் முதலிய அரசர்கள் எல்லாம் குறித்துள்ளனர். சூரியன் மனுவுக்கு தரும நெறியின் நுணுக்கங்களைப் போதித்தான். அதை மனு இக்ஷ்வாகுக்குக் கூறினார். இவ்வாறுதான் மனு தர்மம் உலகிலே நிலவியது. இதை அரசர்களில் இரிஷிகளாகத் திகழ்ந்த பெரியோர்கள், காத்துத் தந்தனர் என்று கண்ணன் பகவத் கீதையில் கூறுகின்றான்.
விவஸ்வான் மனவே பிராரஹ
மனு இக்ஷ்வாகவே அப்ரவீத்
மனுதான் சோழ வம்சத்தைத் தோற்றுவித்தவன் என்பதை பல சோழ செப்பேடுகளும் ஏராளமான தமிழ் இலக்கியங்களும் சான்று கூறுகின்றன. சிலப்பதிகாரமும் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டுவரை வந்துள்ள பராந்தக சோழன், சுந்தர சோழன், முதலாம் இராஜ இராஜ சோழன், இராஜேந்திரன், முதலியோர்களின் செப்பேடுகளிலும், மனுவையும், இக்ஷ்வாகுவையும் சோழ வம்சத்து மன்னர்களாகவே குறித்துள்ளனர். இவற்றில், மனு, இக்ஷ்வாகு, சிபி சக்ரவர்த்தி, முசுகுந்தன் முதலிய அரசர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். சித்தூர் மாவட்டம், புங்கனூர் தாலுக்காவில், சாராளா என்ற ஊரில் கிடைத்த, 1069 இல் வெளியிடப்பட்ட வீர இராஜேந்திரன் செப்பேட்டில் ஓர் இன்றியமையாத செய்தி உள்ளது. பல புகழ் வாய்ந்த அரசர்களின் பெயர்கள் அதில் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மனு, இக்ஷ்வாகு, அரிச்சந்திரன், முசுகுந்தன், பகீரதன் முதலிய வரலாற்று சிறப்பு மிகுந்த மன்னர்கள் எல்லாருமே குறிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சோழ மன்னர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்கள். இவர்களை அடுத்து திலீபன், இராமன், இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகிய அரசர்களும் குறிக்கப்படுகிறார்கள்.

காளிதாச மகாகவி, தான் எழுதிய இரகுவம்சம் என்னும் காப்பியத்தில் திலீபன், இரகு, அஜன், தசரதன் என்பவர்களைக் குறித்து அவர்களுக்குப் பின்னர், இராமன் முதலிய நான்கு சகோதரர்களையும் அரசர்களாகக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து ஸ்ரீராமர், இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகிய நால்வரும் சோழ வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்று 11ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் மக்கள் கருதியிருக்கிறார்கள் என்று தெளிவாகிறது. பண்டைய காலத்தில் பாரத நாட்டில் வட நாட்டிலிருந்து தென் பகுதிக்கு வருவதும், தென் நாட்டிலிருந்து வட பகுதிக்குச் செல்வதும் ஆட்சியை அமைத்துக் கொள்வதும் பெரும் மரபாக இருந்துள்ளது. எடுத்துக்காட்டாக, கர்நாடக தேசத்தார் வங்காள தேசத்தோடு போரிட்டபோது, கங்கர் மரபைச் சார்ந்த சேனை வீரர்கள் வங்கத்தில் தங்கி “சேனர்” என்ற அரச வம்சத்தாராக ஆண்டு வந்ததை அங்கு பல சான்றுகள் கூறுகின்றன.

அதே போல காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ வம்சத்தினர் ஒரு கிளையாகப் பிரிந்து கர்நாடகப் பகுதிக்குச் சென்று அங்கே உள்ள நூளம்ப பல்லவர்கள் என்ற பெயரில் ஆண்டு வந்தனர் என்று அவர்தம் கல்வெட்டுகளும், கோயில்களும் அங்கு இன்றும் பறை சாற்றுகின்றன. அதேபோல திருச்சிக்கு அருகில் உள்ள கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர்களின் கிளையாகப்பட்டவர்கள் பிரிந்து மலையாள கடற்கரைக்குச் சென்று அங்கு ஆண்டிருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். சங்க காலத்தில் அகத்திய மாமுனிவர் பல வேளிர்களை அழைத்துக் கொண்டுவந்து அவர்களை தமிழகத்தில் பல இடங்களில் தங்கி சிற்றரசுகளை நிறுவி அங்கே ஆண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

அதேபோல் மகாபாரதத்தில் ஒருவரான அர்ஜுனன் தென்னாடு வந்த போது மதுரைக்கு அருகில் மணலூரில் ஆண்ட ஒரு மன்னனின் மகளை மணந்துகொண்டான் என்றும், அவனுக்குப் பிறந்த மகனே பாண்டியன் என்று பெயரெடுத்து தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டான் என்றும், அவனே வட பால் கண்ணன் வாழ்ந்த மதுராபுரியைப்போல தமிழகத்தில் வைகைக் கரையில் மதுராபுரியை நிர்மாணித்தான் என்றும் அதுவே இப்போது நாம் கூறும் மதுரை மாநகரம் என்றும், பாரதத்தை ஆய்ந்த இராகவ ஐயங்கார் சந்தேகமின்றி நிரூபித்திருக்கிறார்.

அது போல் சோழ வம்சத்தை நிறுவிய மனுவழி வந்த இக்ஷ்வாகு வம்சம் சில அரசர்களுக்குப்பின் வட திசை சென்று தர்ம ஷேத்ரத்தை நிறுவி அயோத்தி மாநகரை ஆண்டிருக்கிறார்கள் என்று கொள்வதில் தவறில்லை.

திலீபனுக்குப் பிறகு மனுவினுடைய வம்சம் இரு கிளைகளாகப் பிரிந்து ஒன்று அயோத்தி மாநகரிலும், மற்றொன்று தமிழ் நாட்டுக் காவிரிக்கரையிலும் ஆட்சி புரிந்தது. அதனால் அயோத்தி இராமன் சோழ நாட்டின் வம்சத்தானாகக் கூறியதில் வியப்பில்லை. எனவே சோழர் செப்பேட்டில் இராம, இலட்சுமணர்கள் சோழ வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்று சாளார செப்பேடு கூறுவதில் தவறில்லை. ஸ்ரீராமன் தமிழகத்தை ஆண்ட சோழ வம்சாவளியைச் சேர்ந்தவன். இராமனும் சோழ மன்னனே.

அர்ஜுனனின் வழி வந்த பாண்டியர்கள், வியாச முனிவன் எழுதிய சமஸ்க்ருதத்தில் இருந்த மஹாபாரதத்தை தமிழில் மொழி பெயர்த்து அதைத் தங்கள் வம்சத்தின் மிகச் சிறந்த பணிகளில் ஒன்றாக மீண்டும் மீண்டும் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கூறிக் கொள்வதைக் காண்கிறோம். மஹாபாரதமும், இராம காதையும் தமிழ் மக்களுடைய உணர்விலும், உயிரிலும் ஒன்றி அவர்களது பண்பாட்டை மிகச் சிறந்த பண்பாடாக, அனைத்துத் துறைகளிலும் சிறந்தோங்கிய செல்வமாகப் போற்றி வாழ்ந்து வருகின்றனர். ஆழ்வார்கள் இராமனை “அயோத்தியர் கோமான்” என்று வாழ்த்தி வணங்கினர். பல பண்டைய கோவில் கல்வெட்டுகள் அவரை “அயோத்தி பெருமான்” என்று கூறி நாள் தோறும் வழிபாடும் விழாவும் எடுத்து மகிழ்கின்றனர்.

“கல்லும் காவேரியும் உள்ளவரை கம்பநாடன் கவிதைக்கு அடிமையாம்” என கொங்கு நாட்டார் கல்வெட்டுகள் கூறுகின்றன. நம் நாட்டில் மட்டுமல்ல கடல் கடந்த தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஏராளமான இராம காதைகள் அந்த நாட்டின் உயிர் துடிப்பாக இன்றும் வழங்கி வருகின்றன. தாய்லாந்து தலைநகர் பாங்காக் இருநூறு ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அயோத்தி என்ற நகரம் ஐநூறு ஆண்டுகளாக அந்நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது. தாய்லாந்தை ஆண்ட மன்னர்கள் தங்களை இராமன் என்றே கூறிக்கொண்டனர். இன்றும் தாய்லாந்தை ஆளும் அரசருக்கு இராமர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. தாய்லாந்து மன்னர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுவர் ஆயினும் இந்து சமய கோயில் ஒன்றை அரசாங்கக் கோயிலாகக்கொண்டு அவர் அங்கு வந்து இந்து தெய்வங்களை வழிபடுகிற மரபு உண்டு. இன்றும் அங்குள்ள அந்த கோதண்டராமர் கோயிலில் வழிபாடு நடக்கிறது. அண்டை நாடான கம்போடியா நாட்டிலும் தினந்தோறும் வழிபாடு நடைபெறுகிறது. கம்போடியாவில் 1000 ஆண்டுகளுக்கு முன் உலகமே வியக்கும் அங்கோர்வாட் என்னும் கோயிலை எழுப்பித்த ஒரு மன்னன் தன் தலைநகரைப் புதுப்பிக்கும்போது அயோத்திபோல் புதுப்பித்தேன் என்றும், இங்கு வைவஸ்வத மனுவின் அறநூல்தான் நெறி என்றும் குறிக்கிறான். உலகெங்கும் தர்ம நெறியை நெறியின் சின்னமாக, பண்பாட்டுச் சின்னமாக மக்கள் அனைவரும் மகிழ எல்லாப் பொருளும், கலையும் தலை சிறந்து சிறக்க வந்து தோன்றியவர் இராமர். அவரை நினைவு கூர்ந்து வணங்குவோமாக. இராமன் காலால் நடந்துவந்த தமிழ்நாடு. இராமன் இங்கிருந்து சென்றுதான் இலங்கை இராட்சசனை அழித்து வந்தான். இராமன் பாலம் கட்டிச் சென்றதை சிறப்பித்து இராம சேது என்று போற்றித்திகழ்வது தமிழ்நாடு. இராமன் தென்னாடுடைய சிவபெருமானை பூஜித்தது தமிழ் நாட்டில். இராமனே தனது குல தெய்வமான அரங்கத்தம்மனை விபீஷணனுக்குக் கொடுத்து இன்றும் அவ்வழிபாடு நடக்கும் நாடு தமிழ் நாடு.

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடைய வில்? எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்
என்று பாடினான் பாரதி. அந்த பாரதத் தாயை வணங்கிடுவோம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard