Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 9. கோளில் பொறியிற் குணமிலவே


Guru

Status: Offline
Posts: 7468
Date:
9. கோளில் பொறியிற் குணமிலவே
Permalink  
 


கோளில்பொறியிற்குணமிலவேயெண்குணத்தான்
தாளைவணங்காத்தலை.

 

எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம்.

எண் குணங்களாவன தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன. தாளை வணங்காத் தலையென்று தலையையே விதந்தோதினாரெனினும், வழுத்தாநாவும், புகழ்கேளாச் செவியும் அங்ஙனமே பயனில்லாதனவென்று கொள்க. குணமிலவே என்னும் பன்மை வினைகொண்டு முடிதலால், தலை என்பது பன்மை குறித்துவந்த பால் பகாவஃறிண்ணைப் பெயர். இறைவனுக்கு உடம்பில்லாவிடினும், அவன் என்றேனும் ஒருவடிவுகொள்ளின் அதன் அடியும் முடியும் ஒரு நிகரவாகவே தூய்மையாயிருப்பினும், அவனை வணங்கும் மக்களின் பணிவியலை மிகுத்துக்காட்டற்கே, திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் என்று கூறுவது மரபாகும்.

இறைவன் வழிபாட்டிற்குப் பயன்படுவதே மாந்தன் உடம்பின் தலையாய பயன் என்பது இக்குறட் கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:9)

பொழிப்பு (மு வரதராசன்): கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

மணக்குடவர் உரை: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.
உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

பரிமேலழகர் உரை: கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
(எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராத கண், கேளாத செவி போலப் பயனற்றது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
எண் குணத்தான் தாளை வணங்காத் தலை கோள் இல் பொறியில் குணம் இலவே .

பதவுரை: கோள்இல்-கொள்ளுதல் இல்லாத (இங்கு ஊறு, சுவை, ஒளி, மணம், ஓசை என்ற புலன்களைக் கொள்ளுதல் இயலாத என்பதைக் குறிக்கும்), கொள்கை இல்லாத, குறிக்கோள் அற்ற; பொறியின்-பொறிபோல (மெய், வாய், கண், மூக்கு, செவி போல); குணம் இலவே-குணமில்லையே, பயனில்லையே; எண்குணத்தான்- எண்ணப்பட்ட குணங்களையுடையவன்; தாளை-அடியை; வணங்காத் தலை-வணங்காத தலைகள் (குணமிலவே என்னும் பன்மைச் சொல்லைத் தழுவியதால் தலைகள்);


கோள் இல் பொறியின் குணம் இல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல.
பரிப்பெருமாள்: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல,
பரிப்பெருமாள் குறிப்புரை: குணமில்லை என்றது பயனில்லை என்றவாறு.
பரிதி: கோளாகிய நவக்கிரகங்களும், பலனாகிய கண், வாய், மூக்கு, செவி, மெய் என்னும் ஐம்புலன்களும் உண்டாகிலும் பயனில்லை.
[இவர் குறிப்பிடும் நவக்கிரகங்கள்: ஞாயிறு, திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி,ராகு, கேது.]
காலிங்கர்: கோட்பரமில்லாத பொறியினைப் போலக் குணமில்லனவாம். [கோட்பரம் - கொள்கை நோக்கு]
பரிமேலழகர்: தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல;

மணக்குடவர் ''பொறிகளை உடைய பொம்மை போல' குணமில்லை' என இப்பகுதிக்குப் பொருள் கொள்கிறார். பரிதி ''கோள்கள் அவற்றின் பலனாகிய ஐம்புலன்கள் இருப்பினும் எனப் பொருள் கூறி சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராய் பயனில்லை'' என்று விளக்கம் தருகிறார். காலிங்கர் 'புலன் உணர்வு அற்ற ஐம்பொறிகள்' எனக் குறிக்கிறார். பரிமேலழகரது 'கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்லாத'' என்ற உரை காலிங்கர் உரையை ஒத்தது.

இன்றைய ஆசிரியர்கள் 'புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயனற்றவையாகும்', 'மூளையின் குணமாகிய சிந்தனைச் சக்தி இல்லாததென்றுதான் சொல்ல வேண்டும்.', 'கேட்குஞ் சக்தியற்ற காது, பார்க்குஞ் சக்தியற்ற கண் முதலிய செயற்றிறமில்லாத உறுப்புக்கள் போலப் பயனில்லாதனவே', 'பயனில்லாத உறுப்புகளைப் போலப் பய்யனற்றனவே', என்ற பொருளில் உரை தந்தனர்.

பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல உணர்வில்லாதவை என்பது இப்பகுதியின் பொருள்.

எண் குணத்தான் தாளை வணங்காத் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.
மணக்குடவர் குறிப்புரை: உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புகள் என்றார்.
பரிப்பெருமாள்: எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வணங்காதார்க்கு உளதாகும் குற்றம் கூறிற்று. இவை எல்லாம் தலைமை பற்றிக் கூறியவாறு கண்டுகொள்க. இவ்வதிகாரத்திற் கூறிய கடவுட் பெயர் எல்லாம் ஒரு சமயத்தார் கூறும் பெயரன்றி, வேறு வேறாகப்பலசமயத்தார் கூறும் பெயராகத் தோன்றா நின்றது. அதற்குக் காரணம் என்னை எனின் இஃது எமக்குப் புலனாயிற்றன்று. அச்சமயத்தார் எல்லாரும் தன்னெறிக்கண் செல்லும் உள்ளத்தார் ஆகலின் யாதானும் ஒரு சமயத்தார் கூறிய கடவுளை வணங்கின் நன்றிபயக்கும் என்பது போதுங் கருத்து.
பரிதியார்: எட்டுக்குணங்களை உடைய சிவன் சிவந்ததாளை வணங்காத தலை.
எட்டுக்குணங்களாவன: அனந்தஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாயியல்பு என்பன.
காலிங்கர்: எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவனது தாளினை வணங்கப்பெறாத தலைகள் என்றவாறு.
பரிமேலழகர்: எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
பரிமேலழகர் குறிப்புரை: எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.

மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர் ஆகிய மூவரும் 'எட்டுக்குணங்களைக் கொண்டவன் திருவடியை வணங்காத தலை' என்று பொருள் கூற இப்பகுதிக்குக் காலிங்கர் மாறுபட்ட உரையாக எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவன் தாளை வணங்காத தலை' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எளிய குணமுடைய இறைவனின் திருவடிகள வணங்காத தலைகள்', 'எல்லா நல்ல குணங்களும் வல்லமைகளும் உள்ள்வனாகிய இறைவனை உணர்ந்து அவனை வணங்காத மனிதனுடைய மூளை', 'எட்டாகக் கூறப்படும் உயர்ந்த தன்மைகளையுடைய கடவுளின் திருவடிகளை வழிபடாத தலைகளானவை', 'மக்களால் நினைப்பதற்குரிய குணங்களையுடைய கடவுளின் அடிகளை வணங்காத தலைகள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மாந்தர் எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எண்குணத்தான் திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை என்பது பாடலின் பொருள்.
'எண்குணத்தான்' குறிப்பது என்ன?

இறைவனது தாளை வணங்காதவன் அறிவில்லாதவன்.

ஒருவனுக்குக் கண், காது, மூக்கு, முதலிய பொறிகள் இருந்தும் அவை இயங்காவிட்டால் அவற்றால் அவனுக்குப் பயனில்லை. அவ்வாறே எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத் தலை இருந்தும் இல்லாதது போல்தான்.
மாந்தர்க்குத் தலை இருப்பது இறைவனை வணங்குவதற்குத்தான்.
'கோளில் பொறியின்' என்பதற்கு கொள்ளுதல் இல்லாத அல்லது கொள்கை இல்லாத பொறிகள்போல என்பது பொருள். அதாவது அவை தத்தமக்குரிய புலன் உணர்வுகள் (Senses) இல்லாத பொறிகள் (Organs) ஆகும். புலனில்லாத பொறிகள் என்பது உற்றறியா மெய், சுவையறியா வாய், காணாத கண், நுகரா மூக்கு, கேளாச் செவி என்பனவற்றைக் குறிப்பது. அது போல எண்குணத்தான் திருவடியை நினையாதவர் குணமற்ற அதாவது செயல்திறமில்லாத தலைகள் கொண்டவராயிருப்பர் என்கிறது இப்பாடல். குணமில்லாத தலை என்றது உணர்வில்லாத அதாவது மூளை செயல்படாத தலையைக் குறித்தது. சிந்தனைத் திறன் தந்த இறைவனை நினைந்து வணங்காத தலையில் அறிவு இல்லை என்பது கருத்து.
எண்குணத்தான் என்றது எண்ணிய குணத்தை உடைய இறைவன் என்ற பொருள் தருவது.

இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள தாள் இறைவன் திருவடியைக் குறிக்கும். 'இவ்வதிகாரத்து, 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்' என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் 'தாள்' பற்றித் தண்டபாணி தேசிகர் கருத்துரைத்துள்ளார். இவ்விளக்கத்தின்படி குறளில் சொல்லப்படுவது உருவமற்ற தாள் எனவும் அதை மறவாமல் நினைந்து, அவன் அருளை வேண்டித் தலை வணங்க வேண்டும் எனக் கொள்ளவேண்டும்.
'வணங்கா' என்பது வணங்காத, வளையாத, பணியாத எனப் பொருள்படும்.
"தாளை வணங்காத தலை' என்பதிலுள்ள தலையைச் சினைப் பெயராகக் கொள்ளாமல் இடப்பொருளாகக் கருதி "தாளை வணங்காவிடத்து" என்றும் உரை கண்டனர். ஆனால் இது இலக்கணமுறைப்படி தவறு என்று இரா சாரங்கபாணி சுட்டிக் காட்டுகிறார்: 'அப்படிப் பொருள் கொண்டால், 'எவை குணமில' என்பதற்கு இக்குறளில் எழுவாய் இன்றிப்போகும். 'குணமில' என்பதற்குத் தலை எழுவாயாக அமைகிறது. எனவே தலை என்பதற்குச் சினைப் பெயராகக் கொள்வதே ஏற்புடைத்து.' என்பது அவர் தரும் விளக்கம்.
வணங்குதலும் நினைத்தல், வழிபடல் போன்று மன, மொழி, மெய் ஒன்றுபட்ட செயலாகும். வணங்குதல் என்றவுடன் இறைவனின் திருவுருவின்முன் வீழ்ந்து வணங்குதலாகிய செய்கை நினைவுக்கு வரலாம். அப்படியென்றால் இங்கு உருவ வழிபாடு சொல்லப்பட்டுள்ளதா? எதனை வணங்குவது? எதன் முன் பணிவது?
கடவுளுக்கு இன்ன உருவம், நிறம் என்றெல்லாம் குறளில் எங்கும் கூறப்படவில்லை. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று இறைவனை இந்த முறையில் இந்த நேரத்தில் வழிபடு என எந்தக் குறளும் கூறவில்லை. தாள்சேர், அடிசேர் என்று மட்டுமே குறள் சொல்கிறது. தாள் சேர் என்பதற்கு முன்பகுதியில் விளக்கப்பட்டது போல் மறவாது நினைத்தல் என்றே பொருள். அதுபோல் 'தாளை வணங்காத' என்பதற்கு இறைவனை இடைவிடாது நினைக்காத என்று பொருள் கொள்ள வேண்டும். அகத்தொடு தொடர்புடைய வழிபாடுதான் வள்ளுவர் கூறுவது. அதாவது; தாளை வணங்கும் மனிதனும் வணங்கப்படும் இறைவனும் ஒரு தளத்தில் இல்லை. தலைவணக்கம் என்பது முனைப்பின்மையை உணர்த்துவது. எனவே இங்கு உறுப்பு வணக்கமோ உருவவழிபாடோ சொல்லப்படவில்லை. தான் என்ற முனைப்பின்றி உருவமற்ற தாளை நினைந்து கடவுளின் அருளை வேண்டி நிற்காத தலை என்பது வணங்கா தலை என்பதற்குப் பொருள் ஆகும்.

தலையினுடைய வேலை சிந்தித்துப் பார்த்தல். சிந்தித்துப் பார்க்கிற தலை கடவுளை வணங்கும். உருவமில்லாத இறைவனைக் குணவடிவினனாக்கி வணக்கத்துடன் இடையறாது நினைத்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

இக்குறளில் காணப்படும் ஒலியின் சிறப்புத்தன்மையை இ சுந்தரமூர்த்தி இவ்விதம் பாராட்டி மகிழ்கிறார்: ' 'குணமிலவே' என்றதில் அமைந்துள்ள ஏகாரப்பொருள் இறைவனை வணங்காதிருப்போரிடத்துப் பரிவுணர்ச்சியைத் தோற்றுவிப்பது போல் அமைந்து விளங்குகின்றது என்பர். 'தலை குணம் இலவே' என்றதில் ஏகாரம் இரக்கமும் பரிவும் இசைந்து நின்றது. அந்த ஒலியின் நீர்மையை உள்ளச் செவியால் கூர்மையாய் ஓர்ந்து கொள்க. அரிய பயனை இழந்து அவமே இழிந்து போவது பெரிய இரக்கத்திற்குரியது என்னும் பொருள்கள் எகாரக் குறிப்புப் பெற்றுத் துலங்குவதை எடுத்துக் காட்டுவர்....ஒலியின் நீர்மையை உள்ள உணர்வாலும் மொழியின் நடையியல்பை உணர்ந்து ஓதும் திறத்தாலுமே உணரமுடியும்.'

'எண்குணத்தான்' குறிப்பது என்ன?

எண்குணத்தான் என்பது இங்கு இறைவனைக் குறிக்கும். இச்சொல்லுக்கு எட்டுக் குணங்கள் கொண்டவன், எளிய குணம் உடையவன், எண்ணப்பட்ட குணங்களை உடையவன் என்னும் மூன்று வகையான விளக்கங்கள் காணப்பெறுகின்றன.

எட்டுக் குணங்கள் கொண்டவன் என்றது சமணக் கடவுளைக் குறிக்கும் என்று சிலரும் சைவ சமயக் கடவுளான சிவனைச் சொல்வது என்று வேறு சிலரும் கூறுவர். பரிமேலழகர் முதலில் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகிய எட்டுக் குணங்களைக் கூறி அவை 'சைவாகமத்துக் கூறப்பட்டது' என்றும் சொல்கிறார். இவரே அடுத்து மற்றவர்கள் உரைப்பதாக 'அணிமா'வை முதலாக உடைய மகிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டும் என்று கூறி, சமண சமயத்தார் கூறும் 'கடை இலா அறிவை' முதலாக உடைய கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுள் இன்மை, அழியா இயல்பு என்ற எட்டு குணங்களையும் பட்டியலிடுகிறார்.
பரிதி உரையில் காணும் சைவ சமயக் கடவுளான சிவனுக்குரிய எட்டுக் குணங்களும், சைவாகமத்துள் கூறப்பட்டதாக பரிமேலழகர் சொல்லும் எட்டுக்குணங்களும் வேறுவேறாக உள்ளன. இதன் காரணம் அறியப்படவில்லை. குறளுக்குச் சைவ சமய சார்பு கொண்டு உரை எழுதியதாகக் கருதப்படும் பரிதி கூறும் எட்டுக்குணங்களும் சமணசமயத்தில் கண்டுள்ள எண்குணங்களை ஒட்டிவருகின்றன என்பது வியப்பளிக்கிறது. பரிமேலழகர் சுட்டும் சைவ சமய ஆகமம் எது என்பதும் தெரியவில்லை.
காலத்தால் குறளுக்கு மிகவும் பின்பட்ட தேவாரம்தான் முதன்முதலில் சிவனை எண்குணத்தான் என்று கூறுகிறது; அதற்குமுன் சிவனை இவ்வடை கொண்டு யாரும் குறிப்பிடவில்லை; எனவே இக்குறள் குறிப்பிடுவது சமணக் கடவுளே என்பது சமணர்கள் வாதம்.
இன்னும் சில உரையாளர்கள் இறைவனுக்குரியதாக இவற்றினின்றும் வேறுபட்ட எட்டு எட்டு குணங்களை கூறியுள்ளனர். அவற்றில் சில:
பயனின்மை, பிறவியின்மை, பற்றின்மை, பேரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவில் அறிவுடைமை, கோத்திரமின்மை ஆகிய எட்டு (பழைய உரை);
அன்பு, அறிவு, பணிவு, ஒழுக்கம், இன்சொல், வீரம், அறம், புகழ் ஆகிய எட்டு (இறையரசன்) ;
ஆதிபகவன்,. வாலறிவன், மலரிமிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், ஐந்தவித்தான், தனக்குவமை யில்லாதான், அறவாழி அந்தணன் ஆகிய எட்டு (அ கு ஆதித்தர்);
மெய்யுணர்வு, (வாய்மையால்) உலகோர் உள்ளத்தில் இடம் பெற்றமை, ஐம்பொறிகளின் நுகர்வாயில்களை அழித்தமை, (பற்றறுப்பு) அவாவின்மை, பேரா இயற்கை பெற்றமை, தன்னிகரற்ற தன்மை, இறைமை, செந்தண்மையுடன் கூடிய அறம் ஆகிய எட்டு (கு ச ஆனந்தன்).

இரண்டாவது வகையான விளக்கம் சொல்பவர்கள் எண்குணத்தான் என்பது 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள்படும் என்பர். இவர்கள் எண்பொருள வாகச் செலச்சொல்லி............. (குறள் 424: பொருள்: எளிய பொருள் ஆகுமாறு மனம்கொளச் சொல்லி......), எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன்............ (குறள் 548:பொருள்: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்........ }, எண்பதத்தால் எய்தல் எளிதென்ப........(குறள் 991: பொருள்: எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது} என்று கூறுவர்.........) ஆகிய குறட்பாக்களைச் சான்றாகக் காட்டி இவற்றில் 'எண்' எளிய என்ற பொருளில் ஆளப்பட்டதைச் சுட்டுவர். இவர்கள் கூற்று அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன் என்பது. எளிமையுடையவன் என்பதற்கு அணுகுதற்கு எளியவனாகி அன்பர்கள் குறைகளைச் செவிமடுப்பவன் எனவும் கொள்ளலாம்.

மூன்றாவது வகையினர் எண்குணத்தான் என்பதற்கு 'எண்ணப்பட்ட குணங்களை உடைய' இறைவனைக் குறிக்கும் என்பர். காலிங்கர் முதலில் இக்கருத்தை முன்வைத்தார். பிற பழைய உரையாசிரியர்கள் கொண்ட பொருள்களிலிருந்து வேறுபட்டது இவ்வுரை. அன்பர்கள் எண்ணும் அல்லது நினைக்கும் குணங்களையுடையவன் என்ற பொருள் தருவது. இதை எண்ணத் தகுந்த, பாராட்டத்தக்க குணங்களை உடையவன் என்றும், பலகாலும் எண்ணி எண்ணி இன்புறத்தக்க குணங்கள் கொண்டவன் என்றும், எல்லாரும் எண்ணத் தகும் குணமுடையவன் என்றும், மாந்தர்கள் இறைவனது பெருமைகளை எண்ணி முயன்று அக்குணங்களைப் பெறவேண்டும் என்றும் விளக்குவர்.
காலிங்கர் கொண்ட பொருளுக்கு இறைவன் குணவடிவினன், அன்பர்கள் எண்ணும் குணவடிவை ஏற்பவன் என்பன சிறந்த விளக்கங்கள் ஆகலாம்.

எட்டுக் குணங்கள் என்று கூறப்பட்டவற்றுள் பெரும்பான்மை சமயக் கருத்துக்களே. இவை தவிர்த்து, மற்ற வேறுவகையான எட்டுக் குணங்களும் கூறப்பட்டன.
எட்டுக்குணங்கள் கொண்ட இறைவன் என்று பொருள் கொள்வது சரியா? இறைவனுக்கு எண்ணி எட்டே எட்டு குணங்கள்தானா? எட்டுக் குணங்கள் கொண்டவன் என்று கடவுளை ஒரு எல்லைக்குள் கொண்டுவர முடியுமா? இறைவன் எண்ணிக்கையில் அடங்குதற்கரிய குணங்களை உடையவன் அல்லவா? சமயக் கடவுளரை வள்ளுவர் குறளில் எங்கும் கூறவில்லை என்பது திண்ணம். இப்பாடலிலும் சமயமோ சமயக் கடவுளோ இல்லை. சமயம் சார்ந்த எட்டுக் குணங்கள் ஏற்காது. இறைவனது குணங்கள் எந்த எண்ணிக்கையுள்ளும் அடங்கா என்பதால் கு ச ஆனந்தன் போன்றோர் கூறிய எட்டுக்குண உரைகளும் மற்றபிற எட்டுக்குண உரைகளும் தள்ளத்தக்கனவே.
எளிமையான குணங்களும் எண்ணுங் குணங்களுள் அடங்கிவிடுவதால் எண்குணத்தான் என்பதில் உள்ள எண் என்பதற்கு எண்ணுப் பெயராகக் கொள்ளாமல் நினைக்கும் அதாவது எண்ணும் குணங்களையுடயவன் என்று கொள்வதே பொருத்தமாக அமையும்.

எண்குணத்தான் என்பதன் பொருள் எண்ணும் குணங்களுடைய இறைவன் என்பதாம்.

மாந்தர் எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை என்பது இக்குறட்கருத்து.

 

 முழுப்பணிவுடன் கடவுள் வாழ்த்துக் கூறுக.

 

பொழிப்பு

எண்ணும் பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் கடவுளின் அடியை வணங்காதவர்களின் தலைகள் புலன்கள் இல்லாப் பொறிகளைப் போல் உணர்வற்றவை.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 5%2BKrl%2B09%2B%2BKolil%2Bporiyir%2BEnku



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard